ஆளுநரே தேவையில்லை : திருச்சி சிவா

ஆளுநரே தேவையில்லை : திருச்சி சிவா

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும்போது ஆளுநர் அதிகாரத்தைக் கையிலெடுக்க கூடாது,மேலும் ஆளுநரே தேவையில்லை என்பதுதான் திமுக-வின் நிலைப்பாடு என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் ஆளுநருக்கும், ஆளும் நாராயணசாமி அரசுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. ஆளுநர் கிரண் பேடியும், முதல்வர் நாராயணசாமியும் ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டியே பேசி வருகின்றனர். மேலும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் புதுச்சேரியில் இன்று ஜூன் 17 ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, 'ஆளுநரே தேவையில்லை என்பதுதான் திமுக-வின் நிலைப்பாடு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்க, ஆளுநரே முழு அதிகாரத்தையும் கையிலெடுத்து செயல்படக்கூடாது. குறிப்பாகப் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி இவ்வாறு செயல்படக்கூடாது. அவர் மோதல் போக்கை கைவிட்டு மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட வேண்டும்.
மேலும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி தடை சட்டத்திற்கு எதிராக தமிழக அரசு எவ்வித கருத்தும் கூறவில்லை, மௌனமாகவே உள்ளது. மத்திய அரசின் சொல்படிதான் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயகம் என்பதே இல்லை. அதிமுக பேரம் குறித்து வீடியோ ஆதாரத்துடன் பேசக்கூட திமுக-விற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சபைக்குறிப்பில் இருந்து சி.டி ஆதாரத்தை சமர்ப்பிக்க அனுமதி கேட்ட விவாதத்தை நீக்கி இருப்பதால் பணம் பேர விவகாரம் உண்மை என்பதும் தெரியவந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.
முன்பு அறிஞர் அண்ணா 'ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை' என்று கூறினார். அவருடைய பேச்சை பல ஆண்டுகள் கழித்து இன்று திருச்சி சிவா நினைவு கூர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநரே தேவையில்லை : திருச்சி சிவா ஆளுநரே தேவையில்லை : திருச்சி சிவா Reviewed by நமதூர் செய்திகள் on 22:13:00 Rating: 5

No comments:

Powered by Blogger.