ஹமாஸ்-ஃபதஹ் உடன்படிக்கை:அரபு நாடுகள் ஆதரவு! பேச்சுவார்த்தையில் இருந்து இஸ்ரேல் விலகியது!


மேற்கு கரை: ஃபலஸ்தீனில் பிரபல அமைப்புகளான ஹமாஸும், ஃபதஹும் நல்லிணக்க உடன்படிக்கை செய்துக்கொண்டதை தொடர்ந்து இஸ்ரேல் ஃபலஸ்தீன் அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து விலகியது.கடந்த வியாழக்கிழமை ஐந்து மணிநேரம் நீண்ட இஸ்ரேலின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.பேச்சுவார்த்தையில் இருந்து இஸ்ரேல் விலகியதைத் தொடர்ந்து அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஜான் கெர்ரியின் முயற்சியில் துவங்கிய ஃபலஸ்தீன் – இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தை சீர்குலைந்தது.ஃபலஸ்தீன் -இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தையின் கால அவகாசம் அடுத்த செவ்வாய்க்கிழமை வரை உள்ளது.அதனை மீண்டும் நீட்டிப்பதற்கு ஃபலஸ்தீனும், இஸ்ரேலும் முயற்சிகள் மேற்கொண்டுவந்தன.
ஏழு ஆண்டுகளுக்கு பிறகு கருத்து முரண்பாடுகளை மறந்து ஒன்றிணைந்து செயல்பட காஸ்ஸாவை ஆளும் ஹமாஸும்,மேற்கு கரையை ஆளும் ஃபதாஹும் உடன்படிக்கைச் செய்துகொண்டது இஸ்ரேலுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.ஃபலஸ்தீனுக்கு எதிராக கூடுதல் பொருளாதார தடையை ஏற்படுத்த இஸ்ரேல் முடிவுச் செய்துள்ளது.ஹமாஸுடன் உடன்படிக்கைச் செய்துகொண்ட ஃபத்ஹின் நடவடிக்கையை அமெரிக்கா கண்டித்துள்ளது.ஹமாஸை இஸ்ரேலும், அமெரிக்காவும் தீவிரவாத இயக்கமாக சித்தரித்து வருகின்றன.இரு ஃபலஸ்தீன் அமைப்புகளும் உடன்படிக்கைச் செய்துகொண்டதை வரவேற்றுள்ள ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை தலைவர் காதரின் ஆஷ்டன், இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்கு ஃபலஸ்தீன் முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதேவேளையில், அமைதிக்கு முயற்சிப்பதாகவும், தற்போது ஃபலஸ்தீனின் ஒருங்கிணைப்பிற்கும், தேசிய ஐக்கியத்திற்கும் தாங்கள் முன்னுரிமை அளிப்பதாக அமைதிப்பேச்சுவார்த்தையில் ஃபலஸ்தீன் மத்தியஸ்தரான ஸாஇப் எரகாத் தெரிவித்தார்.
ஃபலஸ்தீன் அமைப்புகளின் ஒற்றுமையை அரபு லீகும், வளைகுடா நாடுகளும் வரவேற்றுள்ளன.முக்கியத்துவம் வாய்ந்த சூழலில் இரு அமைப்புகளும் ஒருங்கிணைந்து தனி ஐக்கிய ஃபலஸ்தீன் நாடு உருவாக ஊக்கமளிக்கும் என்று அரபுலீகின் பொதுச் செயலாளர் நபீலுல் அரபி தெரிவித்தார்.மோதலை கைவிட்டு ஒன்றிணைந்து செயல்படுவதற்கான முடிவு நேரான திசையை நோக்கியது என்று வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின்(ஜி.சி.சி) பொதுச் செயலாளர் அப்துல் லத்தீஃப் அல் ஸயானி தெரிவித்தார்.ஃபலஸ்தீனுக்கு அளித்து வரும் ஆதரவு தொடரும் என்று அரபு லீகும், ஜி.சி.சியும் அறிவித்துள்ளன.
ஹமாஸ்-ஃபதஹ் உடன்படிக்கை:அரபு நாடுகள் ஆதரவு! பேச்சுவார்த்தையில் இருந்து இஸ்ரேல் விலகியது! ஹமாஸ்-ஃபதஹ் உடன்படிக்கை:அரபு நாடுகள் ஆதரவு! பேச்சுவார்த்தையில் இருந்து இஸ்ரேல் விலகியது! Reviewed by நமதூர் செய்திகள் on 05:14:00 Rating: 5

No comments:

Powered by Blogger.