இந்தியர்கள் மீது தொடரும் இனவெறி தாக்குதல்கள்!

அமெரிக்காவில் தொடர்ந்து இந்தியர்கள் மீது இனவெறி தாக்குதல்கள் நடத்தப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கன்சாஸ் நகரின் ஓலதே என்னும் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா (32) என்பவர் என்ஜினியராகப் பணியாற்றி வந்தார். இவர், கடந்த மாதம் அமெரிக்க கடற்படையின் முன்னாள் வீரர் ஆடம் பூரிண்டன்(51) என்பவரால் கன்ஸாபாரில் சுட்டுக்கொல்லப்பட்டார். அந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மற்றொரு இந்தியர் மாதசாணி காயமடைந்தார். இரு இந்திய இளைஞர்களையும் காப்பாற்ற முயன்ற கிரிலாட் என்பவர் படுகாயமடைந்தார். இந்த இனவெறி தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கவாழ் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் தெற்கு கரோலினாவில் இந்திய தொழிலதிபர் ஹர்னீஷ்படேல் (43) மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஹர்னிஷ் படேல் லங்காஸ்டர் என்ற பகுதியில் ஷெரீப் அலுவலகத்திற்கு அருகே சிறிய கடை ஒன்று நடத்தி வந்தார். கடையை அடைத்துவிட்டு வீட்டுக்குச் சென்ற அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இனவெறி காரணமாக வெள்ளிகிழமை இரவு மீண்டும் ஒரு இந்தியர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.
வாஷிங்டன், கென்ட் நகரில் தீப் ராய் (39) என்னும் சீக்கியர் தனது வீட்டின் வெளியே கடந்த வெள்ளிகிழமை இரவு 8.30 மணி அளவில் நின்று கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர் அங்கே வந்துள்ளார். “உங்கள் நாட்டுக்கு திரும்பி செல்லுங்கள்” என கூறியுள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த நபர் துப்பாக்கியால் தீப் ராய் கையில் சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த மர்ம நபர் 6 அடி உயரம் இருந்ததாகவும் முகமூடி அணிந்திருந்ததாகவும் தீப் ராய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கென்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கடந்த மாதம் 23 ஆம் தேதி,நியூயார்க்கில் வசிக்கும் ஏக்தா தேசாய்,ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது சக பயணியான ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒருவரால் இனவெறி தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார்.
அப்போது நடந்த சம்பவத்தை ஏக்தா வீடியோவாக எடுத்து அதைச் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோவில் ''ஆப்பிரிக்க மனிதர், இது என் 'பேச்சுரிமை', 'கருப்பினத்தின் அதிகாரம்' இங்கிருந்து வெளியேறு என திட்டியுள்ளார். அதைத் தொடர்ந்து, அங்கிருந்த மற்றொரு ஆசியப்பெண் மீது அவர் இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
அடுக்கடுக்கான இந்த தாக்குதல்களால், இந்தியர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது.
இந்தியர்கள் மீது தொடரும் இனவெறி தாக்குதல்கள்! இந்தியர்கள் மீது தொடரும் இனவெறி தாக்குதல்கள்! Reviewed by நமதூர் செய்திகள் on 23:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.