தேர்தல் 2014: சிறிய கட்சிகளின் ஆதிக்கம் எதிரொலிக்கும்!


“பெரிய கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்துள்ள மக்கள் சிறிய கட்சிகள் மீது எதிர்பார்ப்பை தொடங்கியுள்ளார்கள்!” - அரசியல் சாமான்யன்
நாடு சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சுதந்திரம் பெற்றதாகவும், நாட்டின் பாதுகாப்பில் சுதந்திரம் பெற்றதாகவும், நாட்டு மக்களுக்கு அதிகார வர்க்கங்களிடம் இருந்து வழங்கக்கூடிய நீதியில் சுதந்திரம் பெற்றதாகவும் தெரியவில்லை.
நாட்டில் பெரும்பாலான மக்கள் பசி, பட்டினி, பஞ்சம், வேலைவாய்ப்பின்மை என்று தவித்து வருகின்றனர். இவர்களுக்கு தேவையானவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஆளும் அரசுகளோ தங்களுடைய அதிகாரத்தை எப்படி தக்க வைத்துக் கொள்ளலாம் என்ற சிந்தித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த ஒரு சூழ்நிலையில்தான் நாட்டின் 16வது நாடாளுமன்ற தேர்தல் நம்மை சந்திக்க இருக்கின்றது. மக்களிடம் போய் அரசியல் என்றால் என்ன என்று கேட்டால் அவர்கள் ஒரே வார்த்தையில் கூறி விடுவார்கள், அது ஒரு சாக்காடை என்று. அந்த சாக்கடையை யார் சுத்தம் செய்வார்கள் என்றால், அதற்கு அவர்களிடம் பதில் இருக்காது. இதுதான் இன்றைய இந்தியாவின் சூழ்நிலை.
எந்த ஒரு கட்சியும் தனித்து நின்று வெற்றி பெறும் நம்பிக்கையை இழந்து நிற்கும் சூழ்நிலையில் 16வது நாடாளுமன்ற தேர்தலை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றோம்.
காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகள் மட்டுமின்றி இதுவரை ஆட்சியில் இருந்த அத்தனை கட்சிகளின் நிலையும் இதுதான்! ஏதாவதொரு ஊழலோ அல்லது மக்கள் முகம் சுளிக்கும் தவறுகளோ செய்த கட்சிகளாகத்தான் இருக்கின்றன. இதனால் மக்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற திகைப்பில் இருக்கின்றார்கள்.
அதனால் காலம் காலமாக வாக்களித்த கட்சிகளுக்கு வாக்களிப்பதை விட்டுவிட்டு, சிறிய கட்சிகளாக இருந்தாலும் புதிய கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்து விட்டார்கள்.
அதனுடைய வெளிப்பாடுதான் சமீபத்தில் நடந்த டெல்லி சட்டமன்ற தேர்தல் ஏற்படுத்திய மாற்றம். தொடங்கி ஏழு மாதங்களே ஆன ‘ஆம் ஆத்மி கட்சி’ 28 இடங்களில் வென்று, பாரம்பரிய அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. ஆம் ஆத்மி என்றால் சாமான்ய மக்களுக்கான கட்சி என்று அர்த்தம்.
இது வடமாநில மக்களுக்கு அதிகமாக தெரிந்தாலும், தென்மாநில மக்களுக்கு குறைவாகத்தான் தெரியும். இருந்தாலும் அனைத்து மக்களும் ஆம் ஆத்மி கட்சியை உற்று கவனிக்கத் தொடங்கினார்கள். மீடியாக்கள் அதன் பிறகுதான் ஆம் ஆத்மி கட்சியை மதிக்கத் தொடங்கின.
அதேபோன்ற, ஒரு சூழலில்தான் இந்தியா முழுவதும் 40க்கும் மேற்பட்ட தொகுதியில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது எஸ்.டி.பி.ஐ. கட்சி. ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் அதிகார பிரதிநிதித்துவத்திற்காகவும் போராடுவதை பிரதானமாக கொண்டுள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு தொண்டர்களின் பலமும், கட்சியின் பிரதான பலமாக இருக்கின்றது.
எந்தவித அதிகார பலமுமின்றி, ஊடக வெளிப்பாடுமின்றி களமிறங்கியிருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சி போதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற ஒரு எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
2009ல் தொடங்கப்பட் எஸ்.டி.பி.ஐ. கட்சி பல்வேறு மாநிலங்களில் தங்களுடைய விசாலமான பார்வையை செலுத்தியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல்களில் கூட போதுமான வாக்குகளை பெற்றுள்ளன. இதனால் நாடாளுமன்ற தேர்தலிலும் அது தங்களது ஓட்டு வங்கியை அதிகப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை வடசென்னை, நெல்லை, இராமநாதபுரம் தொகுதிகளை தேர்வு செய்து, வேட்பாளர்களையும் அறிவித்து கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது எஸ்.டி.பி.ஐ.
சமீபத்தில் இந்த மூன்று தொகுதிகளிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சி மேற்கொண்ட பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இராமநாதபுரத்தில் மீனவர்களின் பிரச்னைகளுக்காக போராட்டம்  நடத்தியது. சென்னையில் “வஞ்சிக்கப்பட்ட வடசென்னை” என்ற பிரச்சாரத்தை நடத்தியது. நெல்லையில் தாமிரபரணியை பாதுகாப்போம் என்ற நடைபயணம் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தியது.
அதுமட்டுமல்லாமல், ஆரம்பக்கட்டம் முதலே கட்சியின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தர்மபுரி கலவரத்திற்கெதிராக போராட்டம், இலங்கை தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது போராட்டம், பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து போராட்டம் என்று தமிழகத்தில் அரசியல் இருப்பை வலுப்படுத்தியது எனலாம்.
இதனுடைய வெளிப்பாடு இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் பட்சத்தில், வரக்கூடிய காலங்களில் எஸ்.டி.பி.ஐ.க்கான எதிர்காலம் நன்றாக அமையும் என்று நம்பப்படுகிறது.
நெல்லை சலீம்
- See more at: http://www.thoothuonline.com/archives/63671#sthash.hNyWJKXA.dpuf
தேர்தல் 2014: சிறிய கட்சிகளின் ஆதிக்கம் எதிரொலிக்கும்! தேர்தல் 2014: சிறிய கட்சிகளின் ஆதிக்கம் எதிரொலிக்கும்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:48:00 Rating: 5

No comments:

Powered by Blogger.