நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு: மது மட்டுமா?

சிறப்புக் கட்டுரை: நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு: மது மட்டுமா?

சமீப காலமாக தமிழ்த் திரைப்படங்களில் ஒரு காட்சி வலிந்து திணிக்கப்படுவதைக் கவனிக்க முடிகிறது. அது... ஹீரோயின்கள் மது அருந்தும் காட்சி!
எம்.ஜி.ஆர். காலத்து சினிமாக்களில் மது அருந்துவது போன்ற தீயச்செயல்களை வில்லன்கள்தான் செய்வர். ஹீரோக்கள் மது அருந்துவது போன்ற காட்சிகள் இருந்தாலும், அதை ஒரு கெட்ட செயலாகவே சித்தரிப்பர். பின்னர் ரஜினி, கமல் காலகட்ட சினிமாக்களில் ஹீரோக்கள் மனக்கஷ்டத்தில் குடிப்பதுபோல் காட்சிகள் அமைக்கப்பட்டன. தற்போதைய தனுஷ், சிவகார்த்திகேயன் காலகட்ட சினிமாவில் டீ குடிக்கச் செல்வது போல் சர்வசாதாரணமாக ஹீரோக்கள் பார்களுக்கு செல்வதுபோல் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. மது குடித்துவிட்டு ஆடிப்பாடுவது போன்ற காட்சிகளும் கட்டாயம் உண்டு. அதுவும் எம்.ராஜேஷ் இயக்கும் படங்கள் என்றால், டாஸ்மாக் ஸ்பெஷல் என்றே சொல்லலாம். படத்துக்கே ‘வி.எஸ்.ஓ.பி’ என்று பெயர் சூட்டியவராச்சே அவர்!
ஹீரோக்கள் குடித்தால் மட்டும் போதுமா? ஹீரோயின்களும் மதுவின் சுவையை அறிய வேண்டாமா? பிறகு பெண்ணுரிமை போராளிகள் சண்டைக்கு வந்துவிடுவார்களே! மது என்று தெரியாமல் அதை அருந்துவிட்டு ஹீரோயின்கள் அலப்பறை செய்வதுபோன்ற காட்சிகள் ஆரம்பத்தில் அமைக்கப்பட்டன. ‘யாரடி நீ மோகினி’ படத்தில் இடம்பெற்ற நயன்தாராவின் ‘சொய்ங்... சொய்ங்...’ காட்சி அதற்கு ஓர் உதாரணம்.
ஹீரோ, ஹீரோயின் இருவரும் சேர்ந்து மது அருந்தும் சமத்துவ காட்சி விஜய் சேதுபதியின் ‘காதலும் கடந்து போகும்’ படத்தில் இடம்பெற்றது. ‘போகன்’ படத்தில் ஹீரோயின் ஹன்சிகா மது அருந்திவிட்டு அலப்பறை செய்வது போன்ற காட்சி, ‘சங்கிலி புங்கிலி கதவத் தொற’ படத்தில் ஹீரோயின் அண்டு டீம் பூட்டிய வீட்டுக்குள் மது அருந்துவது போன்ற காட்சி அடுத்தடுத்து வலிந்து திணிக்கப்பட்டன. இந்தப் படங்களை எல்லாம் பார்க்கும்போது பெண்களும் மது அருந்தலாம், தப்பில்லை என்ற கருத்தை விதைப்பதற்காக எடுக்கப்பட்டதோ என்று தோன்றுகிறது.
ஏற்கெனவே தமிழகத்தில் மது கலாசாரம் வேரூன்றி இருக்கிறது. மது குடிப்பதெல்லாம் தவறில்லை என்ற எண்ணம் ஆண்கள் மத்தியில் வேரூன்றி விட்டது. மது அருந்திய நபர்களைக் கேவலமாகப் பார்த்த காலம் போய், மது அருந்தாத நபர்களை ஏளனமாகப் பார்க்கும் காலம் வந்துவிட்டது. வார இறுதி பார்ட்டிகளில் பெண்கள் மது அருந்துவதை பரவலாகக் காண முடிகிறது. ஆண் நண்பர்களுடன் பார்களுக்குச் செல்லும் பெண்களையும் சர்வசாதாரணமாகப் பார்க்க முடிகிறது. இப்போது சினிமாவில் திணிக்கப்படும் ஹீரோயின் மது அருந்தும் காட்சிகள், சினிமா மீது மோகம்கொண்ட இளம்பெண்களை மது பக்கம் இழுக்கும் முயற்சியாகவே படுகிறது.
இன்னொரு பக்கம், தமிழகத்தில் வீதிகள்தோறும் டாஸ்மாக் கடைகளைத் திறந்துவைத்து கல்லா கட்டி மக்களைக் குடிகாரர்கள் ஆக்கிக்கொண்டிருக்கிறது அரசு. அதை எதிர்க்கும் மக்கள் காவல்துறையால் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ‘மூடு டாஸ்மாக்கை மூடு’ எனப் பாடிய கோவன் நள்ளிரவில் தேச விரோத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சியில் பூரண மதுவிலக்கு கோரி மாநாடு நடத்திய ஏழு பேர் மீது தேச விரோத வழக்குப் போடப்பட்டது. மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடிய சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது. மதுக்கடைகளை மூடச் சொல்லி போராடிய காந்தியவாதி சசிபெருமாள், காவல்துறையினரின் அலட்சியத்தால் களத்திலேயே பலியானார்.
டாஸ்மாக் கடைகளுக்கு சற்றே கடிவாளம் போட்டது சமீபத்திய உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுதான். நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் மதுபானக் கடைகள் அகற்றப்பட வேண்டும் என்ற உத்தரவு காரணமாக ஏராளமான மதுக்கடைகள் மூடப்பட்டன. “பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதுதான் எப்பொழுதும் நான் கொண்டுள்ள கொள்கை ஆகும். ஆனால், பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் கொண்டு வருவது என்பது இயலாது. இது படிப்படியாகத்தான் கொண்டுவர முடியும்” என்று கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் தங்கள் கட்சியின் தலைவி ஜெயலலிதா சொன்னதை வசதியாக மறந்துபோன அதிமுக அரசு, மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு மாற்றாத புதிய இடங்களில் மதுக்கடைகளைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அப்படி திருப்பூரில் புதிதாகத் திறக்கப்பட்ட மதுக்கடையை மூடச்சொல்லி போராட்டம் நடத்திய பெண்களில் ஒருவரைக் காவல்துறை அதிகாரி ஒருவர் கடுமையாகத் தாக்கினார். இப்போதும்கூட தமிழகத்தில் ஊருக்கு ஊர் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராகப் பெண்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர். அப்படிப் போராடும் பெண்களைக் காவல்துறை மற்றும் வருவாய் துறை அடக்குமுறை கொண்டு கலைந்துபோகச் செய்கிறது.
இப்படி மக்களைக் காக்க வேண்டிய அரசு மதுவுக்கு எதிராகப் போராடுவோர் மீது உடல்ரீதியான தாக்குதல் நடத்த, பொழுதுபோக்கு அம்சமான சினிமாவோ உளவியல் ரீதியாகத் தாக்குதல் நடத்துகிறது. மக்களைக் குடிகாரர்களாக மாற்றி, ஒரு தலைமுறையையே சீரழித்து விட்டது. பள்ளிக்குப் போகும் மாணவ – மாணவிகளைக் குடிக்கும் நிலைக்கு அரசும் சினிமாவும் மாற்றிவிட்டன.
இப்போதைக்கு மதுவுக்கு எதிராக இருப்பது பெண்கள்தான். மதுவினால் கணவன், மகன் சீரழிந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத பெண்கள்தான் இன்று வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். அந்தப் போராட்டத்தில் திருமணம் ஆகாத இளம்பெண்களை அதிக அளவில் காண முடிவதில்லை. குடி தவறில்லை என்று அடுத்த தலைமுறை இளம்பெண்களைக் குறிவைத்து திரைப்படங்கள் உளவியல் ரீதியாகத் தாக்குதல் நடத்த அரசு துணை போகிறதோ என்று அஞ்சத் தோன்றுகிறது.
திரைப்படங்களில் பெண்கள் குடிக்கும் காட்சிகளில் அரசின் ஆசீர்வாதம் இல்லையென்றால், அத்தகைய காட்சிகளுக்கு அனுமதி மறுக்க வேண்டும். அப்படி கட்டாயம் அந்தக் காட்சி வேண்டும் என்றால், நான்கு மடங்கு வரி விதிக்க வேண்டும்.
ஒரு ஆண் குடிக்கு அடிமையானால் அதிகபட்சம் அவன் குடும்பம் பாதிக்கும். சில சமயம் அந்த வீட்டுப் பெண் நிர்வாகத்தை ஏற்றுக் குடும்பத்தை நடத்துவார். ஆனால், பெண் குடிக்கு அடிமையானால், அந்தச் சந்ததியே அழிந்து விடும். ஏனென்றால் குழந்தை பேறு, வளர்த்தலை ஒரு பெண்ணே செய்ய முடியும்.
குடிப்பழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும், உயிருக்கு மட்டும் கேடல்ல, ஆளுங்கட்சிக்கும், சினிமாவுக்கும்கூட கேடுதான்.
கட்டுரையாளர்: ஆர்.லோகநாதன்
விகடன் குழும இதழ்களில் 15 ஆண்டுகள் முழு நேர பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். நம்மாழ்வார் மீது கொண்ட பற்று காரணமாக தற்போது இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்.
படங்கள்: கூகுள் இமேஜ்
நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு: மது மட்டுமா? நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு: மது மட்டுமா? Reviewed by நமதூர் செய்திகள் on 21:44:00 Rating: 5

No comments:

Powered by Blogger.