'மீத்தேன் தடை... தேர்தல் நாடகமே!'
‘காவிரி படுகையில் நிலக்கரி மீத்தேன் எடுக்க தமிழக அரசு அனுமதி அளிக்காது. இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். எதிர்காலத்தில் இது தொடர்பான எந்த ஒரு முயற்சியையும் தொடங்குவதற்கு முன்னர் தமிழக அரசை கலந்தாலோசிக்க வேண்டும்’ என தமிழக அரசு அறிவித்திருப்பதாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட ஆட்சியர்களும் ஒரே விஷயத்தை தனித் தனி அறிக்கைகளாக வெளியிட்டுள்ளார்கள்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, 'அ.தி.மு.க-வுக்கு வாக்களித்தால் மீத்தேன் திட்டத்தை காவிரி டெல்டாவில் அமல்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன். எனது தலைமையிலான அரசு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்காது' என்று டெல்டா முழுக்க மைக் பிடித்து முழங்கினார் ஜெயலலிதா. தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றவர், இத்திட்டத்தின் விளைவுகள் குறித்து ஆராய 17.7.2013 அன்று தொழில்நுட்ப வல்லுநர் குழுவை அமைத்தார். தற்போது, அக்குழு அளித்த அறிக்கையின்படிதான் தமிழக அரசு இந்த முடிவை எடுத்ததாக தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தின்
தலைவருமான பெ. மணியரசனிடம் பேசியபோது, ‘‘தமிழக அரசின் இந்த முடிவை நாங்கள் பெரிதும் வரவேற்கிறோம். ஆனால், இது மட்டும் போதாது. காவிரி சமவெளியில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதைத் தடுக்கவும் இங்குள்ள பொதுமக்கள் தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். எண்ணெய், எரிவாயு எடுத்த ஊர்களில் தண்ணீர் மாசுப்பட்டு, நிலவளம் பாழாகி இங்குள்ள மக்கள் பலவிதமான நோய்களுக்கும் இழப்புகளுக்கு ஆளாகியுள்ளார்கள். இதனால் காவிரி டெல்டாவில் உள்ள அனைத்து கிராமங்களிலுமே எதிர்ப்பு வலுத்து வருகிறது.
புதிதாக பெட்ரோல்-கேஸ் கிணறுகள், குழாய்கள் அமைக்க இங்குள்ள பொதுமக்களும் விவசாயிகளும் அனுமதிக்கமாட்டார்கள். அடியபுரம், மாதிரிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் இத்தகைய பணிகளை மேற்கொண்டபோது மக்கள் பேரெழுச்சியுடன் போராடி தடுத்து நிறுத்திவிட்டார்கள். இயந்திரங்களையும் வெளியேற்றிவிட்டார்கள். போராடிய மக்கள் மீது தமிழக காவல்துறை கொலைமிரட்டல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து அநீதி இழைத்துள்ளது. தமிழக முதல்வர் இந்த வழக்குகளை எல்லாம் திரும்பப் பெற வேண்டும். ஒ.என்.ஜி.சி-யின் பெட்ரோல்-கேஸ் எடுக்கும் பணிகளுக்கு தமிழக அரசு காவல்துறை பாதுகாப்பு வழங்கக்கூடாது. இங்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் வேறு எந்த ஒரு பகுதியிலுமே விளைநிலங்களில் பெட்ரோல்-கேஸ் எடுக்க அனுமதி வழங்கக்கூடாது. காவிரி டெல்டாவில் ஷேல்-மீத்தேன் எடுக்கும் திட்டத்தையும் தமிழக அரசு தடை செய்ய வேண்டும்’’ என்றார்.
மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஆலோசகர் மருத்துவர் பாரதிச்செல்வன் பேசும்போது, ‘‘தமிழக அரசு நிலக்கரி மீத்தேனுக்குத் தடைவிதித்துள்ளதாக சொல்லிவிட்டு, மறைமுகமாக ஷேல்-மீத்தேன் திட்டத்துக்கு ஆதரவுக்கரம் நீட்ட வாய்ப்புள்ளது. தமிழக அரசின் தற்போதைய அறிவிப்பை நம்பி காவிரி டெல்டா மக்கள் போராட்டங்களைக் கைவிட்டு அமைதியாக இருப்பார்கள். வழக்கமான பெட்ரோல்-கேஸ்தான் எடுக்கிறோம் என சொல்லிக்கொண்டு ஒ.என்.ஜி.சி நிறுவனம் சத்தமில்லாமல் நீரியல் விரிசல் முறையில் ஷேல்-மீத்தேன் எடுக்க வாய்ப்புள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம், குத்தாலம் பகுதியில் ஷேல்-கேஸ் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதை ஒ.என்.ஜி.சி நிறுவனமே பசுமை தீர்ப்பாயத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. இங்குள்ள ராட்சத இயந்திரங்களை பார்க்கும்போது இது மேலும் உறுதியாகிறது. தமிழக அரசின் அனுமதி இல்லாமலே இங்கு ஷேல்-கேஸ் ஆய்வு நடப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இங்கு செயல்படுத்த இருக்கும் முறை நீரியல் விரிசல் முறையா என ஆய்வு செய்ய தமிழக அரசு ஒரு குழுவை அனுப்ப வேண்டும். அக்குழுவில் நேர்மையான விவசாய சங்கத் தலைவர்களும், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பினரும் இடம் பெற வேண்டும்" என்று சொன்ன பாரதிச்செல்வன், "மீத்தேனுக்கு அனுமதி மறுப்பு என்பதை தேர்தல் தந்திரமாக மட்டுமே முதல்வர் பார்க்கக் கூடாது’’ என்றார்.
ஆனால், இந்தத் தடை குறித்த அறிவிப்பு, மூன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களால் வெளியிடப்பட்டிருப்பது, இது தேர்தல் தந்திரமாகவே இருக்கக்கூடும் என்கிற சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது. தமிழகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கோணவாய்க்கால் மதகைத் திறப்பது என்றால் கூட, 'என்னுடைய உத்தரவின்படி கோணவாய்க்கால் மதகு, விவசாயத்துக்காக திறந்துவிடப்படுகிறது' என்று அறிக்கைவிடும் முதல்வர்... மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஒரு திட்டத்துக்கு எதிரான தடையை, தன் பெயரால் ஏன் வெளியிடவில்லை. அதுமட்டுமல்ல, இதுகுறித்த செய்தி அறிக்கையும் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படவில்லை.
சரி இது கிடக்கட்டும். தற்போதைய தடையானது நிரந்தரத் தடையா என்றால், சத்தியமாக இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது மாவட்ட ஆட்சியர்களின் அறிக்கை வாசகங்களைப் படிக்கும்போது. அதாவது, 'எதிர்காலத்தில் இது தொடர்பான எந்த ஒரு முயற்சியையும் தொடங்குவதற்கு முன்னர் தமிழக அரசை கலந்தாலோசிக்க வேண்டும்' என்று அந்த அறிக்கையில் இருக்கும் வாசகங்களுக்குள் பொதிந்திருக்கும் மர்மத்தை, அ.தி.மு.க அரசுதான் விளக்க வேண்டும்.
திட்டத்தைக் கொண்டு வந்தது தி.மு.க-தான் என்று சொல்லிச் சொல்லி ஓட்டுக் கேட்ட ஜெயலலிதா, இந்தத் திட்டத்தை நீக்கியது அ.தி.மு.க-தான் என்று எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார். இதைத் தவிர, இதில் பெரிதாக வேறு எதுவும் இல்லை. ஆம், மீத்தேன் எமன், சற்றே இளைப்பாறப் போயிருக்கிறான். அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் வெறியோடு களத்தில் இறங்கக் காத்திருப்பான் என்பதே உண்மை எனத் தோன்றுகிறது.
ம்.... காலம் இதை காட்டிக்கொடுக்காமலா போய்விடும்?!
'மீத்தேன் தடை... தேர்தல் நாடகமே!'
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:21:00
Rating:
No comments: