தனியார் மருத்துவமனைகளின் மோகம்! – வி.களத்தூர் பாரூக்

சமீபத்தில் வெளியான ‘தேசிய சாம்பிள் சர்வே ஆர்கனைசேசன்’ என்ற அமைப்பின் ஆய்வறிக்கை நம்மை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மருத்துவத்துறை சம்மந்தமான ஆய்வுதான் அது.
தற்போதைய நிலவரப்படி “80% நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெறுகிறார்கள்” என்கிறது அந்த ஆய்வு.
“ஒரு நோயாளி அரசு மருத்துவனையில் சேர்க்கும் செலவை விட, தனியார் மருத்துவமனையில் சேர்க்கும் செலவு மூன்று மடங்கு அதிகம்” என்கிறது ஆய்வு.

அரசு குடிமக்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டியது கல்வியும், மருத்துவமும்தான். ஆனால் இன்று அதை ஒழித்து கட்டிவிட்டு தொலைக்காட்சி பெட்டி, மின் விசிறி, லேப்டாப், கிரைண்டர் என மக்களுக்கு இலவசமாக கொடுத்து அதை தனது சாதனையாக கூறிக்கொள்கிறார்கள் ஆட்சியாளர்கள்.
பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான கல்வியும், மருத்துவமும் அரசு மேம்படுத்த தவறியதன் விளைவு, இன்று சேவையாக செய்ய வேண்டிய கல்வியும், மருத்துவமும் தனியார் கைகளில் சிக்கி இன்று மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது.
அதிலும் குறிப்பாக தனியார் மருத்துவமனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பெரிய நகரங்களில் எங்கு திரும்பினும் எதாவது ஒரு தனியார் மருத்துவமனைதான் தெரிகிறது.
மனிதர்கள் தனது உடல் உழைப்பை கைவிட்டதின் பலனாக, துரித உணவு மோகத்தால், இயற்கைக்கு எதிராக நடந்து வருவதால், பல்வேறு உடல் உபாதைகளால் சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையை தமக்கு சாதகமாக நினைத்து தனியார் மருத்துவமனைகள் செயலாற்றி வருகின்றன.
தனியார் மருத்துவமனைக்கு ஈடாக அரசு மருத்துவமனைகள் செயலாற்ற முடிவதில்லை. ஊழியர்கள் பற்றாக்குறை, மருத்துவர் பற்றாக்குறை, மக்கள் வசிக்கும் பகுதியிலிருந்து தொலைவில் இருப்பது, சிகிச்சையில் மெத்தனம், நோயாளிகளை மரியாதை குறைவாக நடத்துவது போன்ற காரணங்களால் பொதுமக்களும் அரசு மருத்துவமனைகளை விட தனியார் மருத்துவமனைகளே மேல் என்று நினைத்து விடுகிறார்கள்.
இன்று கிராமங்களில்கூட அரசு மருத்துவமனைகளை பயன்பாட்டை விட, மாலை நேர ‘கிளினிக்’குகளையே மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதை கண்கூடாக நாம் பார்த்து வருகிறோம்.
அழகான கட்டமைப்பு, உயரமான கட்டிடம் என கார்பரேட் கம்பெனிபோல் இருக்கும் தனியார் மருத்துவமனைகள், மக்களின் இந்த மோகத்தை பயன்படுத்தி கரன்சியை கறந்து விடுகிறார்கள். ஒரு தலைவலி என்று போனால்கூட குறைந்தது 500 ரூபாய் ஆகிவிடுகிறது.
இது மட்டுமில்லாமல் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் மருந்துகளை அதிகம் வாங்கும் மருத்துவருக்கு ‘கமிசன்’ தருவதால், மருத்துவர்களும் அந்த மருந்துகள் விலை அதிகம் என்றாலும் நோயாளிகளுக்கு எழுதி கொடுக்கிறார்கள்.
புதுடெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றும் மருத்துவர் முர்ரே அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் உள்ள வித்தியாசத்தை இவ்வாறு கூறுகிறார் “அரசு மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு சிகிச்சை எந்த பலனையும் தராது என்று உணர்ந்தால் அந்த நோயாளியை அறுவை சிகிச்சைக்கு வற்புறுத்தமாட்டார்கள். ஆனால் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் எந்த பலனும் ஏற்படாது என்று தெரிந்தாலும் அறுவை சிகிச்சை செய்வார்கள்.” இதுதான் இன்றைய நிலைமையாக இருக்கிறது.
நான் அருகில் உள்ள நகரத்திற்கு செல்லும்போது அங்கு உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் மக்கள் காலை, மாலை என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் குளுமி விடுகிறார்கள்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் சீக்கிரம் சரியாகிவிடுகிறது, அரசு மருத்துவமனைகள் சரியில்லை என்ற பிம்பம் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. அதற்கு அரசின் அலட்சியமும் ஒரு காரணமாக இருக்கிறது.
மருத்துவர் அருன்பால் கூறியதுபோல “தனியார் மருத்துவமனைகளை கண்காணிக்க ஒரு அமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும்”.
அதேபோல அரசு மருத்துவமனைகளை எல்லா வசதிகளும்கூடிய வகையில் தரம் உயர்த்தி மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்ய வேண்டும், அதற்கு மக்களிடத்தில் விழிப்புணர்வு பணிகளை அதிகம் செய்ய வேண்டும்.  அதுதான் அரசின் கடமையும்கூட.
தனியார் மருத்துவமனைகளின் கொள்ளைகளுக்கு எதிராக மக்கள் நலன் சார்ந்த கட்சிகள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.  மருத்துவம் வியாபாரம் ஆனால், சேவை என்பது காணாமல் போய்விடும்.
வி.களத்தூர் பாரூக்
- See more at: http://www.thoothuonline.com/archives/74529#sthash.WEkXlWkd.dpuf
தனியார் மருத்துவமனைகளின் மோகம்! – வி.களத்தூர் பாரூக் தனியார் மருத்துவமனைகளின் மோகம்! – வி.களத்தூர் பாரூக் Reviewed by நமதூர் செய்திகள் on 03:45:00 Rating: 5

No comments:

Powered by Blogger.