மன்னிப்பு இல்லாத பாவம் - வி.களத்தூர் எம்.பாரூக் # தினத்தந்தி 23.11.2018

கடன் இல்லாமல் வாழவே முடியாது என்ற உலகில் வாழ்ந்து வருகிறோம். இருப்பவர்களும் சரி இல்லாதவர்களும் சரி எல்லோருமே கடனுடனே தங்கள் வாழ்வை பிணைத்துக்கொள்கிறார்கள். திருமணத்திற்கு, தொழில் தொடங்குவதற்கு; விரிவடைவதற்கு, அன்றாடத் தேவைகளுக்கு, வீடு கட்டுவதற்கு, வாகனம் வாங்குவதற்கு இப்படி எல்லாவற்றிற்கும் கடன் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. 

எப்படி தண்ணீர் இல்லாமல் வாழ முடியாதோ அதுபோல் கடன் இல்லாமலும் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. கடன் வாங்கும்போது இருக்கும் அக்கறை திருப்பி செலுத்துவதில் இருப்பதில்லை. அதனாலேயே பலர் கடன் கொடுக்க தயங்குகின்றனர். பல கடைகளில் 'கடன் அன்பை முறிக்கும்' என்று எழுதியிருப்பதை பார்த்திருக்கலாம். கடன் கொடுத்து சிக்கிக்கொண்டதின் விளைவால் வந்ததுதான் அந்த வாசகம். கடன் கொடுக்கல்-வாங்கலில் பிரிந்த எத்தனையோ குடும்பங்கள் உண்டு. நண்பர்கள் உண்டு. 

கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதற்கு கடன் உதவுகிறது. ஆனால் கொடுத்த கடனை திருப்பி வாங்குவதில் உள்ள பிரச்சனையால் கடன் கேட்டாலே பலரும் அலறியடித்து ஓடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. கடன் ஓர் அமானிதம் ஆகும். அந்த அமானிதமான விசயத்தில் பலரும் பொடும்போக்காகவும், அலட்சியமாகவும் இருக்கிறார்கள். கடன் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றால் திருக்குர்ஆனின் நீண்ட வசனம் கடனைப் பற்றியே பேசுகிறது. அந்த வசனம் கடன் பற்றிய சட்டதிட்டங்களை மிக விளக்கமாக பேசும்.

கடன் விசயத்தில் போதிய புரிதல் பலரிடம் இல்லை. தன்னிடம் பணமிருந்தாலும் கடனை அடைக்காமல் இழுத்தடிப்பதில் பலருக்கு பேரானந்தம். "வசதியுள்ளவர் (தன் கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணைச் சொல்லி) தள்ளிப்போடுவது அநியாயமாகும்" என்று நபிகள் நாயகம் எச்சரிக்கிறார்கள். இந்த அநியாயத்தைத்தான் சிறிதுகூட சிந்திக்காமல் பலரும் செய்து வருகிறார்கள்.

கொடுத்த கடனை தனக்கு தேவைப்படும்போது திருப்பி கேட்டால் கோபித்துக் கொள்கிறார்கள். "ஏன் நம்பிக்கை இல்லையா? தரமாட்டேனா" என்று திமிருகிறார்கள். ஒன்றை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். கடனை திருப்பி கேட்பதற்கு மட்டுமல்ல கடுமையான சொற்களை பயன்படுத்துவதற்கும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. நபிகள் நாயகம் அவர்களிடம் ஒருவர் வந்து, தான் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டார். அப்போது அவர் சற்று கடுமையான வார்த்தைகளில் பேசினார். இதைக்கண்ட நபித்தோழர்கள் வருத்தப்பட்டனர். அதற்கு நபிகள் நாயகம் "அவரை விட்டுவிடுங்கள். பொருளுக்குரியவர் பேசுவதற்கு உரிமையுண்டு" என்று கூறினார்கள் (புகாரி 2401).

கடன் கொடுத்தவர் திருப்பிக் கேட்கும்போது உரக்க பேசினாலும்  கடன் வாங்கியவர் பொறுத்துக்கொள்ள வேண்டும். இன்று அப்படியே தலைகீழாக மாறிவிட்டது. கடன் கொடுத்தவர் பொறுமையாக கேட்கிறார். கடன் வாங்கியவர் கோபமாக பதிலளிக்கிறார். நபிகள் நாயகம் அவர்கள் கடன் விசயத்தில் மிகவும் கண்டிப்புடன் செயல்பட்டார்கள். ஏனென்றால் கடனை திருப்பி கொடுக்காமல் இருப்பது மன்னிக்க முடியாத பாவமாக இருப்பதால். கடன் விசயத்தில் அதிக பாதுகாப்பை இறைவனிடம்  வேண்டினார்கள்.

"இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று அவர்கள் கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபிகள் நாயகத்திடம் "இறைத்தூதர் அவர்களே! தாங்கள் கடன்படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புத் தேடுவதற்கு காரணம் என்ன?" என்று கேட்டதற்கு அவர்கள் சொன்னார்கள் "மனிதன் கடன்படும்போது பொய் பேசுகின்றான்; வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கின்றான்" என்று பதிலளித்தார்கள் (புகாரி 2397). 

பொய் சொல்வதும், சொன்ன தேதிக்கு தராமல் தனது வாக்குறுதியை மீறுவதும் சகஜமானதாக ஆகிவிட்டது இன்று. கடன் வாங்கும்போது திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் கொண்டிருக்க வேண்டும். நிறைய நபர்கள் 'வாங்குவோம் திருப்பி கேட்டா பேசிக்குவோம்' என்ற எண்ணத்துடனே இருக்கிறார்கள். கடனை அடைப்பதில் துளி அக்கறைகூட அவர்களிடம் இருப்பதில்லை. அப்படி ஏமாற்றி சேர்க்கும் அந்த செல்வம் நீடித்து நிலைக்காது என்பதை ஏமாற்ற நினைப்பவர்கள் உணர்வது நல்லது. மக்களின் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்ற எண்ணத்தை எவன் கொண்டிருக்கிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே திருப்பி செலுத்துவான். எவன் ஏமாற்ற நினைக்கிறானோ அதை அழித்துவிட எண்ணுகிறானோ அவனை அல்லாஹ்வே அழித்துவிடுவான் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. 

கடன் இருப்பவர்களுக்கு  ஜனாஸா  தொழுகையைகூட நபிகள் நாயகம் அவர்கள் வைக்கமாட்டார்கள். தொழுகை நடத்துவதற்காக ஒரு ஜனாஸா கொண்டு வரப்பட்டது. "இவர் கடனாளியா?" என்று கேட்கிறார்கள். "இல்லை" என்றனர் நபித்தோழர்கள். அவருக்கு தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு  ஜனாஸா  கொண்டு வரப்பட்டபோது "இவர் கடனாளியா" என்று கேட்டார்கள் நபிகள் நாயகம். நபித்தோழர்கள் "ஆம்" என்றனர். "அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்" என்றார்கள். அப்போது அபூகதாதா (ரலி) "இறைத்தூதர் அவர்களே! இவரின் கடனுக்கு நான் பொறுப்பு" என்று கூறியதும் அவருக்கு நபிகள் நாயகம் தொழுகை நடத்தினார்கள் (புகாரி 2289).

கடன் என்பது மன்னிக்க முடியாத பாவமாகும். அதனால்தான் கடனாளியின் ஜனாஸா தொழுகையைக்கூட நபிகள் நாயகம் வைக்க மறுக்கிறார்கள். கடன் என்பது ஒருவரை மட்டும் பாதிக்கச் செய்யாது. தனக்கு உதவிய மற்றொருவரையும் அது பாதிக்கச் செய்கிறது. அவர் மன்னிக்காத வரை அதன் பாவத்தை சுமந்துதான் ஆக வேண்டும். இறைவனின் வழியில் போரிட்டு கொல்லப்படுபவர்களுக்கு சஹீத் அந்தஸ்து கிடைக்கும். அவனுடைய ஒரு சொட்டு இரத்தம் கீழே விழுவதற்குள் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பது அதன் சிறப்பு. ஆனால் அந்த சஹீதிற்குகூட எல்லா பாவங்கள் மன்னிக்கப்பட்டாலும் கடனிற்கு மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது. கடனை அடைக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம்.

"உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திரும்பிச் செலுத்துகின்றாரோ அவரே உங்களில் சிறந்தவர்" என்று நபிகள் நாயகம் உரைக்கின்றார்கள். மனிதர்களில் சிறந்தவராக இருக்க வேண்டும் என்றால் கடன் விசயத்தில் நேர்மையை கடைபிடிக்க வேண்டும்.  தேவைக்கு எப்படி அக்கறையுடன் கடன் பெறுகிறோமோ அதனைவிட அதிக அக்கறையை கடனை திருப்பி செலுத்துவதிலும் காட்டிட வேண்டும். அப்படி ஒரு அக்கறையை காட்டுபவனே சிறந்தவன். 

- வி.களத்தூர் எம்.பாரூக்  
நன்றி : தினத்தந்தி 23.11.2018
மன்னிப்பு இல்லாத பாவம் - வி.களத்தூர் எம்.பாரூக் # தினத்தந்தி 23.11.2018 மன்னிப்பு இல்லாத பாவம் - வி.களத்தூர் எம்.பாரூக் # தினத்தந்தி 23.11.2018 Reviewed by நமதூர் செய்திகள் on 00:12:00 Rating: 5

No comments:

Powered by Blogger.