எஸ்.டி.பி.ஐ முன்வைக்கும் மாற்று அரசியல்! – பி. அப்துல் ஹமீது



எஸ்.டி.பி.ஐ முன்வைக்கும் மாற்று அரசியல்! – பி. அப்துல் ஹமீது
தேர்தல்கள் என்பது ஜனநாயக கட்டமைப்பில் நாட்டின் நிகழ்கால சூழல்களுக்கு மட்டுமல்ல, எதிர்காலத்திற்கும் முக்கியமானது. தேசம் மற்றும் தேச மக்கள் மீதான நமது பொறுப்புணர்வோடும், அரசியல் யதார்த்தங்களைக் குறித்த சிந்தனையோடும் எதிர்காலத்தை குறித்த பார்வையோடும் நாம் நமது வாக்குகளை பதிவு செய்யவேண்டும்.
நமது தேசம் பல்வேறு நெருக்கடிகள் மற்றும் பிரச்னைகள் மத்தியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், தேர்தல் நடைமுறை என்பது எவ்வித வீழ்ச்சியும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற்று வருவதும், குடிமக்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதும் நமக்கு ஆறுதலை தரும் விஷயங்களாகும்.
அதேவேளையில் ஜனநாயகம் என்ற கொள்கை முன்வைக்கும் நோக்கங்களை அடைவதில் நாம் பெரிய அளவில் தோல்வியை தழுவியுள்ளோம் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜனநாயக வழிகள் மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவர்கள் தங்களது பொறுப்புகளை நிறைவேற்றுவதில் கடுமையான தவறுகளை இழைத்துள்ளார்கள் என்பதுதான் அதன் பொருள்.
இந்திய சமூகம் பல வேற்றுமைகளை கொண்டது. இந்த வேற்றுமைகளை நாட்டின் சக்தியாகவும், அழகாகவும் ஏற்றுக்கொள்வது மிக முக்கியமானது. இந்த வேற்றுமைகளை தத்துவ ரீதியாகவும், செயல்ரீதியாகவும் மறுப்பவர்கள் நாட்டை ஆளத் துடிக்கின்றார்கள்.
ஆயிரக்கணக்கான வருடங்களாக இந்திய உள்ளங்களில் திணிக்கப்பட்ட சாதி ஆதிக்க உணர்வை அரசியல் வாழ்வின் அனைத்து துறைகளிலும் நடைமுறைப்படுத்த கடந்த காலங்களில் அதிகாரத்தை பயன்படுத்தியவர்கள் ஜனநாயகத்தை திரையாக உபயோகிக்கின்றார்கள்.
70 சதவீத மக்கள் தன்னம்பிக்கையும், ஆக்கத்திறனும் இழந்து அருகி வருகின்றனர். இதுதான் அரசுகள் இதுநாள் வரை கடைப்பிடித்த இலட்சியப் பணி. இதன் மூலம் சிறிய தொகையினர் நாட்டின் வளங்களையும், அதிகாரங்களையும் பங்கீடு செய்து அனுபவித்து வருகின்றார்கள் என்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் இது நாள் வரையிலான சரித்திரம் என்பதை கூறாமல் இருக்க முடியாது.
மக்களில் 40 கோடி பேர் பட்டினியால் வாடுகின்றனர். உலகில் கல்வி அறிவு இல்லாதவர்கள் இந்த தேசத்தில்தான் அதிகமாக உள்ளனர். அடிப்படை கல்வி கூட கிடைக்காமல் 4 கோடியே 20 லட்சம் குழந்தைகள் உள்ளனர். மக்களில் நான்கில் ஒருவர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.
வாழ்க்கையின் அடிப்படை வசதிகள் கூட கிடைக்காமல் தலித்துகளும், முஸ்லிம்களும் அடங்கிய கோடிக்கணக்கான மக்கள் கிராமங்களிலும், நகரங்களின் புறப்பகுதிகளிலும் வாழ்க்கையை துயரத்துடன் கழித்து வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் 12,727 பேர் போலீஸ் கஸ்டடியில் மரணித்துள்ளனர். நான்கு வருடங்களில் 555 பேர் போலி என்கவுண்டர்களில் கொல்லப்பட்டுள்ளனர். தங்களுடைய வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட பழங்குடியினரும், தலித்துகளும் மாவோயிஸ்டுகள் என்று கூறி வேட்டையாடப்படுகின்றனர்.
எந்த நிமிடமும் போலீசும், உளவுத்துறையும், ஊடகங்களும் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கி வெளியிடும் போலி தீவிரவாத நாடகங்களில் கதாநாயகர்களாக ஆக்கப்படுவோமோ என்ற பீதியில் முஸ்லிம் இளைஞர்கள் வாழ்கின்றனர். உணர்ச்சி பூர்வமான பிரச்னைகளின் முனைகளில் தேசத்தை நிறுத்தி கறுப்புச் சட்டங்களை இயற்றும் அரசுகளின் நடவடிக்கைகள் முற்றிலும் மர்மமாகவே உள்ளன.
பசியும், பயமும் இந்திய குடிமக்களை வாட்டுகிறது. இந்த இரண்டு அச்சுறுத்தல்களில் இருந்து இந்திய மக்களுக்கு விடுதலை கிடைக்காத காலமெல்லாம் ஜனநாயகத்தைக் குறித்த நமது உரிமை வாதங்கள் எல்லாம் போலியானது என்று சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கருதுகிறது.
’பசியிலிருந்து விடுதலை’, ‘பயத்திலிருந்து விடுதலை’ என்பது நாட்டின் யதார்த்த சூழல்களின் உண்மை பின்னணியை அறிந்துகொண்டு எழுப்பப்பட்ட ஒரு முழக்கமாகும். கடந்த கால அனுபவங்கள், நிகழ்கால உண்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டின் அடிமட்ட மக்கள் சொந்த கலாச்சார அடித்தளத்தில் தன்னம்பிக்கையோடு எழுச்சிப் பெற்று தேசத்தின் பொது நன்மை, தங்களது உரிமைகள் மற்றும் அதிகார பங்களிப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் ஒரு அரசியல் எழுச்சிதான் தேசத்தில் ஏற்படவேண்டும்.
அத்தகையதொரு எழுச்சியில் தலைமைத்துவ ரீதியான பங்கினை வகிக்க எஸ்.டி.பி.ஐ தயாராக உள்ளது சந்தை தயாரிப்புகளைப் போலவே கண்களை ஈர்க்கும் விளம்பர வாசகங்கள் மூலம் பா.ஜ.கவும், காங்கிரசும் ஒரே போலவே மக்களின் அறிவை மயக்கி வருகின்றன.
துதி பாடுபவர்களும், கபட அரசியல்வாதிகளும் மீண்டும் ஒரு இருள் சூழ்ந்த காலத்தை நோக்கி நம்மை தள்ள முயற்சிக்கின்றனர். இதற்கு எதிராக வலுவான ஒரு மாற்றும் அரசியலை உருவாக்குவதற்கான கொள்கை ரீதியான ஆளுமையும், செயல்ரீதியான அறிவும் எஸ்.டி.பி.ஐக்கு உண்டு.
அந்தத் தன்னம்பிக்கையுடன்தான் எஸ்.டி.பி.ஐ இந்த மக்களவை தேர்தலை சந்திக்கிறது. இந்தியாவில் ஒரு மாற்று அரசியலின் அடித்தளமாக மாறுவதற்காக தயாரான நிலையில் உள்ள எஸ்.டி.பி.ஐ, இத்தேர்தலில் மக்களின் அங்கீகாரத்தை பெறும் என்று உறுதியாக நம்புகிறது.
கட்டுரை ஆக்கம்: பி. அப்துல் ஹமீது (கேரள மாநில எஸ்.டிபி.ஐ கட்சியின்
பொதுச் செயலாளர், இந்த நாடாடுமன்றத் தேர்தலில் வடகர தொகுதியில் போட்டியிடுகிறார்.)
தமிழில்: அ.செய்யது அலீ
- See more at: http://www.thoothuonline.com/archives/64217#sthash.nrcbSKEV.dpuf
எஸ்.டி.பி.ஐ முன்வைக்கும் மாற்று அரசியல்! – பி. அப்துல் ஹமீது எஸ்.டி.பி.ஐ முன்வைக்கும் மாற்று அரசியல்! – பி. அப்துல் ஹமீது Reviewed by நமதூர் செய்திகள் on 23:54:00 Rating: 5

No comments:

Powered by Blogger.