தமிழ் இசுலாமிய வரலாறு - பண்பாட்டு வேர்களை தேடி...
ஆர்.எஸ்.எஸ் தனது கைப்பாவையான மோடியை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த பின்பு இந்திய வரலாற்று ஆவணங்களில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. புராணங்களில் வரலாறுகளைத் தேடும் பிற்போக்கான வரலாற்று ஆய்வாளர்கள் மூலமாக இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. மிகவும் ரகசியமாக நடந்து வரும் இந்த வேலையின் ஊடாக இந்திய சமுகத்தில் இருந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் வரலாறுகள் முற்றிலும் திரிக்கப்பட்டு பார்ப்பனியமயமான வரலாறு வளரும் தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதனால் புராணங்களிலும் இதிகாசங்களிலும் உள்ள கட்டுக்கதைகளை வளரும் இந்திய சமூகம் உண்மை வரலாறாகப் படிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதன் மூலம் வெறிப்பிடித்த ஓர் ஆதிக்க சக்தியின் கீழ் மீண்டும் இந்திய மக்கள் அடிமைப்படக் கூடிய சூழ்நிலை உருவாகும்.
இதில் இசுலாமிய கிருத்துவ தலித் உட்பட பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் வரலாறுகள் முற்றிலும் திரிக்கப்பட்டு அந்த சமூகத்தைச் சார்ந்த குழந்தைகளுக்கே தங்களது சமூகம் தொடர்பான தவறான திரிபுகள் கற்பிதம் செய்யப்படுகிறது. இந்த அபாயகரமான சூழ்நிலை குறித்து சிறிதும் விழிப்புணர்வு கொள்ளாமல் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் குறிப்பாக இசுலாமிய சமூகத்தைச் சார்ந்த மக்கள் தங்களுக்குள்ளேயே கருத்து மோதல்களில் ஈடுபட்டு அந்த சுகத்திலேயே ஒருவிதமான மந்த நிலையில் காணப்படுவது மிகப் பெரிய ஆபத்தின் அறிகுறியாகவே தெரிகிறது.
இசுலாமிய சமூகத்திற்கிடையே மாற்றுச் சிந்தனையுடன் செயல்பட்டு வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு ஒரு உத்வேகமான திருப்பத்திற்கு துவக்கம் குறித்துள்ளது. அந்த அமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் 110 இடங்களில் மக்கள் சங்கமம் என்ற பெயரில் ஏரியா மாநாடுகள் நடந்து வருகிறது. நெல்லை மாவட்டம் தாமிரபரணி கரையோரமான மேலப்பாளையத்தில் துவங்கிய இந்த மாநாடுகளின் முக்கிய நோக்கமே தமிழ் முஸ்லீம் சமூகத்தின் வரலாறுகளை மீள் உருவாக்கம் செய்வதுதான்.
இந்த மாநாடுகளில் சிலவற்றில் மட்டும் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதில் முக்கிய நிகழ்வாக அமைக்கப்பட்டிருந்த வரலாற்று கண்காட்சிகளில் ஆச்சரியப்படக்கூடிய அளவிற்கு உள்ளூர் முசுலீம் சமூகத்தின் வரலாறுகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முசுலீம்கள் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பாக மதம் மாறியவர்கள் என்று பரப்புரை செய்து வரும் வேளையில் ஒவ்வொரு சிற்றூர்களிலும் முசுலீம்களின் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான வரலாற்றை ஆதாரங்களுடன் காட்சிக்கு வைத்திருந்தார்கள். மேலப்பாளையம் முசுலீம்கள் என்றால் வன்முறையாளர்கள், குண்டு வைப்பவர்கள் என்று கற்பிதம் செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில் மேலப்பாளையம் முசுலீம்களின் ஆயிரம் ஆண்டு கால வரலாறு மிகவும் அழகாக சித்தரிக்கப்பட்டிருந்தது. தமிழ் சமூகத்திற்கும் இந்திய சமூகத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்கு முற்றிலும் மறைக்கப்பட்ட சூழ்நிலையில் வரலாற்று ஆய்வு தளத்தில் இந்த கண்காட்சி மிகவும் வியப்பாகவே பார்க்கப்படுகிறது.
இசுலாமிய சமூகத்தில் நினைவுச் சின்னங்கள் குறித்து சோர்வான மனநிலைகளை உருவாக்கும் வஹ்ஹாபிய சிந்தனையாளர்கள் தமிழகத்தில் உள்ள இசுலாமியர்களின் அடையாளச் சின்னமான தர்ஹாக்களை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று பரப்புரை செய்து வரும் வேளையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தர்ஹாக்களை முசுலீம் சமூகத்தின் வரலாற்று அடையாளமாகவே காண்பதாக அதன் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். முசுலீம் சமூகம் இந்தியாவில் தொன்மையாக வாழ்ந்து வந்ததற்கான அடையாளங்களே நினைவு சின்னங்கள்தான். இதனால்தான் குஜராத் கலவரத்தின் போது மோடி அரசு பள்ளிவாசல்களை விட்டுவிட்டு தர்ஹாக்களை இடித்து தரைமட்டமாக்கியது. கி.பி.1800 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இந்த வஹ்ஹாபிய கொள்கைக்கு வித்திட்டவரான முகம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் நஜ்தி மக்கா மற்றும் மதீனாவில் உள்ள பல்வேறு வரலாற்று அடையாளங்களை அழித்தொழித்தார். இந்த வரலாற்று அடையாளங்களை அழிப்பதன் மூலமாக இசுலாமிய வரலாறை புராணக் கதைகளாக எளிதாக மாற்றிவிடலாம் என செயல்பட்டுக் கொண்டிருந்த சியோனிஸ்டுகளுக்கு இது மிக பெரிய ஊக்கமாகவே இருந்தது. இதே போன்றுதான் தமிழகத்தில் உள்ள இத்தகைய பரப்புரையாளர்கள் இந்துத்துவ சக்திகளுக்கு ஊக்கமளிப்பவர்களாக உள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பார்ப்பனிய வரலாற்றின் வேர்களை ஆழமாக இந்திய சமூகத்திடையே வேரூன்றி வருகின்ற சூழ்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை மிகவும் பாராட்டுக்குரியது. ஒரு விதமான குற்ற உணர்வுடன் இருந்த முசுலீம் சமூகத்திற்கு இந்த வரலாற்று கண்காட்சிகள் உத்வேகம் அளிப்பதாகவே தெரிகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இந்த மாநாடுகளை நடத்தி உள்ளூர் மக்களுக்கு தங்களது சொந்த வேர்களை அடையாளப்படுத்தி கொண்டிருக்கிறார்கள். மிகப்பெரிய வரலாற்று ஆய்வாளர்கள் செய்ய வேண்டிய வேலையை பாப்புலர் ஃப்ரண்ட் பாமர மக்களிடம் மிகவும் எளிதாக எடுத்துச் செல்கிறது.
தமிழ் முசுலீம் சமூகம் அரேபிய கலப்பு இல்லாமல் தமிழ் சமூக பண்பாடுடன் உருவாகி வந்துள்ளது இந்த கண்காட்சிகள் மூலம் தெளிவாக காட்டப்பட்டுள்ளது. தமிழ் சமூகத்திற்கும் இந்திய சமூகத்திற்கும் இசுலாமிய சமூகம் செய்த பங்களிப்புகள் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு கொண்டே இருக்க வேண்டும். தர்ஹாக்கள் போன்ற அடையாள சின்னங்கள் உரூஸ் நடத்துவதற்கு பயன்படுத்தாமல் உள்ளூர் வரலாறுகளை மீள் உருவாக்கம் செய்யும் மையமாக அவை அமைய வேண்டும்.
இத்தகய வரலாற்று பண்பாடுகளை கிருத்தவ சமூகமும் மீள் உருவாக்கம் செய்வதை துரிதப்படுத்த வேண்டும். அதே போன்று அனைத்து சிறுபான்மையின தலித் பிற்படுத்தப்பட்ட சமூகமும் மீள் உருவாக்கம் செய்ய முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களது மூதாதையர்கள் குறித்து உங்களுக்கு பார்ப்பனிய ஆதிக்க சக்திகள் பாடம் எடுப்பார்கள்... எச்சரிக்கை...!
- சாகுல் ஹமீது
http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/28584-2015-05-25-04-27-46
தமிழ் இசுலாமிய வரலாறு - பண்பாட்டு வேர்களை தேடி...
Reviewed by நமதூர் செய்திகள்
on
04:31:00
Rating:
No comments: