கவிதா (ஒரு நிமிடக்கதை)


வழக்கம்போல் இந்த மாப்பிள்ளையும் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டாள் கவிதா. அம்மா மல்லிகாவுக்கு சரியான கோபம். "என்ன நினைச்சுட்டு இருக்க. சம்பாரிக்கிற கொழுப்பா? உனக்கு கீழ ஒருத்தி இருக்காங்கிறத மறந்திட்டியா" பொரிந்து தள்ளினாள்.
"அம்மா நான் எது செய்தாலும் நம் நல்லதுக்குதான். புரிஞ்சுக்கோமா"  
"இல்ல நீ செய்யிறது கொஞ்சம்கூட எனக்கு பிடிக்கல. நீ வேணான்னு சொன்னது இது நாளாவது பையன். அவனுக்கு என்ன குறைச்சல் நல்ல உத்தியோகம் கை நிறைய சம்பாதிக்கிறான். அந்த வீட்டுக்கு ஒரே பையன் வேற"
"எனக்கு இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்" கவிதா கேட்க. கோபம் தலைக்கேறியது மல்லிகாவிற்கு "இதுக்கு முன்னாடி மூணு வரம் வந்துச்சு எல்லாத்தையும் வேணான்னு சொல்லிட்ட; அப்பல்லாம் அதற்கு என்ன காரணம்னு நான் கேட்கல. ஆனா இப்ப நீ கல்யாணம் வேணாம்கிறதுக்கு காரணம் சொல்லியே ஆகணும்" முரண்டு பிடித்தும் பதில் வரவில்லை கவிதாவிடமிருந்து. மல்லிகா கோபித்துக்கொண்டு மாடிக்கு சென்றுவிட்டாள். 
சமாதானப்படுத்த முயன்ற கவிதா தோல்வியுற்றாள். 
"நான் என்ன தப்பு செஞ்சேன்னு இப்படி மூஞ்சதூக்கி வைச்சிருக்க"
"அப்பா இல்லாத நம்ம குடும்பத்தை வளர்க்க நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா. உன்ன படிக்க வச்சு கஷ்டப்படாம வளர்த்தது என் தப்பு. அதனால்தான் நீ என் பேச கேட்காம சுத்துற"
"அம்மா, அப்படியெல்லாம் இல்லம்மா. படிப்பு முடிஞ்சி ஒரு வருஷம்தான் ஆகுது. அப்பா இல்லாத நம்ம குடும்பத்துல மனநிறைவான வாழ்க்கை வாழ்வது நான் வேலைக்குப்போன பிறகுதான். தங்கச்சி படிப்பு முடிக்க இன்னும் இரண்டு வருஷம் இருக்கு. அதுவரை நான் வேலைக்கு போக முடிவெடுத்தது தப்பா. நம்ம நிலைமை புரிஞ்சி நான் வேலைக்கு போக அனுமதிக்கிற மாப்பிள்ளை வந்தால் கண்டிப்பாக கல்யாணத்துக்கு சம்மதிக்க போறேன். நீ எங்களை வளர்க்க எவ்வளவு கஷ்டப்பட்டன்னு தெரியும்மா. மீண்டும் நீ கஷ்டப்படுறது அனுமதிக்க என்னால முடியாது" கவிதா கண்ணீர்மல்க தனது நிலையை விவரித்தாள். 
தனது மகளின் உயர்ந்த எண்ணத்தை தவறாக நினைத்துவிட்டோமே வருந்தியவளாக மல்லிகா வாஞ்சையுடன் கட்டியணைத்துக்கொண்டாள்.

- உமர் முக்தார்
கவிதா (ஒரு நிமிடக்கதை) கவிதா (ஒரு நிமிடக்கதை) Reviewed by நமதூர் செய்திகள் on 04:53:00 Rating: 5

No comments:

Powered by Blogger.