உள்ளாட்சி தேர்தல் - தயாராகும் கட்சிகள்! - வி.களத்தூர் எம்.பாரூக்


தமிழக சட்டமன்ற தேர்தல் புயல் தற்போதுதான் ஓய்ந்தது. மீண்டும் ஒரு தேர்தல் புயல் சுழல காத்து இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் முடிந்து சில மாதங்களில் உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது தமிழகத்தில். பரப்பரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16 அன்று நடைபெற்றது. பல அணிகள் போட்டியிட்ட அந்த தேர்தலில் அதிமுக 134 இடங்கள் பெற்று அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்தது. ஆட்சியை பிடிக்க போகும் கட்சியாக பல ஊடகங்களால் சொல்லப்பட்ட திமுக 89 (கூட்டணியுடன் 98) இடங்களை பெற்று பெரிய எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.

புதிய அரசு அமைந்தபிறகு தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உள்ளாட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவி காலம் வரும் அக்டோபர் மாதத்துடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தலை நடத்திட தேர்தல் ஆணையம் விரும்புகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் பங்கேற்பதற்கான தயாரிப்பு பணிகளில் ஈடுபட துவங்கிவிட்டன. ஒவ்வொரு கட்சியிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும், கட்சிகளின் நகர்வுகளையும் கவனிக்கும் போது உள்ளாட்சி தேர்தல்களை எதிர்கொள்வதற்கான சமிஞ்கைகள் தெரிகின்றன.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக தனது அமைப்புகளில் பெரிய மாறுதல்களை செய்துள்ளது. பல நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி தேர்தலுக்குள் தனது அரசின் ஏதாவது ஒரு திட்டமாவது ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றிருக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. முடிந்த அளவிற்கு தேர்தலை சில காலம் தள்ளிவைக்க விரும்புகிறது. அதற்குள் ஒரு சில பலகீனங்களையும், மக்களிடையே ஆட்சியின் மீது இருக்கும் சில கசப்புகளையும் நீக்குவதற்கு முயல்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் மிகவும் போராடித்தான் அதிமுக வென்றது. பல இடங்களில் ஆளும் அரசிற்கு எதிரான மக்களின் எதிர்ப்பை அது சந்தித்தது. குறிப்பாக சென்னையில் மிகப்பெரிய சேதத்தை அதிமுக சட்டமன்ற தேர்தலில் சந்தித்தது. இதன் தாக்கம் தொடர்ந்தால் சென்னை மாநாகராட்சியை திமுக கைப்பற்றி விடுமோ என்று ஐயப்படுகிறது. ஒரு சில மாதம் தேர்தல் தள்ளி போனால் அதற்குள் பலகீனமாக இருக்கும் இடங்களில் வலுவாகி விடலாம் என்று நினைக்கிறது. உள்ளாட்சி தேர்தல் முடியும் வரையில் மக்களிடம் கேட்ட பெயர் ஏற்படாதவாறு அமைதியாக செயல்பட முடிவு செய்துள்ளது.

திமுகவிற்கு ஆட்சி கனவு கலைந்தாலும் பெரிய எதிர்கட்சியாக இருப்பதால் அதிக அளவிலான இடங்களில் வெற்றியை பெற வேண்டும் என திட்டங்களை போட்டு செயல்பட ஆரம்பித்து விட்டது. அதற்கேற்றாற்போல் கட்சிகளில் சில மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் சரியாக வேலை செய்யாதவர்களை களையெடுத்துவிட்டு, புதிய தெம்புடன் களம் இறங்க முடிவு செய்துள்ளது. இதற்கு முன் மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற கடுமையான செயல்களில் திமுக ஈடுபட்டது இல்லை. அதனால் இதுபோன்ற முயற்சியை உள்ளாட்சி தேர்தலுக்குள் முடிக்க திட்டமிடுகிறது. அப்போதுதான் இந்த முடிவு பாராளமன்ற தேர்தலில் அதற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்று எண்ணுகிறது. அதன் முன்னோட்டமாகத்தான் சமீபத்தில் 3 மாவட்ட செயலாளர்களை நீக்கி இருக்கிறது. தினமும் அரசின் தவறுகளை சுட்டிக்காட்டும் அறிக்கை வாயிலாக மக்களின் கவனத்தை பெற முயன்று வருகிறது. 

இரு பெரிய கட்சிகளை தவிர்த்து மக்கள் நலக் கூட்டணி, பாஜக, பாமக, நாம் தமிழர் போன்ற கட்சிகளும் சட்டமன்ற தேர்தலை போல் தனித்து களம் காணவே முயல்கின்றன. அதற்கான செயல்திட்டங்களை அந்தந்த கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதில் மக்கள் நலக் கூட்டணியில் உள்ள தேமுதிக, தமாகா கட்சிகளில் சில நிர்வாகிகள் அந்த கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை வைத்தாலும் தனித்து நிற்பதைவிட அக்கூட்டணியில் இருந்தால் கூடுதலாக சில இடங்களில் வெற்றி பெறலாம் என்பதால் அக்கூட்டணி  உள்ளாட்சி தேர்தலிலும் தொடரவே வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

2011 உள்ளாட்சி மன்ற தேர்தலை பொறுத்தவரையில் அதிமுக அதிகமான இடங்களில் வெற்றி பெற்றன. 12 மாநகராட்சிகளில் அனைத்திலுமே அதிமுகவே வென்றன. நகராட்சியில் அதிமுக 89 இடங்களிலும், திமுக 23 இடங்களிலும், சுயேச்சைகள் 5 இடங்களிலும், தேமுதிக, பாஜக, மார்சிஸ்ட் 2 இடங்களிலும், மதிமுக 1 இடத்திலும் வெற்றி பெற்றன. 

பேரூராட்சியில் அதிமுக 285 இடங்களிலும், திமுக 121 இடங்களிலும், சுயேச்சைகள் 64 இடங்களிலும், தேமுதிக 3 இடங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும், பாமக, இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களிலும், பாஜக 13 இடங்களிலும், மதிமுக 7 இடங்களிலும், மார்க்சிஸ்ட் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. 

ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், கிராம ஊராட்சி உறுப்பினர்கள் என அனைத்து இடங்களிலுமே அதிமுக, திமுகவே ஆதிக்கம் செலுத்தின. அவர்களுக்கு அடுத்த இடத்தை சுயேச்சைகள் பிடித்தனர். மொத்தமாக அதிமுக 9864 இடங்களிலும், திமுக 4059 இடங்களிலும், சுயேச்சைகள் 3322 இடங்களிலும், காங்கிரஸ் 740 இடங்களிலும், தேமுதிக 857 இடங்களிலும், பாமக 400 இடங்களிலும், பாஜக 270 இடங்களிலும், மதிமுக 193 இடங்களிலும் வெற்றிபெற்றது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அதிமுக 39.02%, திமுக 26.09 % பெற்றது. 

கடந்த உள்ளாட்சி தேர்தல் காலத்தில் அதிமுக வலிமையுடனும், திமுக வலுவிழந்தும் காணப்பட்டது. 2011 சட்டமன்ற தேர்தல் முடிவு இதை நன்கு உணர்த்தியது. திமுக எதிர்கட்சியாக கூட தேர்வு பெறாமல் போனது. அதனால் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக பெற்றதை விட பாதிக்கும் குறைவான இடங்களில் மட்டுமே திமுக வென்றது. ஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை. அதிமுகவும், திமுகவும் சம வலிமையுடன் உள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலில் வாக்குகளின் அடிப்படையில் 1.1% மட்டுமே அதிமுக அதிகம் பெற்றுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்களின் அடிப்படையில் 36 உறுப்பினர்களே திமுகவைவிட அதிகம் பெற்றிருக்கிறது அதிமுக.

அதனால் இந்த உள்ளாட்சி மன்றத்தேர்தல் இருகட்சிகளுக்கும் கடும் போட்டியாக இருக்கும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிமுகவைவிட, திமுக எப்போதும் முக்கியத்துவம் கொடுக்கும். உள்ளாட்சி மன்றங்கள் தேவை இல்லை என்று கலைத்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் அதற்கு எதிர்மாறாக அதற்கு பல அதிகாரங்களை கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. அதேபோல் கட்சியில் இருக்கும் அனைவர்களையும் சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளமன்ற உறுப்பினராகவோ ஆக்க முடியாது. அதனால் அவர்களுக்கு உள்ளாட்சி மன்றங்களில் பதவிகளை கொடுத்து அவர்களை தக்க வைப்பதற்கும், கட்சியை உயிர்ப்பாக வைத்திருப்பதற்கும் அவர் உள்ளாட்சி மன்றங்களை பயன்படுத்திக் கொள்வார். ஜெயலலிதா எல்லா துறையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தவே விரும்புவார். அந்த வகையில் உள்ளாட்சி மன்றங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கான கைப்பற்றுவதற்கான முஸ்தீபுகளில் அவர் இறங்கியுள்ளார்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்படுகிற பிரதிநிதிகளால்தான் உள்ளாட்சி மன்றங்கள் இயங்குகின்றன. மத்திய அரசு, மாநில அரசு செயல்படுத்தும் எந்த ஒரு திட்டமும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமே மக்களை சென்றடைகின்றன. அதனால் அவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க எல்லா கட்சிகள் விரும்புகின்றன.

வரக்கூடிய உள்ளாட்சி மன்ற தேர்தல் முன்பை விட கடுமையானதாக இருக்கும் என தெரிகிறது. அதற்கு ஏற்றார் போல கட்சிகளும் பெரிய திட்டங்களுடன் களம் இறங்க இருக்கின்றன. யார் எப்படி என்ன மாதிரியான திட்டங்களுடன் செயல்பட்டாலும் தீர்ப்பை வழங்கும் நீதிபதிகளான மக்களின் செயல்திட்டங்களே இறுதியில் வெற்றி பெற போகின்றன.

- வி.களத்தூர் எம்.பாரூக்
உள்ளாட்சி தேர்தல் - தயாராகும் கட்சிகள்! - வி.களத்தூர் எம்.பாரூக் உள்ளாட்சி தேர்தல் - தயாராகும் கட்சிகள்! - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 05:01:00 Rating: 5

No comments:

Powered by Blogger.