வி.களத்தூரின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்!


நமதூரில் தற்போது அதிக நபர்களால் பேசப்படும் ஒரு கருப்பொருளாக ஒற்றுமை என்றிருக்கிறது. அந்த என்ன ஓட்டத்தில் எல்லோரும் ‘ஒற்றுமையாக’ இருக்கிறார்கள். சமீபத்தில் நமது ஊரில் உள்ள ஒரு வயதான பெரியவரிடம் பேசும்போது ஊரை பற்றி பசுமையான பழைய நினைவுகளையும், பல நிகழ்வுகளையும் அறிந்து கொள்கிற வாய்ப்பும் கிட்டியது. அனைத்தையும் பேசிவிட்டு இறுதியாக அப்போ இருந்த மாதிரி இப்போ யாரு இருக்கா, அப்போவெல்லாம் ஒற்றுமையா இருப்பாங்க. இப்ப அப்படியா என்று சலித்துகொண்டார்.
அப்படி என்றால் ஒற்றுமையின்மைதான் நமதூரின் பிரச்சனையா? இன்னும் கூடுதலாக சில பேர் அமைப்புகள் வந்த பிறகுதான் நமக்குள் பிரச்சனை வந்ததாகவும், வேறு சிலபேர் ஒட்டுமொத்த இளைஞர்களால்தான் பிரச்சனை அவர்களிடம் பக்குவம் இல்லை என்பதாக கூறுவதை நாம் காண்கிறோம்.
இந்த அமைப்புகளும், இளைஞர்களும் வளர்வதற்கு முன்பு இங்கு ஒற்றுமை இருந்ததா? பிரச்சனை வந்ததில்லையா? அப்போதும் பல பிரச்சனைகள் இருந்தது வேறு வகையில். ஜமாத்தை விமர்சித்து மொட்டை கடிதாசி அடித்தது, பல ஆண்டுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஜமாத்தின் சார்பாக ஒருவரை நிறுத்த முடியாமல் பல நபர்கள் பிரிந்து நின்றது என சொல்லிக்கொண்டே போகலாம்… ஆனால் அது இந்த கட்டுரையின் நோக்கத்தை திசை திருப்பிவிடும்.
நமதூரின் முன்னேற்றத்திற்கு இங்கு செயல்படும் அமைப்புகளை ஒழித்துவிட்டால் போதும் என்று சிலர் பேசுவதை காண்கிறேன். உண்மையில் அது எந்த தீர்வையும் தராது. இன்று அமைப்புகளால் என்று சொல்பவர்கள், அன்று தனிப்பட்ட நபரையோ, ஒரு குழுவையோ சொல்வார்கள். ஆக பிரச்சனை என்பது இருக்கத்தான் செய்யும்.

இன்று கல்வி முன்னேற்றத்தாலும், பொருளாதார முன்னேற்றத்தாலும் நான் ஏன் அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும், அவர்களுக்கு எதற்கு கட்டுப்பட வேண்டும் என்ற எண்ணம் சிலரிடம் இருப்பதாகவே கருதுகிறேன்.
நமதூரில் செயல்படும் எல்லா அமைப்புகளில் இருப்பவர்களையும் கூட்டினால்கூட 500 பேரை தாண்டாது. மீதி உள்ள ஆயிரக்கணக்கான மக்களை, அமைப்புகளை குறைகாண்பவர்களால் ஒன்றுபடுத்த முடியவில்லை?. அது ரொம்ப கடினம். இன்று அமைப்பாககூட எளிதாக திரண்டுவிடலாம். அமைப்பில் இல்லாதவர்களை ஒன்று திரட்டுவதுதான் சிரமம்.

சரி விசயத்திற்கு வருவோம். நமதூரில் ஒற்றுமைக்கு சாத்தியமில்லை என்று சொல்வது இந்த கட்டுரையின் நோக்கமில்லை. அதற்கான பாதையை தேடாமல் சும்மா யார் மேலாவது குற்றம் சொல்லி தப்பித்து கொள்ளலாம் என்று நினைப்பதைதான் தவறு என்கிறேன். இன்று “பிரச்சனைக்குரிய” ஒரு விசயத்தில் மட்டும்தான் பலர் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே ‘பிரச்சனைகள்’ தொடர் கதையாகி வருகின்றன. நமதூரில் இருக்கக்கூடிய பிரச்சனை அதுமட்டும்தானா? மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் வேறு ஏதும் இல்லையா?

இருக்கிறது. நிறைய இருக்கிறது. அதில்தான் நமது கவனத்தை திருப்ப வேண்டும். அந்த கோரிக்கைகளை, போராட்டங்களை  ஒற்றுமைக்கான களமாக மாற்ற வேண்டும். நாம் ஒன்று சேர்ந்து தீர்க்க வேண்டிய ஏராளமான பிரச்சனைகள் நமக்குமுன் உள்ளன.

நமதூரில் மது, மாது, வட்டி, வரதட்சனை என சமூக சீரழிவு பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்கு நாம் முயற்சி செய்யாமல், கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். கடந்த ஜும்மாவில் “தாய் இல்லாத மகளின் திருமணத்திற்கு உதவி செய்யுங்கள் பாவா” என்று பெரியவர் பள்ளிவாசலில் நின்று உதவி கேட்டுக்கொண்டிருந்தாரே, அதை யாராவது கவனித்தோமா? அவருடைய நிலைமைக்கு நாமும் ஒரு காரணம் என்ற குற்ற உணர்ச்சி நமக்கு இல்லையா? இஸ்லாம் வலியுறுத்தும் ஜகாத்தை நாம் சரிவர நிறைவேற்றததால் இதுபோன்ற நிலைமைகள் அதிகரித்து வருகின்றன. வரதட்சணை கொடுமையினால் இன்று எத்தனை சகோதரிகளின் வாழ்வு கேள்விக்குறியாகின்றன.

அதை முழுமையாக தடுக்க நம்மால் முடியாவிட்டாலும், ஏன் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளைகூட நாம் எடுப்பதில்லை. ‘நான் சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்தவன்தான்’ என்று மணமகனிடம் சத்தியம் வாங்க தெரிந்த நமக்கு, ஏன் ‘நானும், எனது குடும்பத்தாரும் வரதட்சணை வாங்கவில்லை’ என்று மணமகனிடம் சத்தியம் வாங்க முடியவில்லை. அது ஓரளவாவது வரதட்சணை கொடுமையை குறைக்கும் அல்லவா!

இன்று இளைஞர்கள் சிலர் எளிமையான திருமணத்தை விரும்பி நிச்சயம் போன்ற தேவை இல்லாத விசயங்களை வேண்டாம் என்று வெறுத்தாலும், நீங்கள் நிச்சயம் செய்துதான் ஆகவேண்டும் நாம் தீர்மானிப்பது எந்த வகையில் நியாயம்.
அடுத்து நமதூரில் இருக்கக்கூடிய ஒரே வங்கி IOB. பணம் எடுக்க போறவன் செத்தான் என்ற நிலைமையில்தான் உள்ளது. அந்த அளவிற்கு எப்ப பார்த்தாலும் கூட்டம். மறுபக்கம் அங்கு வேலை செய்பவர்களின் அலட்சியம். சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரிடம் எனது கணக்கில் பணம் செலுத்த சொல்லும்போது “என்ன வேலைன்னாலும் சொல்லு, அங்க மட்டும் போக சொல்லாதே” என்று சொன்னான். அந்த அளவிற்கு அந்த வங்கியின் நிலைமை உள்ளது. இதனால் மக்களுக்கு ஏற்படும் நேர இழப்பு அதிகம். அதற்காக வேறு ஒரு வங்கி கொண்டு வருவதற்கான முயற்சிகளை நாம் ஒன்றுபட்டு செய்யக்கூடாதா?

நமதூரில் இயங்கிவர கூடிய ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தி +2 வரை இயங்க கூடிய மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதும், நமதூருக்கு ஒரு அரசு கல்லூரியை கொண்டு வந்தால் நமது மக்களின் கல்வி தரமும், நமது ஊரின் பொருளாதார வளமும் உயருமள்ளவா, அதற்கு ஏன் நாம் ஒன்றுபட்டு செயல்படக்கூடாது. (இந்த கல்லூரி விசயத்தில்கூட மாவட்ட ஆட்சியர், நீங்கள் இடம் தந்தால் உங்கள் ஊரில் கல்லூரி கட்டி தருவதாக வாக்கு கொடுத்திருப்பதாக அறிகிறேன். அதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி யாரும் விவாதித்தாககூட தெரியவில்லை)
அதேபோல ஆரம்ப சுகாதார நிலையத்தை எல்லா வசதிகளும்கூடிய அரசு மருத்துவமனையாக உயர்த்துவது, ஏரியை தூர் வாருவது, கல்லாற்றில் வரும் தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணை கட்டுவது, டாஸ்மாக் கடையை நமதூரிலிருந்து அப்புறப்படுத்துவது, புதிய பேருந்துகளை விட வழிவகை செய்வது, நமதூரிலிருந்து இந்திரா நகர் வரை தரமான சாலைகளை அமைப்பது, துறைப்பாடு பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைப்பது, நமது நீர்வளத்தை கெடுக்கும் கருவேல மரங்களை வேரோடு அழிப்பது, சுகாதார கேடுகளை உருவாக்கும் குப்பைகள் பிரச்சனைக்கு மாற்று வழி காண்பது, இளைஞர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவது, வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு உதவுவது, அரசு வேலைகள் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது.

என பல்வேறு மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் இருக்கின்றன (எனக்கு தெரிந்த வகையில்). இதெல்லாம் நான் புதியதாக கூறவில்லை. பலர் பல காலமாக கோரிக்கை வைத்து வருபவைதான். ஆகவே “ஒரு பிரச்சனைக்காக” பல பிரிவுகளாக பிரிந்து இருப்பதை விட, பல பிரச்சனைகளுக்காக ஒன்று சேர்ந்து போராடுவதில் என்ன தடை நமக்கு?

முதலில் மக்களை பாதிக்ககூடிய இதுபோன்ற பிரச்சனைகளில் நம்மை நாம் ஒன்றுபடுத்திகொள்ள வேண்டும். இதற்கு யாரும் இணங்கி வர மாட்டார்கள் என்று சொல்ல முடியாது. இது ஒட்டுமொத்த ஊரின் வளர்ச்சிக்கும், மக்கள் நலனுக்குமான விஷயங்கள். அடுத்த தலைமுறை வரை பயன்பெறப் போகும் கோரிக்கைகள்.

எனவே நாம் ஊரின் பொதுவான பிரச்சனைக்கு ஒன்று சேர்ந்து செயலாற்ற முயற்சி செய்ய வேண்டும். அதுதான் நமது ஊரின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என்று உறுதியாக நம்புகிறேன்!

அதை விடுத்து ஒரே இடத்தில நின்று கொண்டு நான் சொல்வதுதான் சரி, மற்றவர்கள் சொல்வதெல்லாம் தவறு என்ற நிலைப்பாடு யார் கொண்டிருந்தாலும், அதனால் யாருக்கும் எந்த உபயோகமும் ஏற்படப்போவது இல்லை.
– வி.களத்தூர் பாரூக்
வி.களத்தூரின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்! வி.களத்தூரின் முன்னேற்றத்திற்காக ஒன்றுபடுவோம்! Reviewed by நமதூர் செய்திகள் on 07:05:00 Rating: 5

No comments:

Powered by Blogger.