என்று தணியும் இந்த ஒற்றுமை தாகம்?
முஸ்லிம்கள் முன்னேறுவதற்கு இந்த நாட்டில் தடையாக இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதில் முக்கிய தேவையாக இன்று இருப்பது ஒற்றுமைதான். முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டால் ஏன் என்று கேட்பதற்கு கூட ஒரு அமைப்பு இல்லை ஒருகாலத்தில். ஆனால் இப்போது அப்படியில்லை. அமைப்புகளுக்கு பஞ்சமேயில்லை.
தினம் ஒரு அமைப்புகள் தோன்றி வருகின்றன. தனக்காக போராட ஒரு அமைப்பு இல்லாத காலத்தில்கூட முஸ்லிம்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆனால் இப்போது அப்படியே தலைகீழ்.
எந்த அமைப்புகளையும் நான் குறையாக சொல்லவில்லை. பெரும்பாலான அமைப்புகள் சமூகதிற்காகதான் உழைக்கிறது. ஆனால் அமைப்புகளுகிடையே நடக்கும் சண்டைகளும், சச்சரவுகளும் அதிகரித்து வருகின்றன. தங்களுக்குள் இருக்கும் சிறு, சிறு பிரச்சனைகளை கலைந்து அவரவர்கள் தங்கள் வழியில் செயல்பட்டால் இந்த சமுதாயத்துக்கு நன்மை பயக்கும். இல்லையென்றால் நாளைய சமூகம் நம்மை பார்த்து காரி துப்பும்.
நமக்கு எதிராக செயல்படக்கூடிய இந்துத்துவ அமைப்புகள் பல பிரிவுகளாக, பிளவுகளாக பிரிந்துதான் இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களிடையே சண்டை போட்டுகொள்வதில்லை. அவர்களின் குறிக்கோளில் தனித்து செயல்படுகிறார்கள்.
இஸ்லாமிய அமைப்புகள் தங்களுக்குள் சண்டைகளை போட்டு பிரிந்து கிடப்பது சமூகத்தின் வளர்ச்சிக்கு பயன்படாது. மாறாக அமைப்புகளின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும். இன்று இஸ்லாமிய சமூக இளைஞர்கள் பொது வெளியில் பல்வேறு போராட்ட களத்தில் போராடுகிறார்கள்.
அவர்களில் பல இளைஞர்கள் சமுதாய அமைப்புகளில் ஈடுபடாமல், மாற்றுமதத்தவர் தலைவராக இருக்கும் முஸ்லிம் சமூகத்துக்கு குரல் கொடுக்கிற பல்வேறு கட்சிகளின் மேல் கவனம் செலுத்துகிறார்கள். அவர்கள் ஏன் இஸ்லாமிய அமைப்புகளிடம் சேரும் ஆர்வம் குறைகிறது. ஏனென்றால் இங்கே அமைப்புகளுக்குள் நடக்கும் சண்டைகளை பெரும்பாலனவர்கள் வெறுக்கிறார்கள்.
அதேபோல அமைப்புகளில் மட்டுமே இதுபோன்ற போட்டிகுணம் இல்லை. பரவலாகவே இஸ்லாமிய சமூகத்தில் இந்த பிரச்னை உள்ளது. நீ ஒரு ஜமாஅத் என்றால் நான் வேறொரு ஜமாஅத், நீ அறக்கட்டளை நடத்தினால் அதற்கு போட்டியாக நான் வேறொரு அறக்கட்டளை நடத்துவேன். நீ ஒரு பத்திரிக்கை நடத்தினால் நான் வேறு பத்திரிக்கை நடத்துவேன், நீ இணையதளத்தை பயன்படுத்தினால் நான் வேறு இணையதளத்தை உருவாக்குவேன் என பிரச்சனைகள் பல்வேறு கோணத்தில் இருக்கிறது.
இந்த விசயங்களெல்லாம் முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் விட்டுகொடுத்து நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு எது தேவையோ அதில் கவனம் செலுத்து முயலவேண்டும்.
உதாரணத்திற்கு கல்வியில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். பொருளாதார முன்னேற்றத்தில், அரசியல் அதிகாரத்தில், ஊடகத்துறையில், அரசுத்துறையில் என அனைத்து விசயங்களிலும் பின்தங்கி இருக்கிறோம்.
வளர்ந்து வரும் மேற்கத்திய கலாச்சரம் நம்மவர்களையும் விட்டுவைக்கைவில்லை. இஸ்லாம் தடை விதித்துதுள்ள மது, மாது, புகையிலை பழக்கங்கள், வட்டி, வரதட்சணை, கூட்டுக்குடும்ப வாழ்வு சிதைவு என முஸ்லிம் சமூகம் பல சவால்களை சந்திக்கின்றன.
இதுபோன்ற அனைத்து விசயங்களிலும் பல பிரச்சனைகள் நம்மில் நிலவுகின்றன. இதெற்கெல்லாம் ஒரு அமைப்பால் சீர்படுத்த முடியாது, உடனடியாகவும் சீர்ப்படுத்தமுடியாது. தொலைநோக்கு பார்வை கொண்ட பல அமைப்புகள் கண்டிப்பாக தேவைதான்.
தனித்தனி செயல்திட்டங்கள், பலவகையான போராட்டம், பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என அனைவரும் தனித்து களம் கண்டாலும் ஒற்றுமையாக செயலாற்றினால், கண்டிப்பாக முஸ்லிம் சமூகம் முன்னேற்றம் அடையும். இறைவன் நாடினால் நாளை நமதே!.
“இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;”. அல்குர்ஆன் 3:103
- வி.களத்தூர் பாரூக்.
என்று தணியும் இந்த ஒற்றுமை தாகம்?
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:49:00
Rating:
No comments: