தலித்களும், இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டும்! - வி.களத்தூர் எம்.பாரூக்



சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்க கூடிய தோழர்களே, சகோதரர்களே உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். சரியானதொரு காலத்தில் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவிற்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தேசம் இன்று எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. நம் தேசத்தில் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று நாம் நன்றாக உற்று நோக்குகிறபோது மனிதகுலத்திற்கு விரோதமான பாசிசத்தை நோக்கி மிக வேகமாக நகர்ந்து கொண்டிருப்பது தெளிவாகிறது. அறிவிக்கப்பாடாத நெருக்கடி நிலை அமலாகி இருக்கிறதோ என்று என்னும் அளவிற்கு தற்போது பல நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக தலித்துகளும், இஸ்லாமியர்களும் பல்வேறு வாழ்நிலை நெருக்கடிகளை சந்தித்து வருகிறார்கள். பல வருடங்களாக பல ஒடுக்குமுறைக்கு இந்த சமூகங்கள் ஆளாகி வந்தாலும், சமீப காலங்களில் இந்த பிரச்சனைகள் தீவிரமடைந்துள்ளது. கோவிலில் நுழைந்ததாக தலித் முதியவர் எரித்து கொல்லப்படுகிறார். கோவிலில் விளையாடியதற்காக தலித் சிறுவன் அடித்து துரத்தப்படுகிறார். இறந்து போன மாட்டின் தோலை உறித்ததிற்காக நான்கு தலித்களை படுகொலை செய்கிறார்கள். ஆவணப்படுகொலைகள் இந்திய தேசம் முழுவதும் அதிகரித்து  வருகின்றன. சமூக நீதி மண் என்று சொல்லப்படுகிற தமிழகத்தில்கூட கடந்த மூன்று ஆண்டுகளில் 84  ஆவணப் படுகொலைகள் நடந்திருப்பது நம்மை வருத்தமடைய செய்கிறது. தலித் மக்களின் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக பல அறிக்கைகள் சுட்டி காட்டுகின்றன. "உலகிலேயே அதிகமாக கொடூரங்களை சந்திப்பவர்கள் இந்திய தலித்துகள்தான்" என்று ஆய்வாளர் ரஷ்டி பல ஆய்வுகளை செய்து கூறுகிறார். சமீபத்தில் மும்பையில் டாக்டர். அம்பேத்கர் பவன் இந்துத்துவவாதிகளால் இடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று சொல்லிக்கொண்டே போகலாம். 

தலித் மக்கள் சந்திக்கும் அதேபோன்ற பிரச்சனைகளை இஸ்லாமியர்களும் சந்தித்து வருகிறார்கள். இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலையை அறிய அமைக்கப்பட்ட நீதியரசர் சச்சார் ஆணையம் இஸ்லாமியர்களின் வாழ்நிலைகளை வெளிச்சம் போட்டு காண்பித்தது. "இந்தியாவில் முஸ்லிம்கள் தலித்துகளின் நிலையை விட கீழான நிலையில் வாழ்கிறார்கள்" என்று அந்த அறிக்கை கூறியது. குறிப்பாக "வட மாநிலங்களில் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் இருக்கக்கூடிய இடங்களில்தான் இஸ்லாமியர்கள் வாழ தள்ளப்பட்டுள்ளார்கள்" என பகிரங்க படுத்தியது. முடிவில் இஸ்லாமியர்களை முன்னேற்றுவதற்கான பல பரிந்துரைகளை செய்தது. அதில் எதையும் கண்டுகொள்ளாத மத்திய அரசு ஆணையத்தின் பரிந்துரைகளை வழக்கம்போல் கிடப்பில் போட்டுவிட்டது.

கூடுதலாக கலவரங்கள் மூலம் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்படுவதும், பொருளாதார சேதம் ஏற்படுத்துவதும், தீவிரவாத குற்றச்சாட்டு மூலம் அச்சுறுத்துவதும் என அடக்குமுறைகள் தினமும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் வாழும் மிகப்பெரிய சமூகங்களான பல்வேறு தியாகங்களை செய்த தலித்களும், இஸ்லாமியர்களும் இன்று பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் சூழலில் இணைந்து செயல்படவேண்டியது அவசியமாகிறது. அதற்கான களத்தை நாம் இணைந்து மேற்கொள்ள வேண்டும். "நமக்கெதிராக போடப்பட்டுள்ள எல்லாப் பூட்டுகளையும் திறப்பதற்கு ஏற்ற திறவுகோல் அரசியல் அதிகாரமே" என்றார் அண்ணல் அம்பேத்கர். இருக்கும் அதிகாரங்களிலேயே உச்சப்பட அதிகாரமாக இருக்கும் அரசியல் அதிகாரத்தை நோக்கி நாம் இணைந்து முன்னேற வேண்டும்.

அதேபோல் அரசியல் அதிகாரம் பெறுவது மட்டுமே நமது பாதை என்றில்லாமல் சமூக களத்திலும் மாற்றத்தை ஏற்படுத்த விழிப்புணர்வு பணிகளில் தீவிரமாக செயல்பட வேண்டும். "உங்கள் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுங்கள், உங்கள் ஆற்றல்களை ஒன்று திரட்டுங்கள்" என்று அண்ணல் அம்பேத்கர் சொன்னது போல நமது போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். 

"இதயமும், மூளையும் இணைந்து செயல்பட வேண்டும். உங்கள் அறிவைக் கூர்மையாக்கி அரசியல் உரிமைகள், சலுகைகள் ஆகியவற்றின் எல்லையை விரிவாக்கிக் கொள்ளவேண்டும்" என்ற அண்ணல் அம்பேத்கர் சொல்லுக்கேற்ப தலித்துகளும், இஸ்லாமியர்களும் இதயமும், மூளையாக இணைந்து செயல்பட வேண்டும்.

இந்த நேரத்தில்தான் புரட்சியாளன் மால்கம் எக்ஸ் ன் "நமது போராட்டத்தை நாமே நடத்துவோம்" என்ற எழுச்சி முழக்கம் நினைவு  வருகிறது. நமது போராட்டத்தை நாமே இணைந்து நடத்துவோம். இந்திய அளவிலும், தமிழகம் அளவிலும் பாப்புலர் ப்ரண்ட் அமைப்பும், SDPI கட்சியும் நடத்தும் எல்லா போராட்டங்களும், கூட்டங்களும் இஸ்லாமிய அமைப்பினர், தலித்திய அமைப்பினர், பெரியாரிய அமைப்பினர், பொதுவுடமை அமைப்பினர், மனித உரிமை ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என அனைத்து தோழமை சக்திகளோடுதான் நடத்துகின்றன. 

அதேபோல் நமது பகுதிகளிலும் நாம் இணைந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற கூட்டங்கள் அடிக்கடி நடைபெற வேண்டும். அப்போதுதான் நம்மை கருத்தியல் ரீதியாக இணக்கம் காண முடியும். பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா பல நிகழ்ச்சிகளை இந்த பகுதிகளில் நடத்துகிறது. வரக்கூடிய காலங்களில் அதில்  எல்லாம் தோழமை சக்திகளை அழைத்து இணைந்து நடத்த  வேண்டும். அதேபோல் இங்கு பங்கேற்றிருக்கும் தோழர்களும் தங்கள் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு இஸ்லாமிய அமைப்பினை அழைத்து இணைத்து செய்யவேண்டும்.

குறைந்தது அண்ணல். அம்பேத்கர் பிறந்தநாள், மறைந்த நாள் நிகழ்ச்சிகளுக்காவது அழைப்பு கொடுக்க வேண்டும். அண்ணல். அம்பேத்கர் ஏதோ ஒரு சமூகத்தின் தலைவர் மட்டுமல்ல. "எங்கெல்லாம் அநீதிகள் இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இருப்பான் இந்த சே" என்று சேகுவேரா கூறியது போல எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் அண்ணல். அம்பேத்கர் தேவைப்படுகிறார். அவர் எதிர்ப்பு போராட்டத்தின் அடையாளம். தோழர்களே இனிவரும் காலங்கள் நமக்கு பல நெருக்கடியான காலமாக இருக்க போகிறது. 

அதை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக வேண்டும். ஆகவே தலித்துகளும், இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையோடு நிறைவு செய்கிறேன். நன்றி!

(02.07.2016 அன்று வி.களத்தூரில் பாப்புலர் ப்ரண்ட் அமைப்பு நடத்திய "சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி" யில் நான் பேசியது)

- வி.களத்தூர் எம்.பாரூக்
தலித்களும், இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டும்! - வி.களத்தூர் எம்.பாரூக் தலித்களும், இஸ்லாமியர்களும் இணைந்து செயல்பட வேண்டும்! - வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 01:05:00 Rating: 5

No comments:

Powered by Blogger.