மானியவிலையில் அரிசி விநியோகம்! பினராயி விஜயன்

இயற்கை வளம் மிகுந்த கேரளாவில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் அங்கு கடும் வறட்சி நிலவுகிறது. மேலும் கேரளாவை வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய அரசின் உதவியை முதலமைச்சர் பினராயி விஜயன் கேட்டுள்ளார். வறட்சி காரணமாக கேரளாவில் விவசாயமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரிசி விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ அரிசி ரூ.40 முதல் ரூ.70 வரை உயர்ந்து காணப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் அரிசி வாங்க முடியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து கேரள அரசு மானிய விலையில் பொதுமக்களுக்கு அரிசி வழங்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, மேற்கு வங்காளத்தில் இருந்து அரிசியை வரவழைத்து கேரளாவில் உள்ள ரேசன் கடைகள் மூலம் ஒரு கிலோ அரிசி ரூ.25-க்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். இன்று 6ஆம் தேதி அதற்கான தொடக்க விழா, திருவனந்தபுரம் காரகுளம் தொடக்க கூட்டுறவு வங்கியில் நடைபெறுகிறது. முதலமைச்சர் பினராயி விஜயன், இந்த மானிய விலை அரிசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார். முதல் கட்டமாக ஒரு குடும்பத்திற்கு 5 கிலோ அரிசி மானிய விலையில் வழங்கப்படும்.
அடுத்த வாரம் முதல் இது 10 கிலோவாக அதிகரிக்கப்படும். இத்திட்டத்திற்காக மேற்கு வங்காளத்தில் இருந்து 2,500 டன் அரிசி இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 800 டன் அரிசி வந்துள்ளது. மானிய விலை அரிசி திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் கீழ் திருவனந்தபுரம், கண்ணூர், திருச்சூர், கொல்லம் மாவட்டங்களில் தலா 40 ரேசன் கடைகள் மூலமும், மலப்புரம், ஆலப்புழா, பத்தினம் திட்டா, இடுக்கி, கோட்டயம், காசர்கோடு மாவட்டங்களில் தலா 30 ரேசன் கடைகள் மூலமும் மானிய விலை அரிசி வழங்கப்படுகிறது. இந்த தகவலை கேரள மாநில கூட்டுறவுத்துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
மானியவிலையில் அரிசி விநியோகம்! பினராயி விஜயன் மானியவிலையில் அரிசி விநியோகம்! பினராயி விஜயன் Reviewed by நமதூர் செய்திகள் on 22:56:00 Rating: 5

No comments:

Powered by Blogger.