தெஹ்லான் பாகவி ஏன் வெற்றிபெற வேண்டும்?



கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி SDPI கட்சியின் தேசிய துணைத் தலைவர். 25 ஆண்டுகால பொதுவாழ்க்கைக்கு சொந்தக்காரர். எளிமையானவர். இத்தனை ஆண்டுகால பொதுவாழ்வில் எந்த குற்றமும் காண முடியாத தூய்மைக்கு சொந்தக்காரர். அனைத்து அரசியல் இயங்கங்களின் தலைவர்களிடமும் நட்பு பேணி வருபவர். அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் தமிழக பிரதிநிதி. மார்க்கக் கல்வி கற்ற ஆலிம் பெருந்தகை. புகழ்பெற்ற வேலூர் பாக்கியத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கல்லூரியில் பாகவி பட்டம் பெற்றவர். பள்ளிவாசலில் இமாமத் பணியில் சில ஆண்டுகள் பணியாற்றியவர். மௌலவி ஒருவர் அரசியலில் பங்கெடுப்பதே அரிதாக இருந்த நிலையில் ஒரு தேசிய கட்சியின் தமிழக தலைவராக பத்தாண்டுகள் தடம் பதித்தவர்.

கடந்த பத்து ஆண்டுகளில் தமிழகத்தில் SDPI கட்சியை வளர்த்தெடுத்ததில் தெஹ்லான் பாகவிக்கு தனித்த பங்குண்டு. முஸ்லிம்கள் தலைமையில் இருக்கும் கட்சிகள் முஸ்லிம்களுடைய பிரச்சனைகளை மட்டுமே பேச வேண்டும் என்று இருந்த நடைமுறை இன்று மாற்றம் கண்டுள்ளதற்கு இவரின் அயராத உழைப்பும் ஒரு காரணம். தெஹ்லான் தலைமையில் கட்சி முன்னெடுத்த போராட்டங்கள் முஸ்லிம்களின் பிரச்சனைகளைவிட பொது பிரச்சனைகளையே அதிகம் பேசியது. போராட்டங்களும் அவ்வாறே நடைபெற்றது. கட்சியில் உள்ள முஸ்லிம்களையும், மற்ற முஸ்லிம்களையும் பொதுதளத்தில் பயணிக்க வைத்ததில் தெஹ்லான் பாகவி சரியாக செயல்பட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 

ஈழத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களுக்கு பிறகு அங்குள்ளதுபோல் தமிழகத்திலும் முஸ்லிம்களுக்கும், ஈழ ஆதரவாளர்களுக்கும் ஒரு இடைவெளி இருந்து வந்தது. அந்த இடைவெளியை குறைப்பதற்கு அதிகம் மெனக்கெட்டவர் தெஹ்லான். ஈழ ஆதரவு போராட்ட தளங்களின் தன்னை இணைத்துக்கொண்டு அவர் பல இடங்களில் பேசியதை கேட்டிருக்கிறேன். பழைய கசப்புகளை மறந்து தமிழர்களாக ஒன்றிணைத்து போராட வேண்டியதன் அவசியத்தை அதில் உணர்த்திருப்பார். பிரிந்திருப்பதும், ஒருவரை ஒருவர் குற்றம் காண்பதும் இருத்தரப்பையுமே பாதிக்கச் செய்யும் என்ற எச்சரிக்கையும் அதில் கலந்திருக்கும். அதன் பொறுத்துதான் ஈழ ஆதரவு போராட்டங்களில், ஏழு தமிழர்களின் விடுதலை போராட்டங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டனர் பல முஸ்லிம் இளைஞர்கள்.

தமிழகத்தில் அதிக போராட்டங்களை நடத்திய கட்சிகளில் ஒன்றாக SDPI இருக்கிறது. மக்கள் போராட்டங்களின் மூலமே தங்கள் உரிமைகளை காத்துக்கொள்ள முடியும் என்பதே அதற்கு அடிநாதமாக இருக்கிறது. பூரண மதுவிலக்கு, சிறைவாசிகள் விடுதலை, ஏழு தமிழர்கள் விடுதலை, தாமிரபரணியை காப்பது, ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு, கூடங்குளம் அணுவுலை எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு, விளை நிலங்களில் உயர் அழுத்த மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு, ஷேல் கேஸ் எதிர்ப்பு, காயல்பட்டினம் DCW கெமிக்கல் ஆலை எதிர்ப்பு, நாகூர் மார்க் துறைமுகம் நிலக்கரி இறக்குமதிக்கு எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு என தமிழகத்தை சுடுகாடாக்கும் எல்லா பிரச்சனைகளுக்காகவும் தெஹ்லான் பாகவி முழு ஈடுபாட்டோடு தன்னை ஈடுபத்திக்கொண்டார். அதற்காக பல போராட்டங்களை கண்டார். வேறு அமைப்புகள் நடத்திய போராட்டங்களிலும் கலந்து கொண்டு குரல் கொடுத்திருக்கிறார். மத்திய பாஜக அரசின் அனைத்து தோல்விகளையும் மக்கள் முன் அம்பலப்படுத்தும் இயக்கங்களை தொடர்ந்து நடத்தி வந்தார்.

சென்னை வெள்ளம், திருப்பூர் வெள்ளம், ஓகி புயல், கஜா புயல், தானே புயல் போன்ற பேரிடர் காலங்களில் SDPI ன் பணிகள் பலரும் அறிந்ததே. அந்தப் பணிகளில் தனது தொண்டர்களுடன் களத்தில் இறங்கி வேலை செய்தவர் தெஹ்லான் பாகவி. மழையில் நனைந்துகொண்டே பல இடங்களிலும் மக்களை சந்தித்து உதவியதை பலரும் பாராட்டி நான் கேட்டிருக்கிறேன்.

தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் மூலம் பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதில் SDPI கட்சியின் சார்பில் பங்கு கொண்டவர் தெஹ்லான். அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வேல்முருகன் அநியாயமாக கைது செய்யப்பட்டபோது கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கி  போராட்டங்களை முன்னெடுத்து சென்றார். தமிழகத்திற்காக தொடர்ந்து போராடிய போராளிகளை அடிமை அதிமுக அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. பல போராளி தலைவர்களின்மீது வழக்கு பதிவு செய்து முடக்க பார்த்தது. அந்த வகையில் பல வழக்குகள் தெஹ்லான் மீது பதியப்பட்டிருக்கின்றன.

அதுவும் கடந்த ஆண்டு மே 18 முதல் மே 23 வரையிலான 5 நாட்களில் மட்டும் 8 வழக்குகளை அவர்மீது போடப்பட்டது தமிழக அரசு. மெரினாவில் ஈழ தமிழர் படுகொலையை கண்டித்து நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்றதற்காகவும், கதிராமங்கலத்தில் நடைபெற்ற தொடர் போராட்டத்தில் பங்கேற்று உரை நிகழ்த்தியதற்காகவும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியதற்காகவும் அந்த வழக்குகள் போடப்பட்டன. 

இப்படிப்பட்ட தெஹ்லான் பாகவிதான் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் இணைந்து SDPI கட்சியின் சார்பில் மத்திய சென்னை வேட்பாளராக களத்தில் நிற்கிறார். மத்திய சென்னை தொகுதியை தேர்தெடுத்ததிலேயே அவருடைய போராட்ட குணம் வெளிப்படுகிறது. காரணம் அங்கு தொடர்ந்து போட்டியிட்டு வருபவர் கார்ப்பரேட் முதலாளி தயாநிதி மாறன் ஆவார். தற்போதும் அவரே எதிர் தரப்பில் நிற்கிறார். கார்ப்பரேட் முதலாளியா தேவையா இல்லை மக்கள் போராளியா தேவையா என்பதை மக்கள் முடிவெடுக்க இருக்கிறார்கள். எவ்வித அதிகாரத்திலும் இல்லாமலே மக்களுக்காக தம்மை அர்ப்பணித்திருப்பவர் தெஹ்லான். தேர்தலில் அவர் வெற்றி பெற்றால் எப்படி அர்ப்பணிப்போடு செயல்படுவார் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

கண்ணியமிகு காயிதே மில்லத்தின் குரல் எப்படி நாடாளுமன்றத்தில் எவ்வித சமரசமுமின்றி ஒலித்ததோ  அவ்வாறே தெஹ்லானின் குரலும் ஒலிக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. முஸ்லிம்களுக்காக மட்டுமல்லாமல் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்காகவும் போராடி வருகின்ற ஒரு களப்போராளியை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு மத்திய சென்னை வாக்காளர்களுக்கு கிடைத்திருக்கிறது. அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எம்போன்றோரின் விருப்பம். 

- வி.களத்தூர் எம்.பாரூக்
தெஹ்லான் பாகவி ஏன் வெற்றிபெற வேண்டும்? தெஹ்லான் பாகவி ஏன் வெற்றிபெற வேண்டும்? Reviewed by நமதூர் செய்திகள் on 23:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.