கணவன்-மனைவி-நேசம்! – வி.களத்தூர் எம்.பாரூக்

அமர் இப்னு (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கிறார்கள் “இறைத்தூதர் அவர்களே! மனிதர்களிடையே நீங்கள் அதிகம் நேசிப்பவர் யார்?” “ஆயிஷா” என உடனே பதிலுரைக்கிறார்கள். எவ்வளவு வியப்பான பதில் அது. வேறு யாரிடமாவது இதுபோன்ற கேள்வியை முன் வைத்தால் அவர்கள் எனது மனைவியைத்தான் நான் அதிகம் நேசிக்கிறேன் என கூறுவார்களா? சந்தேகம்தான். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) மனிதர்களிலேயே அதிகம் நேசிப்பவராக தனது மனைவி ஆயிஷாவை குறிப்பிடுகிறார்கள். ஆயிஷா மீது எந்த அளவு பிரியம் வைத்திருந்தார்கள் என்பதனை இதன்மூலம் அறிய முடிகிறது.
அன்பை தெளிப்பது, ஆலோசனை பெறுவது, விட்டுக்கொடுப்பது, கண்ணியப்படுத்துவது என அனைத்திலும் மனைவிக்கு உண்டான உரிமையினை வழங்கியிருக்கிறார்கள். ஒருநாள் படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிஷாவிடம் “என் இறைவனை சிறிது நேரம் வணங்குவதற்கு அனுமதி தருவீர்களா?” என கேட்கிறபோது “இறைத்தூதர் அவர்களே! உங்கள் நெருக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் உங்கள் மனம் விரும்புவதை நானும் விரும்புவதே எனக்கு திருப்தி” என்கிறார்கள் ஆயிஷா (ரலி) அவர்கள்.
கணவன்-மனைவி எப்படி வாழ வேண்டும் என்பதற்கான பாடத்தை படம் பிடித்து காட்டுகிறது மேற்காணும் சம்பவம். மனைவிடம் கேட்காமலே இறைவனை வணங்கியிருக்கலாம். ஆனால் மனைவிடம் அனுமதி கேட்கிறார்கள். ஆயிஷாவும் அனுமதி தராமல்கூட இருந்திருக்கலாம். அனுமதியும் வழங்கி உங்களுடன் நெருக்கமாக இருக்க விரும்புவதையும், உங்கள் விருப்பமே என் விருப்பம் என்பதையும் குறிப்பால் உணர்த்துகிறார் ஆயிஷா.
கணவன்-மனைவி இருவருமே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை இனிமையானதாக அமையும். கணவனுக்கு மனைவி மீது எவ்வளவு உரிமை உள்ளதோ, அதேபோல மனைவிற்கும் கணவன் மீது உரிமை உள்ளது. “கணவனின் திருப்தியை பெற்ற நிலையில் எந்த பெண் மரணமடைகிறாரோ அவள் சுவனம் நுழைந்துவிட்டால்” என்கிறார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். மற்றொரு இடத்தில் “மனைவியிடத்தில் சிறந்தவரே மனிதரில் சிறந்தவர்” என்று குறிப்பிடுகிறார்கள்.
கணவன்-மனைவி இருவரும் தங்களது அன்பை மனதில் வைத்து பூட்டிக்கொள்ளாமல் அழகான முறையில் வெளிப்படுத்த வேண்டும். பலர் மனைவி மீது அளவு கடந்து அன்பை வைத்திருப்பார்கள். ஆனால் அதை வெளிப்படுத்த விரும்பமாட்டார்கள். பிறகு மனைவி இறந்த பிறகு அதை நினைத்து வருந்துவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தோழர் ஒருவர் கூறினார்
“இறைத்தூதர் அவர்களே! அதோ போகிறாரே அவரை நான் நேசிக்கிறேன்”
“அவரிடம் அதை அறிவித்தீரா”
“இல்லை”
“செல்லுங்கள். அவரிடம் அதை அறிவியுங்கள். அவரும் உங்களை நேசிக்கட்டும்” என்றார்கள்.
கணவன்-மனைவி இருவரும் தங்கள் வாழ்வு இவர்தான் என்பதை முதலில் மனதில் ஏந்த வேண்டும்.
அலி (ரலி) அவர்கள் தனது மனைவி பாத்திமா (ரலி) குறித்து இவ்வாறு அன்பொழுக கூறுகிறார்கள் “எனது மணப்பெண்ணும், மன அமைதியும் முஹம்மதின் மகளே! அளவே என் வாழ்வு. அவளே என் மனைவி. அவளின் சதைத்துண்டு என் சதையுடனும், இரத்தத்துடனும் கலந்துவிட்டது”. இதேபோல் ஒவ்வொரு கணவனும்-மனைவியும் நினைக்கும்பட்சத்தில் கணவன்-மனைவி உறவு விரிசலடையாமல், கணவன்-மனைவி பிணைப்பு மேலும் விரிவடையும் என்பது நிதர்சனமான உண்மை.
– வி.களத்தூர் எம்.பாரூக்
கணவன்-மனைவி-நேசம்! – வி.களத்தூர் எம்.பாரூக் கணவன்-மனைவி-நேசம்! – வி.களத்தூர் எம்.பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 01:19:00 Rating: 5

No comments:

Powered by Blogger.