மூன்று மாநில முதல்வர்கள்: கருத்து கேட்கும் ராகுல்

மூன்று மாநில முதல்வர்கள்: கருத்து கேட்கும் ராகுல்

5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மூன்று மாநில முதல்வர்கள் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படாமலே உள்ளது.
மூன்று மாநிலங்களிலும் முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. மத்திய பிரதேசத்தில் கமல்நாத் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா போட்டியில் உள்ளனர். ராஜஸ்தானில் சச்சின் பைலட், அசோக் கெலாட் போட்டியில் இருக்கிறார்கள். சத்தீஸ்கரில் தம்ராத்வாஜ் சாஹு, பூபேஷ் பாகல் மற்றும் டி.எஸ்.சிங் தியோ ஆகியோர் முதல்வர் போட்டியில் உள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் யாரை முதல்வராகத் தேர்வு செய்யலாம் என ஏ.கே. அந்தோணி மற்றும் ஜித்தேந்தர் சிங் இருவர் முன்னிலையில் நேற்று எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் எம்எல்ஏக்களின் தேர்வாகக் கமல் நாத் இருக்கிறார் என்று தகவல் வெளியானது.
அதுபோன்று சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தினர். நேற்று இரவு வரை ஆலோசனை நடந்ததாகவும், அந்த ஆலோசனை தொடர்பான அறிக்கை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. அதன்படி, முதல்வராக யாரை நியமிப்பது என்று ராகுல் காந்திதான் முடிவு செய்வார் என்று அக்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், 7.3 லட்சம் தொண்டர்கள் பயன்படுத்தி வரும் சக்தி ஆப் மூலம் யாரை முதல்வராக நியமிக்கலாம் என்று தெரிவிக்கும்படி ராகுல் கேட்டுள்ளார். “உங்கள் மாநிலத்தில் யார் முதல்வராக வர வேண்டும் என்று கூறுங்கள். ஒரு நபரை மட்டும் சொல்லுங்கள். நீங்கள் சொல்வது வெளியே தெரிவிக்கப்படாது. ரகசியம் காக்கப்படும்'' என்று அந்த ஆடியோவில் கூறுகிறார். அந்த ஆடியோவைத் தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல், “எம்எல்ஏக்கள், தொண்டர்கள் எனப் பலரிடமும் முதல்வராக யாரை நியமிப்பது என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. விரைவில் மூன்று மாநில முதல்வர்கள் யார் யார் என அறிவிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
https://minnambalam.com/k/2018/12/13/59
மூன்று மாநில முதல்வர்கள்: கருத்து கேட்கும் ராகுல் மூன்று மாநில முதல்வர்கள்: கருத்து கேட்கும் ராகுல் Reviewed by நமதூர் செய்திகள் on 00:07:00 Rating: 5

No comments:

Powered by Blogger.