முஸ்லிம்களுக்காகப் பேச யாரும் இல்லை!


அனைவருக்குமான வளர்ச்சிக்காகப் பாடுபடுகிறோம், வகுப்பு ஒற்றுமைதான் எங்களுடைய லட்சியம் என்றெல்லாம் கூறும் பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய கர்மபூமியான உத்தரப் பிரதேசத்தில், ஒரு முஸ்லிமைக்கூட வேட்பாளராக நிறுத்தவில்லை. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் இரண்டை மட்டும் ‘அப்னா தள்’ கட்சிக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, மீதமுள்ள 78 தொகுதிகளிலும் பா.ஜ.க. போட்டியிடுகிறது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மட்டும் குறிவைக்காமல் மேல்சாதியினர், தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியோ எல்லா தரப்பாருக்கும் உரிய பிரதிநிதித்துவத்தைக் கொடுத்திருக்கிறது. முஸ்லிம்கள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித்துகள், மேல்சாதியினரில் தாக்கூர்கள், பிராமணர்கள் என்று அனைத்துச் சமூகத்தவருக்கும் பிரதிநிதித்துவம் அளித்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி 12 பெண்களையும் பா.ஜ.க. 10 பெண்களையும் உத்தரப் பிரதேசத்தில் நிறுத்தியிருக்கின்றன.
முஸ்லிம்களுக்கு அவமதிப்பு!
உத்தரப் பிரதேச மக்கள்தொகையில் 17% ஆக இருக்கும் முஸ்லிம்கள், இந்த அவமதிப்பால் மிகவும் கொதித்துப்போயிருக்கின்றனர். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கும் பொதுச்செயலாளர் அருண் ஜேட்லியும் சமீபத்தில் முஸ்லிம்களைச் சந்தித்து உரையாடி, ஆதரவைக் கோரினார்கள். நடந்த தவறுகளுக்காக மன்னிக்குமாறும் ராஜ்நாத் கோரிக்கை விடுத்தார். ஒரேயொருமுறை எங்களை ஆதரித்துப் பாருங்கள் என்று கூறிவிட்டு, தங்கள் சமூகத்துக்கு ஒரு பிரதிநிதித்துவம்கூட இல்லாவிட்டால் எப்படி என்று உத்தரப் பிரதேச முஸ்லிம்கள் பொருமுகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் உங்கள் கட்சி சார்பாக ஒரு முஸ்லிம் வேட்பாளர்கூட நிறுத்தப்படவில்லையே ஏன் என்று நிருபர் ஒருவர் கேட்டபோது, வெற்றிபெறுவார் என்று நிச்சயம் தெரிந்தவர்களைத்தான் வேட்பாளர்களாக அறிவிக்கிறோம் என்று பதில் அளித்திருக்கிறார் ராஜ்நாத் சிங். பிற மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு கொடுத் திருக்கிறோம், முஸ்லிம் சகோதர, சகோதரிகள் எங்களோடு சேர்ந்துகொள்ள வேண்டும், நாங்கள் வெறுப்பு வளர்வதை அனுமதிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். காஷ்மீர் மாநிலத்தில் 3 முஸ்லிம்களை நிறுத்தியிருக்கிறார்கள்!
15-வது மக்களவையில்…
15-வது மக்களவையில் ‘தேர்ந்தெடுக்கப்படுவது நிச்சயம்’ என்ற அடிப்படையில் நிறுத்தப்பட்டு, 7 முஸ்லிம்கள் இடம்பெற்றனர். அவர்களில் 3 பேர் காங்கிரஸ்காரர்கள். வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித், கிரிக்கெட் வீரர் முகமது அசாருதீன் அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். எஞ்சிய 4 பேர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்தவர்கள். மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள, வகுப்புக் கலவரம் நடந்த முசாபர்நகர் பகுதியில் காங்கிரஸ், சமாஜவாதி கட்சிக்கு ஆதரவு அளித்துவந்த முஸ்லிம்கள் தங்களுடைய ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சிக்கு அளிக்கத் தொடங்கியிருப்பதில் வியப்பேதும் இல்லை.
தொடரும் புறக்கணிப்பு
2004-ல் உத்தரப் பிரதேசத்திலிருந்து 10 முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முஸ்லிம்களுக்கு ஒரு இடத்தைக்கூடத் தராமல், தங்கள் மீது கொண்டிருக்கும் அலட்சியத்தை பா.ஜ.க. வெளிப்படுத்துகிறது என்று படித்த முஸ்லிம்கள் பேசிக்கொள்கின்றனர். அப்படியொன்றும் தாங்கள் போட்டியிடுகிற 78 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கை அந்தக் கட்சிக்கு இல்லை. அந்தக் கட்சியே 40 முதல் 45 தொகுதிகள்வரைதான் தங்களால் வெற்றிபெற முடியும் என்று கருதுகிறது. அந்த நிலையிலும் முஸ்லிம்களை அரவணைத்துச் செல்ல அந்தக் கட்சி தயாராக இல்லை.
“ஒரேயொரு தொகுதியை அடையாளமாக முஸ்லிம்களுக்கு ஒதுக்கியிருந்தால்கூட அவர்களை ஆதரிக்கலாம் என்று நினைக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு ஆறுதலாக இருந்திருக்கும், அதற்குக்கூட பா.ஜ.க. தலைமை தயாராக இல்லை” என்று லக்னௌவைச் சேர்ந்த துணி வியாபாரி முகம்மது அஃப்சர் விரக்தியுடன் சுட்டிக்காட்டினார்.
பா.ஜ.க-வின் தலைவர்களில் ஒருவரான முக்தார் அப்பாஸ் நக்வி 1998-ல் உத்தரப் பிரதேசத்திலிருந்துதான் வெற்றி பெற்றார். 1999-ல் அவரே தோற்றுவிட்டார். பா.ஜ.க-வில் இருக்கும் இன்னொரு முஸ்லிம் தலைவரான ஷாநவாஸ் உசைன் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
25 ஆண்டுகளாக மறுப்பு
உத்தரப் பிரதேசமே இப்படியென்றால், குஜராத்தில் எப்படி என்று ஊகிப்பதற்குச் சிரமப்படத் தேவையில்லை. அங்கும் பா.ஜ.க. சார்பில் ஒரு வேட்பாளர்கூட முஸ்லிம் கிடையாது. பா.ஜ.க-வை விடுங்கள், 1989-க்குப் பிறகு குஜராத்திலிருந்து மக்களவைக்குக் கடந்த 25 ஆண்டுகளில் ஒரு முஸ்லிம்கூடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை!
குஜராத் மாநிலம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பிறகு 1962 பொதுத்தேர்தலில் இரண்டு முஸ்லிம்கள் மட்டுமே பெரிய கட்சி சார்பாகப் போட்டியிட்டனர். அவர்களில் ஜோராபென் சாவடா என்பவர் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்றார். 1967 தேர்தலில் எந்தக் கட்சி சார்பாகவும் முஸ்லிம்கள் நிறுத்தப்படவில்லை. 1971-ல் புரோச் தொகுதியில் நிறுத்தப்பட்ட ஒரே முஸ்லிம் வேட்பாளரும் தோற்றுவிட்டார். இத்தனைக்கும் புரோச் தொகுதியில் 17% பேர் முஸ்லிம்கள்.
1977 தேர்தலில் இரண்டு முஸ்லிம்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அகமதாபாதிலிருந்து இஷான் ஜாஃப்ரியும் புரோச்சிலிருந்து அகமத்பாய் முகமத்பாயும் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இஷான் ஜாஃப்ரிதான் 2002 வகுப்புக் கலவரத்தின் போது கொல்லப்பட்டார். அகமத்பாய் முகமத்பாய் அடுத்த 2 பொதுத்தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றிபெற்றார். 1989 தேர்தலில் அவரும் தோற்றார். அதன் பிறகு, குஜராத்திலிருந்து முஸ்லிம்கள் யாரும் தேர்ந்தெடுக்கப்படவேயில்லை.
ஒடிசாவிலும்…
2004 பொதுத்தேர்தலின்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பிஜு ஜனதா தளத்தின் நவீன் பட்நாயக் பிரிந்து சென்றார். பா.ஜ.க-வின் மதச்சார்பற்ற தன்மை சந்தேகத்துக்குரியது என்று சாடினார். ஆனால், 15-வது மக்களவைக்கு ஒடிசாவிலிருந்தும் ஒரு முஸ்லிம்கூடத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
13 சதவீதமும் 5 சதவீதமும்
2009 தேர்தலுக்குப் பிறகு, மக்களவையில் முஸ்லிம் உறுப்பினர்கள் எண்ணிக்கை 30 ஆகக் குறைந்துவிட்டது. அதற்கு முந்தைய அவையில் 35 பேர் இருந்தனர். மக்கள்தொகையில் 13% ஆக இருந்தும் மக்களவையில் முஸ்லிம்களுக்கான பிரதிநிதித்துவம் வெறும் 5% ஆக இருக் கிறது. இந்த 30 பேரில் 4 பேர் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்!
ரஷீத் ஆல்வியின் சவால்
வாரணாசியில் தன்னை வேட்பாளராக நிறுத்தினால் மோடியைத் தோற்கடித்து நகரின் மதச்சார்பற்ற தன்மையை நிரூபிக்க முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரஷீத் ஆல்வி காங்கிரஸ் தலைமைக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். மோடியை எதிர்த்து திக்விஜய் சிங் நிறுத்தப்படலாம் என்ற பேச்சு வந்தபோது, நிற்பதற்குத் தயார் என்று அவரும் அறிவித்தார். அத்துடன் தொலைக்காட்சியில் என்னுடன் நேரடி விவாதத்துக்குத் தயாரா என்றும் மோடிக்கு அவர் சவால் விட்டார். நாட்டின் வரலாறு குறித்தும் புள்ளிவிவரங்கள் குறித்தும் அதிகம் தெரிந்திராத மோடியை வாதத்தில் வென்றுவிடலாம் என்று திக்விஜய் சிங் நம்புகிறார்
ரஷீத் ஆல்வி போட்டியிட விருப்பம் தெரிவித்ததை மோடியின் ஆதரவாளர்கள் ட்விட்டரில் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். காரணம் இல்லாமல் இல்லை. வாரணாசியின் மொத்த வாக்காளர்கள் 16 லட்சம் பேரில் முஸ்லிம்கள் சுமார் 3 லட்சம். அந்த வாக்குகளை ரஷீத் ஆல்வி பிரிப்பார் அல்லவா? இதுவரை வாரணாசி முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவாகச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
“உங்களுக்குத் துணிவிருந்தால் காட்டில் சிங்கத்தைச் சந்தியுங்கள் அல்லது தேர்தலில் மோடியைச் சந்தியுங்கள்” என்று ட்விட்டரில் ஒருவர் சவால் விடுத்திருக்கிறார்.
“மோடி எதிர்ப்பு என்ற கங்கை ஆற்றில் திக்விஜய் சிங் வெறுமனே கையைக் கழுவிக்கொண்டு விடைபெற்றுவிட்டார், ரஷீத் ஆல்வி குதிக்கத் தலைப்பட்டுவிட்டார்” என்று இன்னொருவர் ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.
நன்றி: பிசினஸ்லைன், தமிழில்: சாரி
- See more at: http://www.thoothuonline.com/archives/63992#sthash.gjv6FmpT.dpuf

முஸ்லிம்களுக்காகப் பேச யாரும் இல்லை! முஸ்லிம்களுக்காகப் பேச யாரும் இல்லை! Reviewed by நமதூர் செய்திகள் on 00:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.