தமிழக அரசியல் – வலை விரித்து நிற்கும் எத்தர்கள்
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதும் ஒரு அரசியல் வெற்றிடம் தமிழகத்தில் உருவானது. அந்த வெற்றிடத்தை கவ்வ நினைத்த ஃபாசிச எத்தர்களும் அவர்கள் நீக்கமற நிறைந்திருக்கும் ஊடகமும் துரிதமாக களமிறங்கினார்கள். பா.ஜ.க வை பூதாகரமாக காட்டினார்கள். அ.தி.மு.க vs பா.ஜ.க என்றார்கள். இங்குதான் இவர்களின் சூட்சுமம் வெளிப்படுகிறது.
பா.ஜ.க வை இவர்கள் ஆதரிக்கிறார்கள் என்றால் குறைந்த பட்ச நியாயமாக இந்த சூழ்நிலையில் தி.மு.க vs பா.ஜ.க என்றுதானே சொல்லியிருக்க வேண்டும். நெருக்கடியில் நிற்பது அ.தி.மு.க தானே?. ஆனால் இவர்கள் அ.தி.மு.கவை தாங்கிப் பிடித்து தி.மு.க அழிந்து விடும் எனப் பிரஸ்தாபித்தார்கள். தி.மு.க இடத்தில பா.ஜ.கவை வைக்க ஆசை கொண்டார்கள்.
நாளுக்கு நாள் வாய் சவடால் அதிகரித்தது. நாள் தோறும் லட்சக் கணக்கில் தொண்டர்கள் காவிக் கட்சியில் சேருகிறார்கள், அது விரைவில் கோடியை தொட்டு விடும் என்றார்கள். ‘ மோடி ஆட்சியல் கோடி உறுப்பினர் ‘ என்று அலம்பினார்கள். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வரை இவர்களின் இந்த வாய் வீச்சு தொடர்ந்தது. இடைத்தேர்தல் முடிவு வந்தது. பித்தம் தெளிந்தது. சாயம் போன நரியைப் போல் ஆனார்கள் கலவரக் கட்சியினரும் அவர்களுக்கு ஒத்து ஊதியவர்களும்.
அ.தி.மு.க வென்றதை விட தி.மு.க பெற்ற வாக்கு அவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. அதை விட அவர்களின் அபிமான பா.ஜ.க பெற்ற வாக்கு நாக்கை புடுங்க வைத்தது. வாலை சுருட்டினார்கள். ஸ்டாலினின் எழுச்சியும் இவர்களை மிரட்டியது. தங்களது பச்சோந்தித்தனத்தை இப்படி வெளிப்படுத்தினார்கள். ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு சிறப்பு நிகழ்ச்சியை தந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். தலைப்பு ‘அடுத்த வாரிசு’.
ஸ்டாலினை மெச்சோ மெச்சென்று அதில் மெச்சினார்கள். பார்ப்பது கலைஞர் டி.வி.யா? அல்லது தந்தி டி.வி.யா? என்று நமக்கு சந்தேகம் வரும் அளவு அதில் ஸ்டாலின் புகழ் பாடினார்கள். இப்படியாக இவர்களின் காவிக் கனவை ஸ்ரீரங்கம் இடைதேர்தல் கலைத்தது. தமிழகம் இன்னமும் அ.தி.மு.க அல்லது தி.மு.க பக்கம்தான் என்பதை பறைசாற்றியது.
இவர்களின் அதிர்ச்சியை அதிகரிக்கும் வண்ணம் மற்றொரு நிகழ்வு தமிழகத்தில் நடந்தது. தாலி பற்றிய சர்ச்சையில் புதிய தலைமுறை அலுவலகம் மீது குண்டு வீசினார்கள். இந்து மக்கள் மத்தியில் கதாநாயகர்கள் ஆவதற்கு நல்ல வாய்ப்பு என்று மகிழ்ந்தார்கள். ஆனால் திராவிடர் கழகம் அதற்கெதிராக களம் இறங்கியதும் கலங்கினார்கள்.
ஆசிரியர் வீரமணி அவர்களை அழைத்து அவர்களை சிறுமைப்படுத்த நினைத்தார்கள் தங்கள் முகவர்கள் பணியாற்றும் தந்தி தொலைக்காட்சி வாயிலாக. திராவிடர் கழகம் சீறியது. இவர்களின் பித்தலாட்டத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது. மீண்டும் பணிந்தார்கள். ஆசிரியர் வீரமணி அவர்களின் மறுப்பை வெளியிட்டார்கள். அவர்களின் தொலைக்காட்சியிலேயே திராவிடர் கழகத்திற்கு பெருவாரியான மக்கள் ஆதரவு இருக்கும் கருத்துக் கணிப்பை வெளியிடும் அவல நிலை ஏற்பட்டது.
பின்னர் திராவிடர் கழக நிகழ்ச்சியை சீர்குலைக்க ஆட்டோவில் ஆயுதங்களுடன் சென்றார்கள். தர்ம அடி பட்டு திரும்பினார்கள். கடுப்பைப் போக்க கருப்புச் சட்டை கிழிப்பு போராட்டம் அறிவித்தார்கள். ஒருக் கருப்பு புரட்சி, எழுச்சி தமிழகத்தில் ஏற்பட வழி வகுத்தார்கள். இந்தப் பரிவாரங்களை தவிர்த்து அனைத்துக் கட்சியினரும் இந்தக் கறுப்புப் புரட்சியில் இணைந்தார்கள். உண்மையில் தமிழகம் ஒரு சிலிர்ப்பு சிலிர்த்தது. பெரியார் அண்ணா ஊற்றி வளர்த்த திராவிட உணர்வு இன்னும் பட்டுப் போய் விடவில்லை என்பதை இந்த நிகழ்வுகள் உணர்த்தின.
இதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க வை சேர்ந்த மூத்த உறுப்பினர், திராவிடப் பெரியவர் பழ.கருப்பையா அவர்கள் ஒருக் கட்டுரை வரைந்தார்கள். ‘புலியை இடறுகிறார்கள்’ என்ற தலைப்பில். உறுமலான அந்தக் கட்டுரையை முத்தாய்ப்பாய் இப்படி முடித்திருந்தார்கள்.
” தமிழ்நாடு பார்ப்பனர் -பார்ப்பனரல்லாதார் என்று பிரித்துப் பார்த்து வளர்ந்த நாடு.
பெரியார் அதை விரிவுபடுத்தித் திராவிட உணர்வை ஊட்டினார். மார்க்கத்தால் வேறுபட்ட இசுலாமியர்களும், கிறித்தவர்களும் தமிழ்ச் சமயத்தவர்களும் இனவழி ஒருவரே என்பது அதன் பொருள்” . (நக்கீரன்)
இந்த பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் என்பதைத்தான் இந்துக்கள்-இந்துக்கள் அல்லாதவர் என்று மாற்ற தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார்கள்.
இப்படி இந்த ஃபாசிஸ்ட்டுகள் தமிழகத்தில் தனிமைப் பட்டு நின்ற நேரத்தில் தான் ஜெயலிதாவின் விடுதலை தீர்ப்பு வெளியாகிறது. உடனே சுதாரிக்கிறார்கள். அதற்கு முன்பு பல வேலைகள் திரை மறைவில் அல்ல பகிரங்கமாக நடந்தன. சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் அவரைத் தொடர்ந்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லியும் போயஸ் தோட்டத்திற்கு படையெடுத்தனர். அம்மையாரின் நெருக்கடியை தங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக பார்த்தனர் இந்த ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்கள்.
ஊழலுக்கு எதிராக கடந்த பாராளுமன்ற தேர்தலில் அவதாரம் எடுத்த இந்த யோக்கிய சிகாமணிகள்தான் அந்த முகமூடியை ‘சவப்பெட்டி’யில் அடக்கம் செய்து விட்டு வெக்கமில்லாமல் அம்மையாரிடம் பேரம் பேசினார்கள்.
சட்டசபை தேர்தலில் கணிசமான தொகுதிப் பங்கீடும் ஜெயித்தால் துணை முதல்வர் பதவியும் என்பதுதான் இந்தத் தீர்ப்பின் பின்னாலிருக்கு பேரம் என்று பல உறுதிப்படுத்தப் படாத தெரிவிக்கின்றன. தீர்ப்பு வந்ததும் விழிப்படைந்தார்கள் காவி மற்றும் ஊடக கூட்டணியினர். நேற்று வரை அம்மையாரை தூற்றிய வாய் இன்று புகழ்ந்தது. தமிழிசை, பொன்.ரா, இல.கணேசன் என்று ஒருவர் பின் ஒருவராக அம்மையாருக்கு லாவணி பாடினார்கள்.
அம்மையாரின் தயவால் தமிழகத்தில் சில பல இடங்களை அள்ளலாம் என்று இவர்கள் போட்ட கணக்கு நீதிமான் குமாரசாமியின் கணக்கால் தப்புத் தாளமாகி நிற்கிறது. இப்போது மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பரிதவிக்கின்றனர். எனினும் தங்கள் ஊடகப் பிரசாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள்.
மீண்டும் தி.மு.க. இனி தலை எடுக்காது என்ற தங்கள் வழமையான பல்லவியை பாடத் துவங்கி இருக்கிறார்கள். இவர்கள் தி.மு.க வை தூற்றும் காரணம் எளிமையானது. திராவிட இயக்கத்தின் மிச்ச சொச்ச கொள்கைகளை பேணி வரும் கட்சி தி.மு.க தான். தி.மு.க அண்ணாவால் நேரடியாக உருவாக்கப் பட்டது. கொள்கை மற்றும் சித்தாந்தப் பின்புலம் கொண்டது. அ.தி.மு.க சினிமாக் கவர்ச்சியில் முகிழ்ந்த கட்சி. இன்று வரை அந்தக் கவர்ச்சியே அந்தக் கட்சியை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் அ.தி.மு.க வில் தங்கள் காவி சித்தாந்தத்தை நுழைத்து போல் தி.மு.க வில் அவர்களால் செய்ய முடியவில்லை. அதை ஒருத் தொல்லையாக பார்க்கிறார்கள். அதனால் அதன் அழிவை விரும்புகிறார்கள்.
தி.மு.க தவறுகள் பல செய்த கட்சிதான். ஆனால் அந்தத் தவறுகளுக்கு இந்த வேத விற்பன்னக் கூட்டத்தினர் பொழிப்புரை வழங்க வரும்போது இந்தப் பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆனால் இவர்களுக்கெதிராக தீவிர அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தி.மு.க வோ பம்முகிறது. வெறும் அ.தி.மு.க எதிர்ப்புக் கட்சியாக தன்னை குறுக்கிக் கொள்கிறது. எச்.ராஜாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதும் தமிழ் விரோதி சுவாமிக்கு வெத்திலை பாக்கு வைப்பதும் என சரணாகதி அரசியல் நடத்துகிறது. தி.மு.க பம்முகிறது என்பதை விட இவர்களுக்கிருக்கும் அசுரத் தனமான ஊடகக் கூட்டணி பலம் தி.மு.க வை பம்ம வைக்கிறது என்பதே பொருத்தமாக இருக்கும். தி.மு.க எவ்வளவு இறங்கினாலும் அவர்களுக்கு தி.மு.க மேல் உள்ள வெறுப்பு மறையாது. கலைஞர் அடிக்கடி குறிப்பிடுவதை போல அது ஜென்மப் பகை. இதை தி.மு.க உணர வேண்டும்.
தமிழக அரசியலில் இந்தத் தொடர் நிகழ்வுகளில் நாம் கவனம் குவிக்க வேண்டிய முக்கியப் புள்ளி ஒன்றுதான். அது அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி வாய்ப்பு பற்றியதுதான். தமிழகத்தில் செல்லாக் காசாக நிற்கும் பா.ஜ.க. அம்மையாரின் வழக்கை பயன்படுத்தி வெறுப்பரசியலை இங்கே வேரூன்ற ஒரு வாய்ப்பை எதிர்பார்க்கிறது. வலை விரித்து நிற்கிறது.
இந்த அபாயத்திற்கெதிராக நமது அக்கப் பூர்வமான பணிகளை முழு மூச்சுடன் முன்னெடுக்க வேண்டிய கட்டத்தில் நாம் நிற்கிறோம்.
இதையும் படியுங்கள் :
- முஹம்மது ஃபைஸ் - See more at: http://www.thoothuonline.com/archives/73284#sthash.KetgDKFF.dpuf
தமிழக அரசியல் – வலை விரித்து நிற்கும் எத்தர்கள்
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:57:00
Rating:
No comments: