நிகழ்களம்: மரபணு மாற்றப்பட்ட பயிர்களும், உணவு அரசியலும்!

நிகழ்களம்: மரபணு மாற்றப்பட்ட  பயிர்களும், உணவு அரசியலும்!

தற்போதைய நிலையில் இந்தியாவில் விவசாயிகள் தங்களுடைய இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள தினந்தினம் போராடி வருகின்றனர். ஆனால், தற்போதைய அரசாங்கங்கள் விவசாயிகளை அவர்களது கழனிகளிலிருந்து வெளியேற்றும் வேலைகளை மட்டும் கச்சிதமாக செய்து வருகின்றன. அறுபதுகளில் ஏற்படுத்தப்பட்ட பசுமைப்புரட்சி, அதைத்தொடர்ந்து கடந்த காலங்களில் மீத்தேன் வாயு, கெயில் குழாய், ஷெல் கியாஸ், எரிவாயு, ஹைட்ரோ கார்பன் என பல்வேறு விதத்திலும் விவசாயிகளை அவர்களது நிலத்திலிருந்து வெளியேற்றும் வேலையை அரசாங்கங்கள் செய்து வருகின்றன. திட்டங்களின் பெயர்தான் வேறே தவிர, நோக்கமெல்லாம் ஒன்றுதான். மேலும் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடினாலும் அடிபட்டும், சுடுபட்டும் சாக வேண்டிய நிலைமைதான் விவசாயிகளுக்கு உள்ளது. இதற்கு சமீபத்திய உதாரணமாக மத்தியப்பிரதேசத்தை சொல்லலாம். இதையெல்லாம்விட கடந்த 10 ஆண்டுகளாக அறிவியல் ரீதியான தாக்குதல்களைத் விவசாயத்தின் மீதும் விவசாயிகள் மீதும் திணித்து வருகின்றனர், நம்முடைய அறிவியலாளர்கள். மரபணு மாற்றப்பட்ட பருத்தி, கத்திரி என்று வருடந்தோறும் இது தொடர்ந்து வருகிறது. தற்போது மற்றுமொரு தாக்குதல் மரபணு மாற்றப்பட்ட கடுகின் மூலமாக தொடுக்கப்பட்டுள்ளது. இதையெதிர்த்து இந்தியா முழுவதுமுள்ள சூழலியலாளர்களும், இயற்கை விவசாய ஆர்வலர்களும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தியும், போராடியும் வருகின்றனர்.
மரபணு மாற்றப்பட்ட கடுகைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் முயற்சியாக பூவுலகின் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பில் ‘மரபணு மாற்றுப் பயிர்களும், உணவு அரசியலும்’ என்கிற தலைப்பில், கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூன் 10ஆம் தேதி கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சியை பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன் தொகுத்து வழங்கினார். நிகழ்வில் சூழலியல் ஆர்வலர்கள் பாமயன், சுல்தான் இஸ்மாயில், மருத்துவர் கு.சிவராமன், உணவுக் கொள்கை நிபுணர் தேவிசந்த் சர்மா, பாதுகாப்பான உணவுக் கூட்டமைப்பைச் சேர்ந்த கவிதா குருகந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் முதலாவதாகப் பேசிய சூழலியல் ஆர்வலரான பாமயன், “இந்தியாவைப் போன்ற வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட நாடுகளின் பொருளாதாரம் வேறுபட்டதாக உள்ளது. உண்மையாக வளர்ந்த நாடுகள், வேளாண்மையையே அடிப்படையாகக்கொண்டு இயங்குகின்றன. அங்கு உழவர்கள் தற்சார்பு உள்ளவர்களாக உள்ளனர். ஆனால், இந்தியாவில் அறுபகளில் தொடங்கிய முதலாவது ஐந்தாண்டு திட்டத்திலிருந்து, பல ஐந்தாண்டுத் திட்டங்கள் உழவர்களைத் தங்களது நிலங்களிலிருந்து வெளியேற வைத்துவிட்டது. இது தொடர்ந்து நடந்துகொண்டே வருகிறது. பசுமைப்புரட்சிக்குப் பிறகு விவசாயிகளின் தற்சார்பு என்பது அடித்து நொறுக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் உரமும், விதையும் விவசாயிகளின் கையில் இருந்தது. ஆனால் தற்போது யூரியா, டிஏபி இல்லாமல் எந்த விவசாயமும் செய்ய முடியாத நிலை உள்ளது.
அடுத்து போராட்டம். ஆசிரியர்கள் போராடினால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவர்கள் போராடினால் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், விவசாயிகள் போராடினால் மட்டும் அவர்களே நேரடியாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதுவரை விவசாயிகளுக்கென்று தனி சட்டம் எதுவும் வரவில்லை. ஜப்பானில் மாடு வளர்ப்பவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 450 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்திய விவசாயிகளுக்கோ வருடத்துக்கே மானியமாய் 2000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அடுத்து சந்தைப்படுத்துதல் என்று வரும்போது, உற்பத்தி அதிகமானால் சந்தை விலை குறைகிறது; சந்தை விலை அதிகமானால் உற்பத்தி குறைகிறது. இதுவும் ஒருவகையாக நேரடியாக விவசாயிகளை பாதிக்கிறது.
மேலும் hybrid எனப்படும் வீரிய விதையின் தீமைகளைக் கண்டுபிடிக்கவே 40 ஆண்டுகள் ஆனது. இந்த நிலையில் மரபணு பயிர்களில் உள்ள தீமைகளைக் கண்டுபிடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்று தெரியவில்லை. இது ஓர் அரசியல் தகிடுதத்தம். இந்த விதைகளைப் பயிரிட்டு அறுவடை செய்வதற்கு இடுபொருட்கள், உரம் என வரும் வருமானத்தில் 40 சதவிகிதம் வரை செலவாகிறது. ஆனால், இயற்கை விவசாயம் எவ்வித செலவுமில்லாத தற்சார்பு உணவு உற்பத்தியை முன்வைக்கிறது. இந்த மரபணு மாற்றப் பயிர்கள் மூலமாக இயற்கை வேளாண்மைக்கும் சேர்த்தே ஆபத்து வந்துள்ளது. இதனால் இயற்கை விவசாயம் மட்டுமல்லாது, விவசாயமே செய்ய முடியாது. சோயா, கத்திரியைத் தொடர்ந்து பி.டி. பருத்தியைக்கொண்டு வந்தனர். இது உணவுப் பொருள் இல்லை என்றும் கூறினர். ஆனால், மதுரையில் பருத்தி பால் குடிக்கிறார்கள், பருத்திக் கொட்டையை மாட்டுக்கு வைக்கிறோம். அது தரும் பாலை நாம் குடிக்கிறோம். இதை என்னவென்று கூறுவார்கள்?
மேலும் களைக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது நரம்பியல் சம்பந்தமான நோய்களையும் ஏற்படுகிறது. மேலும், இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகு வகையைச் சேர்ந்ததுதான் முட்டைக்கோஸ், காலிஃபிளவர் என்றும் கூறுகிறார்கள். அப்படியென்றால் கடுகின் மரபணு இந்த உணவுப் பொருள்களுக்கும் கடத்தப்படும். இதனால் ஏற்படும் பாதிப்பை பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால், இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு எதிரான போராட்டம்கூட விவசாயிகளைச் சென்று சேரவில்லை. சூழலியலாளர்கள் மட்டுமே இதற்கு எதிராகப் போராடுகின்றனர்.
மேலும் முன்னரெல்லாம் பி.டி. கத்திரி, பருத்தி என்று கொண்டுவந்தார்கள். ஆனால், தற்போது பி.டி. என்றால் போராடுகிறார்கள் என்று அதன் பெயரை மாற்றி ஜெனிடிக் மோடிஃபைடு (genetic modified crops) என்று அறிவிக்கின்றனர். இதுவும் விவசாயிகளை நிலத்தை விட்டு அப்புறப்படுத்தும் ஒரு திட்டம்தான். இதுபோன்ற நடவடிக்கைகளால் விவசாயிகளைப் படுகுழியில் தள்ளுவது ஆட்சியாளர்கள்தான்” என்று கூறி முடித்தார்.
அடுத்து பேசிய மண்புழு விஞ்ஞானி பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், “இந்த வருடத்தில் மத்திய அரசின் கொள்கை என்ன தெரியுமா? மக்களை இயற்கையோடு இணைய வைப்பது. எப்படித் தெரியுமா? இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளின் மூலம்தான். மனிதனுக்கு என்ன தேவை, மனிதனுக்கு என்ன வேண்டும், அதில் லாபம் எது கொடுக்கும் என்பதை மட்டுமே ஆட்சியாளர்கள் பார்க்கிறார்கள். ஆனால், சூழலியலுக்கு என்ன தேவை என்பதில் அவர்களுக்கு அக்கறையில்லை. முதலில் பி.டி. பருத்தியைக் கொண்டுவந்தார்கள். இதனால் வழக்கத்தைவிட அதிகமாக பருத்தியை உற்பத்தி செய்யலாம் என்று கூறினார்கள். இதற்குப் பூச்சிக்கொல்லியே தேவையில்லை என்றும் கூறினார்கள். பிறகு அமெரிக்கன் போல்வார்ம் (american bollworm) தாக்குகிறது என்று மறுபடியும் பூச்சிக்கொல்லித் தேவை என்றார்கள். இந்த பூச்சிக்கொல்லியால் மனிதர்களுக்குப் பாதிப்பில்லை என்றார்கள். பயிரைத் தவிர மற்றவற்றையெல்லாம் அழிக்கும் என்றார்கள். சரி அப்படியே வைத்துக்கொள்வோம். பருத்தியை விட்டு கீழே விழும் இலைதழைகளை உண்ணுவது எது? நுண்ணுயிரிகள். ஏற்கெனவே ரசாயன உரங்களால் மண்புழுக்கள் செத்துவிட்டன. இன்னும் இந்த பூச்சிக்கொல்லியால் நுண்ணுயிரிகள் அழியும் அபாயம்கூட ஏற்பட்டுள்ளது.
மேலும், பி.டி. பருத்தியால் பாதிப்பில்லை என்றார்கள். ஆனால், பருத்தியிலிருந்து கசக்கி எண்ணெய் எடுக்கிறார்கள். இந்த எண்ணெய் சோப்பு தொழிற்சாலைக்குச் சென்றுவிடுகிறது. அந்தச் சோப்பை உபயோகிப்பது யார்? பருத்தியிலிருந்து வரும் பருத்தி கொட்டையை, புண்ணாக்கை மாடு சாப்பிடும். அந்த மாடு கொடுக்கும் பாலைக் குடிக்கும் குழந்தைகளை இந்த மரபணு மாற்றப்பட்ட பருத்தி எவ்வாறு பாதிக்கும் என்று தெரியவில்லை. தற்போதுகூட திருநெல்வேலியில் பருத்திக்கொட்டை அல்வா விற்கிறார்கள்.
முதலில் இயற்கையாகத் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளால் நமக்கு இயற்கையான சத்துக்கள், புரதங்கள் கிடைத்தன. பிறகு வீரிய ஒட்டு ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது. எப்படியென்றால் மாங்காய் + மாங்காய் = ஒட்டு மாங்காய் என்கிற விதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எவ்வித சம்பந்தமுமில்லாத ஓர் உயிரியிடமிருந்த மரபை மற்றொரு உயிரிக்குக் கோத்து மரபணு மாற்றப்பட்ட பயிர் உருவாக்கப்படுகிறது. இது தகப்பனையும், தாயையும் மாற்றி மண்ணை மலடாக்கும் செயலாகும்.
பி.டி. கத்திரியாக இருக்கட்டும், பி.டி. பருத்தியாக இருக்கட்டும். இதற்கென தனியாக ரவுன்ட் அப் (round up) என்ற பூச்சிக்கொல்லி உபயோகப்படுத்தப்படுகிறது. இது களையை மட்டுமே எடுக்கும், பயிரை பாதிக்காது என்று விளக்கமளித்து அறிமுகப்படுத்தினர். அட நல்லதுதானுங்க... இதிலென்ன பிரச்னை என்றால் இந்த களைக்கொல்லியில் Glyphosate என்கிற நச்சுக்கொல்லி உள்ளது. அதாவது இந்த Glyphosate-ன் பாதிப்பு எவ்வாறு இருக்குமென்றால், இந்தவகை பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட புல்லை மேய்ந்தால், கர்ப்பமாக இருக்கும் பசு மாட்டின் கரு கலைந்துவிடும். அந்த அளவுக்கு இதன் வீரியம் உள்ளது.
தற்போது நாம் பேசிக்கொண்டிருக்கும் பி.டி. என்றால் பையோ டெக்னாலஜி (BIO TECHNOLOGY) என்று அர்த்தம் கிடையாது, பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ் (bacillus thuringiensis) என்பதுதான் இதன் விளக்கம். ஆனால், ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக மரபணு மாற்றப்பட்ட கடுகில் பி.டி. என்ற பெயரை பயன்படுத்தவில்லை அந்த நுண்ணுயிரியையும் பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக Bacillus amyloliquefaciens என்கிற நுண்ணுயிரியை பயன்படுத்தியுள்ளனர். இதை மட்டுமல்லாமல் Streptomyces hygroscopicus என்ற நுண்ணுயிரியைப் பயன்படுத்தி பார்க்கின் என்ற மரபை எடுக்கிறார்கள். இதிலிருந்து Herbicide tolerant என்கிற புது வகை பயிரை உருவாக்கியுள்ளனர். இதுதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் மரபணு மாற்றப்பட்ட பயிர். இதன் விளைவுகள் விவசாயிகளுக்கு மூளை மற்றும் நரம்பு சம்பந்தமான பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று கூறினார்.
இதற்கடுத்து பேசியவர்களின் தொடர்ச்சியை நாளைக் காணலாம்....
- த.எழிலரசன்
நிகழ்களம்: மரபணு மாற்றப்பட்ட பயிர்களும், உணவு அரசியலும்! நிகழ்களம்: மரபணு மாற்றப்பட்ட பயிர்களும், உணவு அரசியலும்! Reviewed by நமதூர் செய்திகள் on 21:37:00 Rating: 5

No comments:

Powered by Blogger.