வெல்லட்டும் ஷாநவாஸ்! - வி.களத்தூர் சனா பாரூக்


அரசியல்வாதி, அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர், பேச்சாளர், ஆவணப்பட இயக்குனர், செயல்பாட்டாளர், பத்திரிக்கையாளர், ஊடக விவாதங்களில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை விதைப்பவர், விடுதலைச் சிறுத்தைகளின் துணை பொதுச் செயலாளர் என பன்முகம் கொண்டவர் ஆளூர் ஷாநவாஸ்.  

மக்கள் நலக் கூட்டணியின் 'வித்தான' விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் ஷாநவாஸ். குன்னம் தொகுதி திருமாவளவனின் சொந்த தொகுதி. விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அமைப்பு ரீதியாக பலம் உள்ள மிக முக்கியமான தொகுதி. அப்பேற்பட்ட தொகுதியில் தனது நம்பிக்கைக்குரியவரான ஷாநவாசை நிறுத்தியிருக்கிறார் திருமாவளவன்.

ஷாநவாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்து குன்னம் தொகுதி பலராலும் கவனிக்கப்படுகிறது. கட்சிகள் சார்பின்றி அவர் வெற்றிபெற வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு அதரவு கூடிக்கொண்டே செல்கிறது. கட்சிகளை கடந்து வெற்றிபெற வேண்டிய வேட்பாளர்கள் பட்டியலில் ஷாநவாசுக்கும் முக்கிய இடம் உள்ளது.  குன்னம் தொகுதியை பொருத்தவரையில் திமுக-விசிக விற்குதான் நேரடிப்போட்டி. அதிமுக அங்கு களத்திலேயே இல்லை எனலாம். ஒடுக்கப்பட்ட மக்கள் பெருவாரியாக வாழ்கிறார்கள். முஸ்லிம்கள் குறிப்பிடத்தகுந்த அளவில் இருக்கிறார்கள். குறிப்பாக லப்பைக்குடிக்காடு நகரம் முஸ்லிம்கள் நிறைந்த நகரம். அவர்கள் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஷாநவாஸ் க்கு வாக்களித்தால் மிகப்பெரிய அளவில் எளிதான வெற்றிபெற்று விடுவார். ஆனால் அதுபோல் ஒட்டுமொத்தமாக முஸ்லிம்கள் வாக்கு கிடைப்பது கடினம்தான். திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளை வைத்து அந்த வாக்குகளை திமுக பெறவே அதிகம் முயலும்.

ஷாநவாஸ் துடிப்புமிக்க இளைஞர், பல்வேறு தளங்களில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பவர். மாணவப் பருவம் தொட்டே சமூக பணிகளில் ஈடுபட்டு வருபவர். இவரது சேவைகளை பாராட்டி இளைய ஊடக செயல்பாட்டாளர் விருது, இளம் பிறை விருது, இளைய எழுத்தாளர் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. "குருதியில் நனையும் காலம்" உள்பட சில புத்தகங்கள் எழுதியுள்ளார். தமிழக அரசியலின் புதிய முகமாக மூன்று பேர்களில் ஒருவராக ஷாநவாசையும் தேர்ந்தெடுத்தது இந்து பத்திரிக்கை.

போராளி. அப்துல் நாசர் மதானி குறித்தான  "கைதியின் கதை" ஆவணப்படம் மூலமே மதானி என்ற போராளியை அறிந்தேன். ஷானவாசையும்தான். மதானி சிறை வாழ்க்கை, அவருக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி, நீதி மறுப்பு, என அவரின் சிறை வாழ்க்கையை வெகுஜனத்தில் கொண்டுவந்தது அந்த ஆவணப்படம். நீதியரசர். வி.ஆர்.கிருஷ்னய்யர், திருமாவளவன், அ.மார்க்ஸ் போன்ற மனித உரிமையாளர்கள் மதானியை விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் எழுப்பி இருப்பார். 

அதில் ஷாநவாஸ் அரும்பு மீசையுடன் தோன்றி இருப்பார். இந்த இளைய மனிதரா இந்த படத்தை இயக்கினார் என ஆச்சரியப்பட்டு போனேன். அவரை தொடர்ந்து நோக்குகிறபோது ஷாநவாஸ் அதை விட பல வருடங்களுக்கு முன்பிருந்தே சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதை அறிந்தேன். மாணவராக இருந்தபோதே குமரி மாவட்ட தமுமுகவில் மாவட்ட மாணவ அணி பொறுப்பாளராக பணியாற்றியுள்ளார். அதன்மூலம் கிடைத்த நட்பை வைத்து ஒற்றுமை, உணர்வு போன்ற இதழ்களில் தொடர்ந்து பல்வேறு சமூகம் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்தார். பல்வேறு பட்ட தலைவர்களை சந்தித்து பேட்டி கண்டார். அது அந்த இதழ்களில் முக்கிய இடத்தை பெற்றது. வாசகர்களின் வரவேற்பையும் பெற்றது. 

மீடியா வேர்ல்ட், வின் டிவி செய்திவாசிப்பாளர் (இந்த வார செய்திகள்) பொறுப்பேற்று திறம்பட செயலாற்றினார். CMN சலீம் அவர்களுடன் பல்வேறு ஊடக பதிவுகளில் இணைந்து நின்றார். அச்சு ஊடகத்திலும், காட்சி ஊடகத்திலும் இளம் வயதிலேயே பிரகாசித்தார். தனது தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்டார். மென்மேலும் சிந்தனைகளை வளர்த்துகொண்டார். 2002 ல் இலங்கையில் இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்டார். அதுதான் அவரின் முதல் வெளிநாட்டு பயணம். அந்த மாநாட்டிற்கு வந்திருந்த அப்துல் ரகீம் உள்பட சில முஸ்லிம் தலைவர்களை பேட்டி கண்டார்.

குஜராத் இனப்படுகொலைக்கு எதிராக பல்வேறு கவிஞர்களிடம் கவிதைகளை எழுதி வாங்கி "தோட்டாக்கள்" என்ற நூலாக தொகுத்து வெளியிட்டார். அது வெகுதளத்தில் பாரிய வரவேற்பை பெற்றது. சமநிலைச் சமுதாயம் இதழில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதினார். வைகோ பொடாவிலிருந்து வெளியே வந்த பிறகு அவரை நேரில் சந்தித்து பேட்டி எடுத்தார். அது அந்த இதழின் முகப்பு படத்துடன் வெளிவந்து வாசகர்களிடம் வரவேற்பை பெற்றது. 2005 ல் ஜெயா டிவியில் தியாகத் திருநாள் சிறப்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பிறகுதான் பல்வேறு தொலைகாட்சிகளும் இஸ்லாமிய பண்டிகைகளில் சிறப்பு நிகழ்சிகளை வெளியிட்டன.

2006 ல் இடஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்தும் "பிறப்புரிமை" என்ற குறும்படம் இயக்கினார். இது பலரது கவனத்தை பெற்றது. இடஒதுக்கீட்டின் அவசியத்தை வலுவாக பதிவு செய்தது. காயிதே மில்லத், இசை முரசு நாகூர் ஹனிபா குறித்தான ஆவணப்படம் எடுப்பதில் தொடர்ந்து பணியாற்றியுள்ளார். தாழ்தப்பட்ட மக்களும், இசுலாமிய மக்களும் அரசியல் ரீதியாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் சென்று ஊடகம், அரசியல், கல்வி மேம்பாடு என பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களை செய்து வருகிறார்.

இன்றைய தமிழக அரசியலில் இளைஞர்களுக்கு ஒரு நம்பிக்கையூட்டும் முகமாக தெரிகிறார் ஷாநவாஸ். அவரை போன்ற செயல்பாட்டாளர்கள் அதிகாரத்திற்கு வருவது இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையும். "குரலற்றவர்களின் குரலாக ஒலிப்பதே என் அரசியல், ஆதிக்கமற்ற உலகை அடையவே எனது பயணம், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையே எனது இலக்கு" என வரையறுத்து செயல்படும் ஷாநவாஸ், குன்னம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்றால் குரலற்றவர்களின் குரலை சட்டமன்றத்தில் உரக்க எழுப்புபவராக திகழ்வார்.

- வி.களத்தூர் சனா பாரூக்
வெல்லட்டும் ஷாநவாஸ்! - வி.களத்தூர் சனா பாரூக் வெல்லட்டும் ஷாநவாஸ்!  - வி.களத்தூர் சனா பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 04:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.