ஆளுமையற்ற தமிழக தலைமை!

சிறப்புக் கட்டுரை: ஆளுமையற்ற தமிழக தலைமை!

2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, ஜிஎஸ்டி சட்டம் அமல்படுத்துவதை எதிர்த்த ஒரே பெரிய மாநிலம் தமிழ்நாடே. மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டியை எதிர்த்த ஒரே எதிர்க்கட்சி அதிமுகவே. மேலும், பதினான்காம் நிதி கமிஷனை (FFC) எதிர்த்த ஒரே முதலமைச்சர் ஜெயலலிதாவே. இந்த பிரச்னையை தேர்தல்வரை கொண்டு சென்று அதில் வெற்றி பெற்றும் காட்டினார் ஜெயலலிதா. உஜ்வால் திஸ்காம் அசூரன்ஸ் யோஜனா திட்டத்தையும் எதிர்த்த ஒரே மாநிலம் தமிழ்நாடே. உஜ்வால் திஸ்காம் அசூரன்ஸ் யோஜனா (உதய்) எனப்படும் இந்தத் திட்டம் மின்வாரிய மீள்கட்டமைப்பு திட்டமாகும். இந்தத் திட்டம் மாநிலத்தின் நிதி இறையாண்மையில் தலையிடுவதாக ஜெயலலிதா பலமாக எதிர்த்தார். தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தையும் தேவையற்றது என கூறி தமிழ்நாடு எதிர்த்தது.
ஆனால், ஜெயலலிதாவின் உடல்நலம் குன்றி அவர் காலமானதும், இந்த பிரச்னைகள் அனைத்திலும் தமிழ்நாடு அரசு தன் நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றியமைத்துக் கொண்டது. ஜிஎஸ்டி விவகாரத்தில் அதிமுக வாய்மூடி இருக்கிறது. மாநிலத்தில் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டபோதும் பதினான்காம் நிதி கமிஷன் பிரச்னை குறித்து முதலமைச்சரும், மாநில நிதியமைச்சரும் வாய்திறக்கவில்லை. உஜ்வால் திஸ்காம் அசூரன்ஸ் யோஜனா திட்டத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. மிக நுட்பமான பொது விநியோக அமைப்பு கொண்ட தமிழ்நாட்டில், தேவையற்ற தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முடிவுகள் அனைத்தும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மாநிலத்தின் நிர்வாக அதிகாரத்தையும், நிதி சார்ந்த உரிமைகளையும் மத்திய அரசுக்கு அளித்துவிட்டது. 1980ஆம் ஆண்டில், ஜெயலலிதா ராஜ்ய சபா உறுப்பினராக இருந்த நாள் முதல், மாநிலத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வருகிறார். ஆனால், மத்திய அரசை எதிர்க்கும் ஜெயலலிதாவின் துணிச்சல் தற்போது அவர் விட்டுச்சென்றுள்ள அதிமுக அரசுக்கு கொஞ்சம்கூட இல்லை.
ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவரும், மாநில உரிமைகளுக்காக குரல்கொடுத்தவருமான கருணாநிதி, பல மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். எனவே மத்திய அரசை எதிர்த்து போராடுவதில் வல்லமை கொண்ட ஜெயலலிதாவும், கருணாநிதியும் தற்போது இல்லாத காரணத்தால், மாநிலத்துக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவும் மாநில அரசின் திட்டங்களை தலைமை செயலகததுக்கு வந்து ஆய்வு செய்கிறார். ஆய்வு செய்தபின் வெங்கையா நாயுடு தன் உரையில், “உங்கள் நடத்தையின் அடிப்படையிலேயே தான் என்னுடைய ஒத்துழைப்பு இருக்கும். இல்லையென்றால் விரிசல் ஏற்படும்” என பேசினார். ஆனால் ஜெயலலிதாவோ, கருணாநிதியோ முதலமைச்சராக இருக்கும்போது எந்த ஒரு மத்திய அமைச்சரும் தமிழ்நாட்டுக்குள் வந்து இப்படி தைரியமாக பேசவில்லை.
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும்விதமாக, தூங்கிக்கொண்டிருந்த பழைய மொழி பிரச்னையையும் தற்போது தூண்டிவிட்டனர். இந்தி, இந்தியாவின் தேசிய மொழி இல்லையென்பதை வட இந்திய மக்களுக்கு ஒவ்வொரு தலைமுறையினரும் விளக்கி தளர்ந்துவிட்டனர். மேலும் இந்தியைக் கற்பதில் எந்த பயனும் இல்லையென்றே பெரும்பாலான தமிழர்கள் நினைக்கின்றனர். இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும், உயர்ந்த இடங்களுக்கு போகலாம் என பலரும் முட்டாள்தனமான விளக்கங்களைத் தருவதுண்டு. இந்தி தெரியாத காரணத்தால் தமிழர்களுக்கு இதுவரை கிடைக்காத ஒரே வேலை, இந்தியாவின் பிரதமர் வேலை மட்டுமே ஆகும்.
இந்த பிரச்னைகள் அனைத்தையும், தனியாக ஆய்வு செய்தால், கூட்டாட்சி முறைக்கு ஏற்பட்ட களங்கள் என்பது விளங்கும். இவற்றை பேச்சுவார்த்தைகளின் மூலமும், கொள்கை திருத்தங்களின் மூலமும் மாற்ற முடியும். ஆனால், இப்படிப்பட்ட ஒரு முக்கியமான, மிகவும் அவசியமான நேரத்தில், தமிழகத்தில் ஓர் அரசியல் வெற்றிடம் தோன்றிவிட்டது.
இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருப்பதால், தன் பொருட்செல்வத்தை அதிக மக்கள்தொகையுடைய பகுதிளுக்கும், ஏழைகள் நிறைந்த பகுதிகளுக்கும் பிரித்து கொடுக்கவே முயல்கிறது. மொழி மற்றும் கலாசார ரீதியில் பெரும்பான்மை கொண்ட பகுதிகளில் இருந்துவரும் ஜனரஞ்சக தலைவர்கள், தங்களின் அரசியல் திட்டங்களுக்காக தன் மொழி மற்றும் கலாசாரத்தை மற்றவர்கள் மீது திணிக்கின்றனர். சராசரியாக தமிழகத்தில் ஒரு பெண், 1.7 குழந்தைகளுக்கத் தாயாகிறார். ஆனால் மத்தியப்பிரதேசத்தில் இந்த விகிதம் 3 என உள்ளது. தமிழ்நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த மாநிலமாகவும், பெண்கள் சராசரியாக குழந்தைகளுக்கு தாயாகும் விகிதம் குறைவாக இருக்கும் மாநிலமாகவும், மொழி மற்றும் கலாசார ரீதியில் தனித்தன்மை கொண்ட மாநிலமாகவும் உள்ளது. எனவே, மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக, தமிழ்நாடு நல்ல பொருளாதார வளர்ச்சி அடைந்தும், மக்கள்தொகை வளர்ச்சி குறைந்த மாநிலமாகவும் இருப்பதால், பதினான்காம் நிதி கமிஷன் தமிழ்நாட்டை பெரியளவில் வஞ்சித்துள்ளது. மத்திய அரசுக்கு வரும் வரி வருவாயை பகிர்ந்தளிப்பதில், மக்கள்தொகை மிகுந்த மாநிலங்களுக்கு அதிகமான பணப்பலன் வருமாறு பதினான்காம் நிதி கமிஷன் வடிவமைத்துவிட்டது. இதனால், சராசரியாக குழந்தைகளுக்குத் தாயாகும் விகிதம் குறைவுடன் கொண்ட மாநிலங்களின் பணத்தில், சராசரியாக பெண்கள் குழந்தைகளுக்கு தாயாகும் விகிதம் அதிகமாக கொண்டுள்ள மாநிலங்கள், நிறைய பலன்களை பெற்றுக்கொள்கின்றன. இதனால், தமிழகம் பெரியளவில் பாதிக்கப்பட்டது. இதனால், 2016-2017இல் மட்டும் தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்பு சுமார் 6,000 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்பின் சட்டவிதி 82இன்படி ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பின் பின் தேர்தல் வரைபடம் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்த சட்டம் 1976ஆம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தின்படி 2024ஆம் ஆண்டு வரை தேர்தல் வரைபடத்தை மாற்றியமைக்க முடியாது. ஆனால் 2024ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு பெரிய பிரச்னை எழும். கடந்த 40 ஆண்டுகளில் வட இந்திய மக்களின் மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் உயர்ந்துவிட்டது. எனவே 2024இல் தேர்தல் வரைபடம் மாற்றியமைக்கப்படும்போது, அதிகமான மக்களவை தொகுதிகள், வட இந்தியர்களுக்கு கிடைத்துவிடும். இதனால், மக்களவையில் தென்னிந்தியர்களின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். தமிழகத்தின் பிரதிநிதித்துவம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் குறைந்தால், டெல்லி எடுக்கும் முடிவுகளில் தமிழகத்தின் செல்வாக்கு குறைந்துவிடும். இதனால் தமிழகத்தை வடமாநிலங்கள் சுரண்டும் நிலையும் ஏற்படலாம்.
கூட்டாட்சி முறை கொண்ட நாடுகளில் இது சாதாரமாண நிகழ்வுதான் என பலரும் கூறுவதுண்டு. உதாரணமாக அமெரிக்காவின் நியூயார்க் மற்றும் கலிஃபோர்னியாவை எடுத்துக்காட்டாக முன்வைப்பார்கள். ஆனால், அங்கு அப்பலாச்சியா மற்றும் சில தென் பகுதிகளுக்கு, கலிஃபோர்னியா துணை ஆதரவு அளிக்கிறது. ஆகையால், தமிழ்நாட்டுக்கும், கலிஃபோர்னியாவுக்கும் அடிப்படையில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. கலிஃபோர்னியாவின் மக்கள்தொகை, அதன் துணை ஆதரவில் இருக்கும் பகுதிகளையும் சேர்த்தே கணக்கிடப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டின் நிலை அவ்வாறு இல்லை. இந்தியாவில் மக்கள்தொகை வளர்ச்சியை அளவீடு செய்ய, சராசரியாகப் பெண்கள் குழந்தைகளுக்குத் தாயாகும் விகிதமே அளவுகோலாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த அளவீட்டில், மக்கள் இடம்பெயர்தல் ஓர் அங்கமாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. எனவே உ.பி, பீகார், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில், அதிக மக்கள்தொகை வளர்ச்சி இருப்பதாக கணக்கீடுகளின் முடிவுகள் காட்டுகின்றன.
வட இந்தியாவிலும், மத்திய இந்தியாவிலும் மக்கள்தொகை கடுமையான வேகத்தில் வளர்ந்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில், ஒரு தலைமுறைக்கும் மேலாக, சராசரியாக பெண்கள் குழந்தைகளுக்கு தாயாகும் விகிதம் குறைவாகவே உள்ளது. அமெரிக்காவின் செனட்டில், ஒவ்வொரு மாநிலத்துக்கும் இரண்டு செனட்டர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனால், இந்தியாவின் ராஜ்ய சபாவின் நிலை அவ்வாறு அல்ல. எனவே, மற்ற கூட்டாட்சி முறை கொண்ட நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிட்டு பார்ப்பதும் அர்த்தமற்று போகிறது.
50 வருடங்களுக்கு முன், இந்தியாவின் பிற மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையே பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், 2016ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, சுகாதாரம், கல்வி, சமுதாய முன்னேற்றங்கள் ஆகியவற்றில் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறியீடுகள், OECD (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு) நாடுகளுக்கு இணையாக இருக்கிறது. OECD நாடுகளானது உலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளை உறுப்பினர்களாக கொண்டது. இந்த OECD நாடுகளில், அமெரிக்காவும், பல ஐரோப்பிய நாடுகளும் உறுப்பினர்களாக உள்ளன. ஆனால் மற்ற மாநிலங்களின் வளர்ச்சி குறியீடுகள், ஒப்பீடு செய்வதற்குகூட தகுதியில்லாமல், உலகின் முன்னேற்றமடையாத நாடுகளுக்கு நிகராக இருக்கின்றன. விளையாட்டுகளிலும், தொழிலிலும் உச்சத்தை அடையவும், அதை தக்கவைத்து கொள்ளவும் முற்றிலும் மாறுபட்ட உத்திகளை கடைபிடிக்க வேண்டியிருக்கும். இது ஒரு தேசத்தின் மாநிலத்துக்கும் பொருந்துமா என்பதே தமிழர்களின் கேள்வியாக உள்ளது. உலகின் மிகவும் வெற்றிகரமான நாடுகளான சுவீடனும், நார்வேவும் 1905ஆம் ஆண்டில் தங்கள் கூட்டரசை உடைத்ததன் மூலமே உருவானவை என்பதை மறுத்துவிட முடியாது.
நன்றி: R.S.நீலகண்டன், thewire.in
மொழியாக்கம்: அ.விக்னேஷ்
ஆளுமையற்ற தமிழக தலைமை! ஆளுமையற்ற தமிழக தலைமை! Reviewed by நமதூர் செய்திகள் on 23:20:00 Rating: 5

No comments:

Powered by Blogger.