தெளிவற்ற சின்னம்: நாம் தமிழர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

தெளிவற்ற சின்னம்: நாம் தமிழர் உச்ச நீதிமன்றத்தில் மனு!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது சின்னம் தெளிவில்லாமல் இருப்பதாக நாம் தமிழர் கட்சி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது
ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரித்து வருகிறார். மத்திய மாநில அரசை குற்றம்சாட்டி வரும் சீமான் தேர்தல் ஆணையத்தையும் குற்றம்சாட்டி வருகிறார்.
நேற்று முன்தினம் (ஏப்ரல் 10) மயிலாடுதுறையில் பேசிய சீமான், வாக்குப்பதிவு இயந்திரத்தில் என் சின்னத்தைத் தவிர மற்ற அனைத்து சின்னங்களையும் தேர்தல் ஆணையம் ‘பளிச்’ என்று வைத்துள்ளது என்று பேசியிருந்தார்.
”காளை சின்னம் கேட்டதற்கு அது உயிருள்ள பொருள் என்று கூறி அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் ஆனால் தற்போது கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியிருப்பதாகவும், அப்படியானால் விவசாயிகளுக்கு உயிர் இல்லையா” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் தங்களுடைய சின்னம் மட்டும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மங்கலாக இருப்பதாகப் புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தேர்தல் அதிகாரியிடம், நாம் தமிழர் கட்சியின் மாநிலச் செயலாளர் சிவக்குமார் மற்றும் தொழிலாளர் நலச்சங்க மாநிலச் செயலாளர் ரமேஷ் ஆகியோர் அளித்த புகார் மனுவில், தமிழகம், புதுச்சேரியில் எங்கள் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர் புகைப்படம், கட்சி சின்னம் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களின் அளவை விட நாம் தமிழர் கட்சியின் கரும்பு விவசாயி சின்னம் சிறியதாகவும், தெளிவாக இல்லாமலும் உள்ளது.
இது பொதுமக்களின் மன நிலையையும், சிந்தனைகளையும் சீர் குலைக்கும் வகையில் உள்ளது. இது ஜனநாயகத்துக்கு எதிரானது. எனவே எங்கள் சின்னத்தையும் தெளிவாகப் பொருத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இதுபோன்று நாகப்பட்டினம், கன்னியாகுமரி எனத் தமிழக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திலும் கரும்பு விவசாயி சின்னம் தெளிவாக இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் தெளிவாகச் சின்னத்தைப் பதியக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
முன்னதாக ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது கட்சியின் சின்னம் தெளிவாக இல்லை என ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதனன் குப்தா இயந்திரத்தை கீழே போட்டு உடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தெளிவற்ற சின்னம்: நாம் தமிழர் உச்ச நீதிமன்றத்தில் மனு! தெளிவற்ற சின்னம்: நாம் தமிழர் உச்ச நீதிமன்றத்தில் மனு! Reviewed by நமதூர் செய்திகள் on 22:08:00 Rating: 5

No comments:

Powered by Blogger.