பெருந்தலைவர் பிறந்த நாள்: கல்வியை இலவசமாக பெற்றிட சூளுரைப்போம்! – எஸ்.டி.பி.ஐ


சென்னைபெருந்தலைவர் பிறந்த நாளில் கல்வியை இலவசமாக பெற்றிட சூளுரைப்போம்  என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கர்மவீரர், பெருந்தலைவர் காமராசரின் 111 வது பிறந்த தினம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கல்வி வளர்ச்சி மட்டுமே மனிதனை உணர்த்துவதோடு நாட்டையும் மேம்படுத்தும் என்பதை நன்கறிந்த படிக்காத மேதையான காமராசர், தான் முதல்வராக இருந்த காலத்தில் 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கல்வியை அளித்து, கல்விப் புரட்சியை ஏற்படுத்தி தந்தவர் ஆவார்.
மேலும் வறுமையின் கோரப் பிடியில் சிக்கி, பள்ளிக்கு வருவதற்கு இயலாமல் போன இலட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிகளில் சேர்ந்து படித்திடவும், மேலும் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசியை போக்கிட உலகம் போற்றும் இலவச மதிய உணவு திட்டத்தினையும் கொண்டுவந்து செயல்படுத்தியவர் பெருந்தலைவர் காமராசர்.
தான் முதல்வராக இருந்த 9 ஆண்டுகளில் கல்விச் சேவை மட்டுமின்றி தமிழகத்தின் முக்கிய நதிநீர் பாசன திட்டங்களுக்கும் வழிவகுத்து தந்தவர் காமராசர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில், முக்கிய தொழிற்சாலைகள் மூலம் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெரும் பங்காற்றியவர் காமராசர் ஆவார்.
மக்கள் சேவை மட்டுமின்றி அரசியலிலும் தூய்மையை நிலை நாட்டிய பெருந்தலைவர் அவர்கள், அரசியலில் எதிராக நின்றவர்களுக்கு கூட தனது அமைச்சரவையில் இடமளித்து மக்கள் சேவை செய்ய ஊக்கமளித்த தன்னலமற்ற தூய அரசியல்வாதியாக திகழ்ந்தவராவார்.
அதே சமயத்தில் அவர் வாழ்ந்து சென்ற தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமை, கல்வி சேவை உள்ளிட்டவை மிகவும் பரிதாபகரமாக உள்ளன.
கல்வியை இலவசமாக மக்களுக்கு அளிப்பதற்கு பதிலாக, இன்றைக்கு கல்வியை பணம் கொழிக்கும் நிறுவனங்களாக மாற்றியமைத்து விட்டனர் இன்றைய ஆட்சியாளர்கள். கல்விச் சேவையை ஏற்று நடத்த வேண்டிய அரசு இலவச திட்டங்கள் என்ற பெயரைச் சொல்லி, இன்றைக்கு டாஸ்மாக் என்ற பெயரில் சாராய சேவையை நடத்தி வருகிறது.
ஆகவே பெருந்தலைவரின் பிறந்த தினத்தை கொண்டாடி வரும் இவ்வேளையில், அவர் வகுத்துத் தந்த பாதையில் கல்வியை அனைவருக்கும் இலவசமாக கிடைக்கச் செய்யும் வகையில், கல்வியை வியாபாரமாக்கும், மக்கள் விரோதங்களுக்கு எதிராக களமிறங்க தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.  என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் பிறந்த நாள்: கல்வியை இலவசமாக பெற்றிட சூளுரைப்போம்! – எஸ்.டி.பி.ஐ பெருந்தலைவர் பிறந்த நாள்: கல்வியை இலவசமாக பெற்றிட சூளுரைப்போம்! – எஸ்.டி.பி.ஐ Reviewed by நமதூர் செய்திகள் on 21:52:00 Rating: 5

No comments:

Powered by Blogger.