ராஜராஜசோழன் நினைவிடத்தில் ஆய்வு: உத்தரவு!

ராஜராஜசோழன் நினைவிடத்தில் ஆய்வு: உத்தரவு!

ராஜராஜசோழன் நினைவிடத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருமுருகன், உடையாளூரில் உள்ள ராஜராஜசோழன் நினைவிடம் பராமரிப்பின்றிச் சிதைந்து கிடப்பதாகக் கூறி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
“முதலாம் ராஜராஜசோழன் ஆட்சிக் காலத்தில் நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் என அனைத்து துறைகளும் சிறந்திருந்தன. இதற்கான சான்றாக உள்ளது தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோவில். ஆனால் அவரது நினைவிடம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூர் கிராமத்தில் பராமரிப்பின்றிச் சிதைந்து கிடக்கிறது.
இங்கு முறையாகத் தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினால் சோழர்களின் வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கும்” என்று அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அது மட்டுமல்லாமல், ராஜராஜசோழனின் சிலையை இந்தியப் பெருங்கடல் அல்லது வங்கக் கடல் பகுதியில் அமைக்க உத்தரவிட வேண்டுமென்றும் திருமுருகன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை, நேற்று (ஏப்ரல் 11) நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, உடையாளூர் பகுதியில் ராஜராஜசோழன் உடலை அடக்கம் செய்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார் அரசுத் தரப்பு வழக்கறிஞர். அதனைக் கேட்ட நீதிபதிகள், முழுமையாக ஆய்வு செய்யாமல் முடிவு செய்யக் கூடாது என்று தெரிவித்தனர்.
தமிழக அரசின் தொல்லியல் குழுவானது நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ராஜராஜசோழன் நினைவிடத்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டனர் நீதிபதிகள்.
இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ராஜராஜசோழன் நினைவிடத்தில் ஆய்வு: உத்தரவு! ராஜராஜசோழன் நினைவிடத்தில் ஆய்வு: உத்தரவு! Reviewed by நமதூர் செய்திகள் on 22:09:00 Rating: 5

No comments:

Powered by Blogger.