அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்யும் ஆணை ரத்து: ஹைகோர்ட் அதிரடி.


சென்னை: தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யும் தமிழக அரசின் ஆணையை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த உத்தரவு ஆளும் அண்ணா தி.மு.க. அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஆசியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்றாக அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சென்னை கோட்டூர்புரத்தில் முந்தைய தி.மு.க. அரசு ரூ179 கோடியில் உருவாக்கியது. ஆனால் அண்ணா தி.மு.க. ஆட்சியில் கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் 2-ந் தேதி இந்த நூலகத்தை சென்னை நுங்கம்பாக்கத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது. 
இதனை எதிர்த்து ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோன்மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்தார். அதில், அண்ணா நூற்றாண்டு நூலகம் 2010ம் ஆண்டு சர்வதேச தரத்துடன் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், இந்த அண்ணா நூலகத்தை நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்வி இயக்குனரகம் வளாகத்துக்கு மாற்ற தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். 

அண்ணா நூலகத்தை இடம் மாற்றம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகாலமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, அண்ணா நூற்றாண்டு நூலகம் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது என்று கூறினார். இதையடுத்து அண்ணா நூலகத்தின் நிலை குறித்து நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வழக்கறிஞர்கள் எம்.சுந்தரம், பி.டி.ஆஷா ஆகியோரை ஆணையாளர்களாக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அவர்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்து உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, மனுதாரர் சார்பில் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள். அரசு ஆணை உத்தரவு இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கை நாங்கள் முடித்து வைக்கின்றோம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நுங்கம்பாக்கத்துக்கு மாற்றுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்கிறோம். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை எக்காரணம் கொண்டு அரசு இடம் மாற்றம் செய்யக் கூடாது. 

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள குறைபாடுகளை ஆணையர்கள் குழு சுட்டிக் காட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த குறைபாடுகளை அரசு நிவர்த்தி செய்து, விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அதாவது, அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் 15ந் தேதி, அந்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு விசாரணையின்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நிலையை நீதிபதிகள் நீங்கள் நேரில் வந்து பார்க்கவேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் வில்சன் கோரிக்கை விடுத்தார். 

அதற்கு நீதிபதிகள், வழக்கு விசாரணை முடிந்த பின்னர், நாங்கள் நூலகத்தை பார்க்க வருவோம் என்று தெரிவித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவு, ஆளும் அண்ணா தி.மு.க. அரசு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்யும் ஆணை ரத்து: ஹைகோர்ட் அதிரடி. அண்ணா நூலகத்தை இடமாற்றம் செய்யும் ஆணை ரத்து: ஹைகோர்ட் அதிரடி. Reviewed by நமதூர் செய்திகள் on 03:34:00 Rating: 5

No comments:

Powered by Blogger.