ஸ்பாட் ரிப்போர்ட்: வெற்றியை நோக்கி நெடுவாசல் போராட்டம்!

பதினாறாவது தினமாக நெடுவாசல் கிராம மக்கள் கொட்டும் மழையில் அமர்ந்தபடி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நேற்று முழுவதும் போராடிக் கொண்டிருந்தார்கள். நெடுவாசல் கிராமத்துக்குச் செல்ல பல வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசல் நுழைவிலும் காவல் துறையினர் காவல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு சாலையிலும் அரசியல் கட்சியினரின் வாகனங்கள் நெடுவாசலை நோக்கிப் பறந்து கொண்டிருக்கின்றன. மழை பொழிந்து கொண்டிருக்க நாம் மின்னம்பலம் குழு மழையில் நனைந்தபடியே நெடுவாசல் கிராமத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தது. கொட்டும் மழையிலும் போராட்டத்தில் பங்கெடுக்க சாதாரண குடிமகன் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள் வரை நெடுவாசல் கிராமத்தை நோக்கிச் செல்வதைக் காண முடிந்தது. எங்கிருந்தோ உத்வேகத்தோடு போராட்டக் களத்துக்கு புறப்பட்டுவரும் இளைஞர்களையும் யுவதிகளையும் காண முடிந்தது. முதுகிலே சிறிய பை. முகத்திலே தீவிரம் என இளைஞர்கள் எழுச்சியோடு போரட்ட களத்துக்குள் நுழைகிறார்கள். மழை விடாமல் பொழிந்துகொண்டிருக்க போராட்டக் களமான நாடியம்மன் கோயில் வாசல் சேரும் சகதியுமானது. உடனே அங்கே தார்ப்பாய் விரிக்கப்பட்டது. அமர்வதற்கு ஏதுவாக இருக்கைகளும் போடப்பட்டன. நெடுவாசல் கிராமத்துக்கு போராட வரும் மக்களுக்கு உணவு ஒருபுறம் தயாராக இருந்தது. எந்த நேரத்தில் கேட்டாலும் உணவு கிடைக்கும்வகையில் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருக்கின்றன. சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என தயார் செய்யப்பட்ட உணவை நாமே எடுத்து உண்ணும் அளவுக்கு விஸ்தாரமான இடத்தில் ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகிறார்கள் நெடுவாசல் கிராம மக்கள்.
மழை விட்டுவிட்டு பொழிந்தாலும் போராட்டக் களத்தை விட்டு மக்கள் அகலவில்லை. தொடர்ந்து யாராவது ஒருவர் ஒலிபெருக்கியில் முழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். போராட்டக் களத்தில் முக்கியமான சில கட்டுப்பாடுகளும் நெறிமுறைகளும் பின்பற்றுவதை நம்மால் காண முடிந்தது. அதாவது, போராட்டக் களத்தில் முழங்கும் யாரும் எந்தக் கட்சியினரைப் பற்றியும் இழிவு செய்யும்விதமாகவோ, தனி நபரைத் தாக்கும்விதமாகவோ பேசக் கூடாது. அதேபோல் எந்த ஒரு அரசியல் கட்சியையும் புகழ்பாடும்விதமாக பேசக் கூடாது. இதை ஒருவரிடம் மைக் கொடுக்கும் முன்பே வெளிப்படையாக போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துவிடுகிறார்கள்.
இந்தப் போராட்டத்தை நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் குழுக்கள் திறம்பட நிர்வகித்து வருகின்றன. குறிப்பாக, நெடுவாசல் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட திரைப்பட பின்னணிப் பாடகர் செந்தில்தாஸ் மற்றும் கௌதமன், நீலவன் போன்றோர் போராட்டத்தை வழிநடத்துகிறார்கள். ஒலிபெருக்கியில் பேசும் யாராது எந்த அரசியல் கட்சித் தலைவரையாவது தாக்கிப் பேசினால் விழிப்போடு இருக்கும் இவர்கள், உடனே இடை மறித்து தங்கள் நிபந்தனையை மீண்டும் நினைவூட்டுகிறார்கள். அதேபோல், யார் போராட்டக் களத்துக்கு வருகைதந்தாலும் அவர்களுக்கு ஒரே மாதிரியான வரவேற்பும் மரியாதையும் தருவதையும் காண முடிந்தது.
இந்நிலையில், நேற்று காலை 11.30 மணி அளவில் தமிழக சட்டசபை எதிர்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தன் கட்சியினரோடு போராட்டக் களத்துக்கு வந்தார். மழை கொட்டிக்கொண்டிருக்க போராட்டக் களத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் பங்கெடுத்தார். அப்போது அவர் ஆற்றிய உரையிலிருந்து...
‘தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டுமென்று சொன்னால் கருணாநிதியின் பிரதிநிதியாக இந்தப் போராட்டத்துக்கு நான் ஆதரவு தர வந்திருக்கிறேன். இந்தப் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, உங்களை வாழ்த்துவதற்காக நான் வந்திருக்கிறேன். விவசாயப் பெருங்குடி மக்களைப் பொருத்தவரையில், திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களால் சிறப்பான முறையில் பல நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியிருந்த கடன் தொகை, ஒரு கோடியோ இரண்டு கோடியோ அல்ல, ஐந்து கோடியோ பத்து கோடியோ அல்ல, மொத்தம் 7,000 கோடி ரூபாய் விவசாயக் கடனை ஒரே கையெழுத்தில், கருணாநிதி அன்றைக்கு முதலமைச்சராக இருந்தபோது தள்ளுபடி செய்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
அந்த உரிமையோடும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று உங்களைச் சந்தித்து வாழ்த்துச் சொல்வதற்கு வந்திருக்கிறேன். அதுமட்டுமல்லாமல், கடந்த வாரம் டெல்லியில் இந்திய குடியரசுத் தலைவரை சந்திக்க நான் சென்றிருந்தேன். அந்த நேரத்தில் இந்த போராட்டத்தைப் பற்றி அறிந்து, புரிந்து உடனடியாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரை சந்திக்க வேண்டுமென அவரின் அலுவலகத்தில் தொடர்புகொண்டு நேரம் கேட்டேன். ஆனால் அவரைப் பார்க்கமுடியாத சூழல் ஏற்பட்டது. பின்னர் உடனடியாக இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி நான் எழுதிய கடிதத்தை அவருடைய அலுவலகத்தில் சேர்த்துவிட்டு, அதற்குப் பிறகுதான் நான் திரும்பி வந்தேன். நேற்றைய முன்தினம் அவரைப் பார்ப்பதற்காக நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, சகோதரி கனிமொழிக்கும் நேரம் வழங்கப்பட்டது. அதைப் பயன்படுத்தி, உண்மையை வெளிப்படையாகச் சொல்கிறேன், நீங்கள் போராடிக் கொண்டு இருக்கிறீர்களே இந்தப் போராட்டத்தைப் பற்றியும், உங்கள் கோரிக்கைகளை, நோக்கத்தை டெல்லியில் இருக்கும் பெட்ரோலியத் துறை அமைச்சரிடத்தில் எடுத்து சொல்வதற்காக அவர்களை நான் அனுப்பிவைத்தேன். அவர்களும் நேரிடையாகச் சென்று அமைச்சரை சந்தித்துப் பேசி, எல்லா விவரங்களையும் எடுத்துச் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, நேற்றைக்கு இந்தப் போராட்டக் குழுவினர் தமிழகத்தின் முதலமைச்சரையும் சந்தித்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்ற ஒரு செய்தியை பத்திரிகைகளில் நானும் பார்த்தேன். ஆனால் இப்போது இந்தப் போராட்டத்தில் பங்கேற்று இருக்கும் நீங்கள் எடுத்துச் சொல்லும் கோரிக்கை என்னவென்று கேட்டால், மாநில அரசு சொல்வதை நாங்கள் முழுமையாக நம்பி ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, மத்தியில் இருப்பவர்கள் சொன்னால்தான் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற உணர்வோடு நீங்கள் இருப்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்ல, கடந்த மூன்று நான்கு நாட்களுக்கு முன்னால் தமிழகத்தின் முதலமைச்சர் டெல்லிக்குச் சென்று பிரதமரை சந்தித்து இருக்கிறார். பிரதமரிடம் 23 கோரிக்கைகள் அடங்கிய ஒரு மனுவை தந்துவிட்டு வந்திருக்கிறார். நான் வேதனையோடு சொல்கிறேன், அந்த 23 கோரிக்கைகள் அடங்கிய மனுவில் இந்த நெடுவாசலில் நீங்கள் போராடிக் கொண்டிருக்கிற, உங்களுடைய பிரச்னை பற்றி சுட்டிக் காட்டப்பட்டதா என்று கேட்டால் சுட்டிக் காட்டப்படவில்லை என்பதுதான் உண்மை. அது உள்ளபடியே நமக்கு வேதனையாக இருக்கிறது. ஏன் சுட்டிக் காட்டப்படவில்லை என்பது புரியாத புதிராக, அதில் என்ன உள்நோக்கம் இருக்கிறது என்பது தெரியாமல் நாம் இருக்கிறோம். ஆனால் அதே முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்துவிட்டு வெளியில் வந்து பத்திரிகையாளர்களை சந்தித்தபோது, பிரச்னையை சுட்டிக் காட்டியிருக்கிறேன் என்று பேட்டி தருகிறார். மனுவாக அளித்த 23 பிரச்னைகளில் ஒன்றாக அது சொல்லப்படவில்லை. ஆனால் வெளியில் வந்து அப்படிச் சொன்னதாக தெரிவிக்கிறார். அவர் உண்மையாகவே சொல்லியிருந்தால் நமக்கு மகிழ்ச்சிதான். அதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் அவர் சொன்னதாக தெரிவித்த பிறகும் மத்திய அரசு இதுவரை ஒரு நல்ல முடிவை அறிவிக்கவில்லை என்பது வேதனையாக இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், உங்களுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கு வந்திருக்கக்கூடிய இந்த நேரத்தில் மத்திய அரசை நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, ஏறக்குறைய இன்றைக்கு 16வது நாளாக, எதையும் எதிர்பார்க்காமல், எதைப்பற்றியும் கவலைப்படாமல், எந்தவித அரசியல் கலப்புமின்றி, தங்கள் சுய லாபத்துக்காக இல்லாமல் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் பிரச்னையாக உள்ள இந்தப் பிரச்னையை முன்வைத்து, தொடர்ந்து நடைபெறக்கூடிய இந்தப் போராட்டத்தின் தன்மையை புரிந்து கொண்டு, இந்தத் திட்டம் நிச்சயம் வராது என்ற அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும். இந்தத் திட்டம் அனுமதிக்கப்படாது என்று முதலமைச்சர் சொல்லியிருந்தாலும், மத்திய அரசிடம் வலியுறுத்தி, இந்தப் பிரச்னையை சுட்டிக்காட்டி, மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் பணியில் மாநில அரசு ஈடுபட வேண்டுமென்று நான் மாநில அரசையும் இந்த நேரத்தில் கேட்டுக்கொண்டு, இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ள உங்களுக்கு எல்லாம் என்னுடைய நன்றியை, வணக்கத்தை, வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவிக்கும் அதே நேரத்தில், தொடர்ந்து இதே நிலை நீடிக்குமென்று சொன்னால், போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதற்கு நீங்களும் நிச்சயமாக தயாராக இருக்கிறீர்கள் என்பதை நான் உணர்ந்து கொண்டிருக்கிறேன். எனவே மத்திய, மாநில அரசுகள் விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிக்குமென நான் உள்ளபடியே எதிர்பார்க்கிறேன், நம்புகிறேன். ஒருவேளை அந்த நிலை ஏற்படாமல் போகும் சூழ்நிலையில் நீங்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்துக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை, உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை, பாராட்டுகளை தெரிவித்து, எனது உரையை நிறைவு செய்கிறேன்’ இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பிறகு ஸ்டாலின், எக்மஸ் ட்ரீ வால்வு நிறுவப்பட்ட எண்ணெய் வயலை பார்வையிட நேரில் சென்றார். அவரிடம் மக்கள் தங்கள் நிலையைச் சொல்லி குமுறினார். இதன்பிறகு அவர் புறப்பட்டுச் சென்றார்.
பிற்பகல் மூன்று மணியளவில் நெடுவாசல் போராட்டக் களத்துக்கு தன் கட்சியினரோடு பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வருகை தந்தார். அவரும் மக்களோடு மக்களாக தரையில் அமர்ந்து நெடுவாசல் மக்கள் போராட்டத்தில் பங்கெடுத்தார். அப்போது அவர் பேசியதாவது, ‘ஜல்லிக்கட்டு போராட்டத்துக்காக என் தம்பிகளும் தங்கைகளும் மெரினாவில் அமர்ந்து போராடிக் கொண்டிருந்தபோது நான் பிரதமர் வீட்டு வாசலில் அமர்ந்து போராடினேன். 60 வருட காலத்தில் யாரும் இப்படி அமர்ந்தது இல்லை. நான், என் தம்பி தங்கைகளுக்காக அமர்ந்தேன். ஜல்லிக்கட்டை நடத்த யார் யாரோ எத்தனையோ முயற்சிகள் எடுத்தார்கள். நடக்கவில்லை. ஆனால் இளைஞர்கள் கூடி போராட்டத்தை நடத்த ஆறே நாளில் தீர்வு கிடைத்தது. இதுதான் இளைஞர்களின் சக்தி. தமிழக மக்களே உங்களை ஏமாளிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வசனம் பேசினால் கைதட்டி ஏமாந்துவிடுகிறீர்கள். அடுக்கு மொழியில் பேசினால் ஏமாந்து விடுகிறீர்கள். நடித்தால் ஏமாந்துவிடுகிறீர்கள். இப்படித்தான் ஐம்பது வருடங்களாக நாம் ஏமாளிகளாக இருக்கிறோம். ஒருவர் இந்தத் திட்டத்துக்கு கையெழுத்துப் போட்டார். இன்று அவரே போராட்டக் களத்துக்கு வந்து போராடுகிறார். நான் அரசியல் பேசவில்லை. நம் வாழ்வாதாரப் பிரச்னை இது. கனடாவில் மீத்தேன் எடுக்கிறான். எங்கே எடுக்கிறான். மக்கள் வாழும் இடத்தில் இருந்து ஐநூறு கிலோ மீட்டருக்கு அப்பால் சென்று எடுக்கிறான். இங்கே போடப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறு மிக அபாயமான கிணறு. அது வெடித்தால் இந்த கிராமம் மட்டுமல்ல, இதைச் சுற்றியுள்ள பதினைந்து இருபது கிராமங்கள் அழிந்துவிடும். நான் சும்மா சொல்லவில்லை. ரஷ்யாவில் ஒரு எண்ணெய்க் கிணறு நாற்பது வருடங்களாக எரிந்து கொண்டிருக்கிறது. பிரான்ஸ், ஜப்பான் போன்ற நாடுகளில் இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சூரிய ஒளியைக் கொண்டு எரி சக்தியை தயார் செய்கிறார்கள். இது தேவையில்லாத திட்டம். நமக்கு சோறு தரும் இந்த மண் முக்கியம். நம் வருங்கால சந்ததியினருக்கு இந்த மண்ணை விட்டுச் செல்ல வேண்டும். யரோ லாபம் பெற இந்த பூமியை நாசம் செய்ய யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. இந்த பூமியில் நாம் மட்டும் வாழவில்லை. கோடிக்கணக்கான ஜீவராசிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, இந்த மண்ணை அழிக்க நமக்கு எந்த அதிகாரமோ, உரிமையோ இல்லை. தமிழ்நாடு என்றால் மத்திய அரசுக்கு இளக்காரம். இதற்கு காங்கிரஸும் விதிவிலக்கல்ல. நம் தொப்பூழ்க்கொடி உறவை முதலில் அழித்தார்கள். இப்போது நம்மையும் அழிக்கத் துணிந்துவிட்டார்கள். நம்மையும் அழித்துவிட்டால் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எனவே, நாம் இந்தத் திட்டத்தை ஒருபோதும் அனுமதித்துவிடக் கூடாது’ என்று பேசினார்.
அன்புமணி ராமதாஸ் புறப்பட்ட பிறகு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பல புள்ளிவிவரங்களோடு போராட்டக் களத்துக்கு விழிப்புணர்வு ஊட்டினார். அவர் பேசியபோது, ‘காவிரி டெல்டா நிலங்கள் பாதிக்கப்படவில்லை. இங்கே நிலத்தடி நீர் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறது ஓஎன்ஜிசி நிறுவனம். தஞ்சை மாவட்ட ஆட்சியரைப் பார்த்து கேட்கிறேன். இது உண்மையா? இங்கே நிலத்தடி நீர் இருக்கிறதா?. எண்ணெய்க் கிணறுகளால் டெல்டா மாவட்டம் பாதிக்கப்படவில்லையா? நான் சொல்வதில் ஏதேனும் பொய் இருக்குமானால் நான் இந்த மண்ணைவிட்டே வெளியேறிவிடுகிறேன். எங்களை அழித்துவிடாதீர்கள். உங்கள் ஆட்சி காலத்தில் நாங்கள் அழிந்தோம் என்ற அவச் சொல்லுக்கு ஆளாகாதீர்கள். 2013ஆம் ஆண்டில் எங்கள் இருள்நீக்கி அருகே வாடிய மங்களம் கிராமத்தில் எண்ணெய்க் கிணறு அமைத்தார்கள். அந்த கிராமத்தில் இருக்கும் பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் ஒரு நாள் மாலையில் திடீரென்று ஒரு அறிவிப்பு வருகிறது. இன்னும் பத்து நிமிடத்தில் இந்த கிராமம் பற்றியெரிய வாய்ப்புள்ளது. யாரும் விளக்கேற்ற வேண்டாம். சமைக்க வேண்டாம். யாரும் வீட்டுக்குள் இருக்க வேண்டாம் என்று அறிவித்தது ஓஎன்ஜிசி நிறுவனம். காரணம், எண்ணெய்க் கிணற்றில் இருந்து கட்டுக்கடங்காத அளவுக்கு எரிவாயு பீறிட்டுக் கிளம்பியதுதான். கரும்புகையோடு எரிவாயு பீறிட்டுக் கிளம்பியதை நானே கண்ணாரக்கண்டேன். அப்போது ஒஎன்ஜிசி அதிகாரிகளிடம் கேட்டேன். எப்படி இந்த எரிவாயுவை கட்டுப்படுத்தப் போகிறீர்கள் என்று. அதற்கு அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘இப்படி வாயு பீறிட்டுக் கிளம்பும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் எங்களிடத்தில் இல்லை. உங்கள் நிலைமையில்தான் நாங்கள் இருக்கிறோம்’ என்றார்கள். இப்படி ஆபத்துகளை தமிழகத்துக்கு கொண்டுவந்து சேர்க்கும் ஒஎன்ஜிசி நிறுவனத்தையே தமிழகத்தை விட்டு விரட்ட வேண்டும். இல்லையேல் இந்த நிலை தொடரும்’ என்று பேசினார்.
இந்நிலையில், பாஜக சார்பாக இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் வருகை தந்தார். இதற்கு நெடுவாசல் மக்கள் மத்தியில் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து சிறு சலசலப்பு ஏற்பட்டது. ஆனால் போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் இந்த எதிர்ப்பை உடனே சரி செய்தனர். இதையடுத்து போராட்டக் களத்துக்கு வந்த கருப்பு முருகானந்தம் தரையில் அமர்ந்து மக்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது: ‘நான் தனிமனிதனாக முடிவெடுத்து வரவில்லை. மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருக்கக்கூடிய, பாஜக-வின் நிர்வாகியாகத்தான் வந்துள்ளேன். இந்த எரிவாயுத் திட்டம் தமிழக மக்களுக்கு, விவசாயத்துக்கு, விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருந்தால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட மாட்டாது என்பதுதான் பாஜக-வின் நிலைப்பாடு. இதைத்தான் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும் தெரிவித்துள்ளார். பாதிப்பு ஏற்படுத்துவதை உறுதிசெய்யும்வகையில் ஆய்வு அறிக்கை தயாரித்திருப்பதாக இந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் என்னிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டம் விவசாயத்தை பாதிக்கும் என்று நான் நம்புகிறேன். அதேசமயம், இந்தத் திட்டம் எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எந்த அரசியல்வாதிகளுக்குமே தெரியாது. தெரிந்திருந்தால் ஒரு நேரத்தில் இந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுத்திருக்க மாட்டார்கள். ஆகையால், மீண்டும் ஆய்வு செய்து மக்களிடம் கருத்து கேட்கப்படும். அப்போது, மக்கள் ஏற்கவில்லை என்றால் இந்தத் திட்டம் ரத்து செய்யப்படும். ஏதோ அரசியல் கட்சிகள் கூறுவதால் போராட வேண்டாம். ஆக்கபூர்வமாக, அறிவியல்பூர்வமாக பாதிப்பு இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்த்து தெளிவுபடுத்தி, உறுதியாக இந்தத் திட்டம் வேண்டாம் என்று சொன்னால் கைவிட்டுவிடுகிறோம் என்று மத்திய அமைச்சர் கூறியிருக்கிறார். நாளை மாலை 3 மணிக்கு மதுரையில் பாஜக-வைச் சேர்ந்த தலைவர்களையும், மத்திய அமைச்சரையும் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, இந்த சந்திப்பின்மூலம் பாதிப்பை அவர்களிடம் தெரிவிக்கவுள்ளனர். அதற்கடுத்ததாக, 3 தினங்களுக்குள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரை சந்திக்கவும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை அறிந்து அதன்மூலம் இந்தத் திட்டத்தை ரத்து செய்து இப்பகுதியை பாதுகாக்க பாஜக அரசு உறுதுணையாக இருக்கும்’ என்றார்.
இந்நிலையில், போராட்டத்தை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்த நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்த திரைப்பட பின்னணிப் பாடகர் செந்தில் தாஸை இன்று சந்தித்துப் பேசினோம். அவர் பேசியதாவது, ‘நெடுவாசல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராட்டக் குழு பிரதிநிதிகள் இன்று (சனிக்கிழமை) பாஜக தலைவர்களை மதுரையில் சந்திக்கவுள்ளோம். இந்தச் சந்திப்பில் அனைத்து பாஜக தலைவர்களும் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம். இன்றைய சந்திப்பில் எங்களோடு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார் என் தமிழக பாஜக பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு எங்கள் போராட்டக் குழு பிரதிநிதிகள் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்பாடு செய்து தருவார். அப்போது எங்கள் நிலைப்பாட்டையும் உறுதியையும் பெட்ரோலியத் துறை அமைச்சரிடம் தெரிவிப்போம்’ என்று கூறினார்.
திட்டமிட்டு போராட்டத்தை நடத்தும் நெடுவாசல் கிராமத்தினரின் உறுதியும், விழிப்புணர்வும் நமக்கு வியப்பைத் தந்தது. இந்த உறுதி இவர்களுக்கு வெற்றியை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையோடு நாம் ஊர் திரும்பினோம்.
-வேட்டை பெருமாள்
ஸ்பாட் ரிப்போர்ட்: வெற்றியை நோக்கி நெடுவாசல் போராட்டம்! ஸ்பாட் ரிப்போர்ட்: வெற்றியை நோக்கி நெடுவாசல் போராட்டம்! Reviewed by நமதூர் செய்திகள் on 22:42:00 Rating: 5

No comments:

Powered by Blogger.