அன்வர் பாலசிங்கம் என்ற பெயரில் எழுதிய ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ நூலுக்கு மறுப்பு
தந்தை பெரியாரின் பேச்சும் எழுத்தும் வரலாறும் அடங்கிய “ஈ.வே. இராமசாமி என்கிற நான்” என்ற நூலை எழுதி உலகப் பிரசித்தி பெற்ற நண்பர் திரு. பசு கௌதமன் அவர்கள் ஒரு நாள் கைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு தேதியைச் சொல்லி, அந்தத் தேதியில் அன்வர் பாலசிங்கம் எழுதிய கருப்பாயி என்கிற நூர்ஜஹான் என்ற நூலைப் பற்றி விவாதம் நடத்த தஞ்சைக்கு வருமாறு அழைத்தார். அந்த தேதியில் தவிர்க்க முடியாத வேறு வேலை இருந்ததால் இயலாது என்று பணிவோடு கூறிவிட்டேன். என்னுடைய கருத்தைக் கட்டுரையாக எழுதி அனுப்பினால் என் சார்பில் அரங்கில் வாசித்துவிடுவதாகக் கூறி அந்த புத்தகத்தையும் எனக்கு அனுப்பிவைத்தார். அந்த நூலைப் படித்த நான் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தேன். காரணம் நெல்லை மீனாட்சிபுரத்தில் 1981ல் ஒட்டு மொத்தமாக தலித்துகள் மதம் மாறிய நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அது இருந்தது. இந்திய தேசத்தையும் தமிழகத்தையும் உலுக்கியெடுத்த மீனாட்சிபுரம் மதமாற்றம் இந்திய தேசத்தில் எத்தகைய அதிர்ச்சியை இந்துக்களுக்குக் தந்தது என்பதை 1982ஆம் வருடம், மார்ச் மாதம் 20 ஆம் தேதி புகழ் பெற்ற எழுத்தாளர் திரு. ய.ப. இராஜசேகர் அவர்கள் எழுதிய கட்டுரையில் சில வரிகளை கீழே தருகிறேன்.
தமிழகத்தில் மீனாட்சிபுரம் என்ற ஊரில் தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவிய மதமாற்றம் இந்து இந்தியாவை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. காட்மேன் சங்கராச்சாரி முதல் சாய்பாபா வரை பல வகை ராகம்பாட ஆரம்பித்து விட்டனர் (பக்கம் 5)
ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.ஆர். மல்கானி இந்திய நாட்டின் அதிகார மாற்றத்திற்குப்பின் நாடு சந்தித்த மாபெரும் நெருக்கடி இம்மதமாற்றமே என்றார். அடல் பிகாரி வாஜ்பேய் மேற்படி மீனாட்சிபுரம் நேரில் சென்று பார்வை இட்டு பிரதமர் இந்திரா காந்திக்கு ஒரு அறிக்கையை நேரில் சமர்ப்பித்தார். (பக்கம் 6)
தீண்டத் தகாதவன் முத்திரை இட்டு விலங்கினும் கேவலமாய் நடத்தப்பட்டு வாழ்நாளெல்லாம் இந்துக்களின் கொடுமைகளை எதிர் கொண்டே சாவதை விட மவுடீக இந்து மதச்சங்கிலியை உடைத்தெறிந்து உலகம் தழுவிய பவுத்த கிறித்துவ முஸ்லிம் மதத்தினை ஏற்று எந்த மதத்தில் சுயமரியாதையும் சமத்துவமும் உறுதி அளிக்கப்படுகிறதோ அம்மதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார் அண்ணல் அம்பேத்கர் (பக்கம் 6)
பௌத்தம் இந்நாட்டில் பரிவிரக்கத்தை நிலைத்திருக்கச் செய்திடும் என்பதால் பௌத்த சங்கங்களில் பார்ப்பனர்கள் ஊடுருவி அம்மார்க்கத்தையே மங்கிடச் செய்து விட்டனர். உழைக்கும் மக்களுக்கு உயர்வளிக்க வல்ல மார்க்சியமும் இந்நாட்டு பார்ப்பனர்களின் ஏகபோக சொத்தாகி விட்டது. இக்காலக் கட்டத்தில் பிறப்பிலேயே போர்குணமிக்க தலித் மக்கள் இந்து பார்ப்பனியத்தை எதிர்த்து தனிமைப்போர் நடத்திக் கொண்டிருப்பதை விட மத மாற்றத்தின் மூலம் உலக சகோதரர்களிடையே ஒன்றாகி விடுவதே உகந்த வழி என்று அண்ணல் அம்பேத்கர் கூறினார் என்பதாகவும் இன்னும் அதிகமாகவே கூறியுள்ளார்.
அன்பார்ந்த வாசகர்களே! புகழ்பெற்ற எழுத்தாளர் திரு. ய.ப. இராஜசேகர் அவர்களுடைய உரையின் சில பகுதிகளைப் படித்து அது எத்தகைய தத்துவார்த்தமானது என்பதை நீங்கள் விளங்கியிருப்பீர்கள். அந்த மீனாட்சிபுரம் மக்கள் இந்துக்களுக்குக் கொடுத்த அந்த எச்சரிகையைக் கொச்சைப்படுத்துகின்ற வகையில் மீனாட்சிபுரம் மதமாற்றம் தோற்றுவிட்டது என்பது போல் தோழர். அன்வர் பாலசிங்கம் அவர்கள் 'கருப்பாயி என்கிற நூர்ஜஹான்' என்ற நூலில் எழுதியிருந்தது தான், என் அதிர்ச்சிக்கும் வியப்புக்கும் காரணமாகி இருந்தது.
1981ல் மீனாட்சிபுரத்தில் மதம் மாறிய சுமார் 800 குடும்பங்களைப் புதிய முஸ்லிம்கள் என்று காரணம் காட்டி இஸ்லாமியர்கள் ஒதுக்கிவிட்டதாகவும் தற்போது அங்கு தொழுகை நடைபெறவில்லை என்றும், 30 வயதுக்கு மேற்பட்ட 60 பெண்கள் திருமணம் ஆகாமல் கிடப்பதாகவும் பழைய முஸ்லிம்கள் எவரும் பெண் எடுக்க வருவதில்லை என்றும், உழைத்துச் சாப்பிட்டு கவலை இல்லாமல் இருந்த அந்த மக்கள் இன்றைக்கு குமரிகளைப் பெற்று வைத்துக் கொண்டு வேதனையில் ஆழ்ந்து கிடப்பதாகவும் எத்தனை இலட்சம் வேண்டுமானாலும் வரதட்சணையாக கொட்டிகொடுக்கத் தயாராக இருந்தும் பழைய முஸ்லிம்கள் யாரும் பெண் எடுக்க வரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். பெண் எடுக்க வராததற்கு வரதட்சணை காரணமில்லை, புதிய முஸ்லிம்கள் என்பது தான் காரணம் என்பதாக எழுதியுள்ளார்.
1981ல் மதமாற்றம் நடைப்பெற்ற அந்தக் காலத்தில் இருந்து அந்த ஊரைக் கட்டி காத்தவரும், மார்க்கத்தை வளர்த்தவருமான ஜனாப். காதர் பாய் என்பவரின் மகள் கருப்பாயி என்ற நூர்ஜஹான் தாம் மார்க்கக் கல்வி முறையாகப் படித்திருந்தும், பட்டப் படிப்பு படித்திருந்தும் மாப்பிள்ளைக்காக தன் தந்தை ஊர் ஊராக அலைவதைக் கண்டு சகிக்காமல் தன் தந்தைக்கு உருக்கமான கடிதத்தை எழுதிவைத்துவிட்டு தனது நாற்பதாவது வயதில் தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் மனம் உடைந்து போன காதரும் அவருடைய மனைவியும் சேர்ந்து அன்றைக்கே விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
இந்த வேதனை தாளாமல் மேற்படி கருப்பாயியின் சித்தி தெருமுனையில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். இதற்கு முன்னால் பச்சை துண்டு பஷீர் என்பவருடைய பெண்ணை நெல்லையிலிருந்து பெண்பார்க்க வந்தவர்கள் புதிய முஸ்லிம்கள் என்று கேள்விப்பட்டு பாதியிலேயே திரும்பிப் போய்விட்டதாகவும், ஊரைக்கூட்டி பிரியாணி எல்லாம் சமைத்து வைத்திருந்த பஷீர் பாய் செய்தி அறிந்து அவர் மாடி வீட்டிலேயே தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவருடைய மகள் பைத்தியம் பிடித்து நீண்ட காலமாக அவரது வீட்டு அறையில் அடைந்து கிடப்பதாகவும் எழுதியுள்ளார்.
ஒரு காலத்தில் சுயமரியாதையோடு சுதந்திரமாக வாழ்ந்த மீனாட்சிபுரம் மக்கள் இன்று வேதனையில் ஆழ்ந்து கிடப்பதாக நிறைய சம்பவங்கள் சொல்லப்படுகிறது. நூலில் இதைப் படித்த நான் என் இதர பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டுத் தோழர். பசு கௌதமன் அவர்களுக்கு நூல் விவாதத்தில் கலந்துக் கொள்வதாகத் தகவல் அனுப்பிவைத்தேன். உடனடியாக இந்த கொடுமைக்குத் தீர்வுகாண வேண்டும் என்ற எண்ணத்தோடு, வைகறை வெளிச்சம் பத்திரிக்கை ஆசிரியரும் தாருல் இஸ்லாம் ஃபவுண்டேசன் ட்ரஸ்ட் நிறுவனருமான அண்ணன் எம். குலாம் முஹமது அவர்களோடு திருநெல்வேலி சென்றோம். அங்கு மூன்று இளைஞர்களை அழைத்துக் கொண்டோம். நூலாசிரியர் மீனாட்சிபுரம் என்பதற்குப் பதிலாக காமாட்சிபுரம் என்றும் ரஹ்மத் நகர் என்பதற்கு பதிலாக பிலால் நகர் என்றும் எழுதியிருந்ததால் காமாட்சிபுரம் பிலால் நகரைத் தேடி அலைந்து எங்களுக்கு அரை நாள் ஆகிவிட்டது. அப்படி ஒரு ஊரே இல்லை என்று அறிந்தவுடன் அந்த நூல் வெளியீட்டகம் முகவரியைத் தேடிச் சென்றோம்.
செங்கோட்டை தாலுக்கா, பூலான் குடியிருப்பு அஞ்சல், கலங்காத கண்டி, புது காலனி தெரு, கலங்கை பதிப்பகம் என்ற முகவரியைத் தேடி அலைந்தோம். நண்பர் அன்வர் பாலசிங்கம் அவர்கள் கலங்காத கண்டியைச் சேர்ந்தவர் என்பதை அங்கு சென்றே அறிந்து கொண்டோம். அங்கே புது காலனி என்ற இடத்தில் அவருக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கர் நிலபரப்பில் அமைந்திருந்த தனிக் குடியிருப்பை அடைந்த போது மாலை நேரமாகிவிட்டது.
அங்கே நண்பர் அன்வர் பாலசிங்கத்துக்குச் சொந்தக்காரர் திரு. பிரசாந்த் மற்றும் வேறொருவரைச் சந்தித்தோம். நாங்கள் புத்தகம் வாங்க வந்ததாக அறிமுகம் செய்து கொண்டோம். வீட்டில் ஒரு புத்தகம் தான் இருப்பதாகவும் அன்வர் பாலசிங்கம் அறந்தாங்கியில் தங்கி இருப்பதாகவும், காமாட்சிபுரம், பிலால் நகர் என்பவை கற்பனைப் பெயர் என்றும், மீனாட்சிபுரம், ரஹ்மத் நகரை மையப்படுத்தி எழுதிய நூல் என்பதை மேற்படி பிரசாந்த் மூலம் அறிந்து கொண்டோம்.
பொழுதெல்லாம் காமாட்சிபுரத்தை தேடி அலைந்து களைத்துப் போய் விட்டோம். இரவை தங்கும் விடுதியில் கழித்தோம். மறு நாள் புறப்பட்டு ரஹ்மத் நகரை அடைந்தோம். ரஹ்மத் நகர் பள்ளிவாசலில் இமாம் சலாஹ்தீன் அவர்கள் சுமார் 20 பிள்ளைகளை வைத்துக் கொண்டு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். கேரளாவில் இருந்து வந்திருந்த தப்லிக் ஜமாத்தார்களுக்குச் சமையல் நடந்து கொண்டிருந்தது. அஸர் தொழுகைக்கு பாங்கு சொல்லப்பட்டது. சுமார் 60க்கும் மேற்பட்டவர்களுடன் அஸர் தொழுகையை முடித்துக்கொண்டு இமாமைச் சந்தித்தோம்.
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டவர்கள் யார் என்று அவர்களிடத்தில் விசாரித்தோம். அவர் அதிர்ச்சிக்குள்ளாகிப் போனார். ஊர் நாட்டாண்மை ஜனாப். அப்துல் ரஹீம் அவர்களைச் சந்தித்தோம். மேற்சொன்ன விவரங்களை அவரிடத்தில் கேட்ட போது முஸ்லிம்கள் தற்கொலை செய்து கொள்ள அனுமதி உண்டா என அவர் திருப்பிக் கேட்டார்.
நாங்கள் கேட்ட தகவல்கள் அனைத்தும் தவறானது என்றும் மாப்பிள்ளை தேடி எந்தப் பெண்ணும் ரஹ்மத் நகரில் இல்லை என்றும் சில பெண்கள் படித்துக் கொண்டு இருப்பதாகவும் மாப்பிள்ளை வந்தால் திருமணம் செய்து கொடுப்பது பெற்றோரின் விருப்பம் என்றும் கூறினார்.
ஜனாப் மைதீன் என்பவரைச் சந்தித்தபோது தனது தந்தை மர்ஹ்ம் இஸ்மாயில் மீரான் மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியபோது போலிசார் அவரைச் சிறையில் அடைத்து வெடிகுண்டு வழக்குப் போட்டு இரண்டு ஆண்டுகள் கொடுமைப் படுத்தியதாகவும், தனது ஒரே மகளை நல்ல ஈமான்தாரிக்குத் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தன்னைக் கேட்டுக் கொண்டதாகவும் அண்மையில் இஸ்மாயில் காலமாகிவிட்டதாகவும் தன் தந்தையின் வேண்டுகோளின் படி தன் தங்கைக்கு அண்மையில் திருமணம் செய்து வைத்ததாகவும் கூறினார்.
தற்கொலை பற்றி மைதீனைக் கேட்ட போது 1981ல் பசியும் பட்டினியுமாய் கிடந்தோம், எவ்வளவோ துன்பங்களை எதிர்கொண்டோம், அப்போதெல்லாம் தற்கொலை செய்து கொள்ளாத நாங்கள் இப்போது மச்சு வீடு, மாடி வீடுகளில் அல்லாஹ்வின் கிருபையாலும் எங்கள் முன்னோர்கள் 1981 இல் மதமாற்றத்தின் போது செய்த தியாகத்தாலும் நல்ல வாழ்க்கை வாழ்கிறோம். இந்த நேரத்தில் அல்லாஹ்வுக்கு விரோதமான காரியங்களைச் செய்வோமா? என்று கேட்டார்.
அந்த சமயத்தில் அங்கு வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பகுதி செயலாளர் ஜனாப். சலீம் அவர்கள் சமீபத்தில் தான் சேட்டு வீட்டு கதீஜா, ஹம்சா ஆகிய இரண்டு பெண்களை பூலான் குடியிருப்பு பழைய முஸ்லிம்களுக்கு திருமணம் செய்து வைத்தோம் என்றும் கலங்காத கண்டியைச் சேர்ந்த அன்வர் பாலசிங்கம் என்பவர் தன்னை வந்து விசாரித்ததாகவும் தான் இப்படியெல்லாம் அவதூறான செய்தியைச் சொல்லவில்லை என்றும் மீனாட்சிபுரத்தைப் பற்றி அவதூறான நூல் ஒன்று வந்திருப்பதாக முன்பே தெரியும் என்றும் பாலசிங்கம் மீது அவதூறு வழக்குப் போடவேண்டும் என்றும் தங்கள் மாவட்டத் தலைவரிடம் சொல்லியிருப்பதாகவும் கூறியதோடு உடனடியாகத் தொலைபேசியில் மாவட்டத் தலைவரிடம் பேசினார்.
அவர் புத்தகத்தைக் கேட்பதாகவும் எங்களிடம் கூறினார். நூலில் கண்டபடி மீனாட்சிபுரம் பெண்களுக்குத் திருமணம் நடக்காதிருப்பது உண்மையானால் தென்காசியில் ஒரு அலுவலகம் அமைத்து இதற்கு ஒரு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டத்தோடு சென்ற எங்களுக்கு சம்பவம் உண்மையில்லை என்பதை அறிந்தவுடன் ஒரு மன அமைதி ஏற்பட்டது.
21/4/2012 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு, தஞ்சாவூர் நீதிமன்ற சாலை பின்புறம் அமைந்துள்ள சரோஜ் நினைவரங்கத்தில் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் என்கிற நாவல் ஆய்வரங்கம் நடப்பதாக நண்பர் பசு கௌதமன் அவர்களிடம் இருந்து அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் நானும் நண்பர் பசு கௌதமன் அவர்களும், முனைவர் மு.இராமசாமி அவர்களும், எழுத்தாளர் ஹெச்.முஜீப் அவர்களும், எழுத்தாளர் பாமரன் அவர்களும், நாவல் ஆசிரியர் அன்வர் பாலசிங்கம் அவர்களும் இன்னும் சிலரும் கலந்து கொள்வதாக அழைப்பில் இருந்தது. நானும் அண்ணன் எம். குலாம் முஹம்மது அவர்களும் மற்றும் நீலப்புலிகள் இயக்கத் தோழர்களோடு சரியான நேரத்தில் அரங்கை அடைந்தோம்.
இங்கே முன்னாள் தமிழக அமைச்சர் ஜனாப். உபைதுல்லாஹ் அவர்களும் நிகழ்ச்சி நிரலில் கண்டவர்களும் மற்றும் அரங்கு நிறைந்த அளவில் கூடியிருந்தார்கள். துவக்க உரையில் நண்பர் பசு கௌதமன் அவர்கள் இந்த நூலில் உள்ள குற்றசாட்டுகள் எங்கள் பகுதியில் அதாவது தஞ்சைப் பகுதியில் இல்லை என்றும் இது ஒட்டுமொத்த மார்க்கத்தைச் சார்ந்த விவாதம் இல்லையென்றும் விவாதம் இந்த நூலைப் பற்றியதே என்றும் குறிப்பிட்டார்.
நூலாசிரியர் அன்வர் பாலசிங்கம் அவர்கள் எழுந்தவுடன் தன்னுடைய உரையில் தற்கொலைகள் பற்றியோ, திருமணமாகாமல் முடங்கிக் கிடக்கும் பெண்களைப் பற்றியோ அவர் ஏதும் பேசாமல் 1981ல் மீனாட்சிபுரத்தைப் பற்றி இந்துக்கள் கூறிய அவதூறுகள் பற்றி விளக்கமாகக் கூறினார். தற்போது அந்த மக்கள் வறுமையிலும் துன்பத்திலும் வாழ்வதாகக் கூறினார். அடுத்துப் பேசிய முனைவர் மு.இராமசாமி அவர்களும், எழுத்தாளர் பாமரன் அவர்களும் நூலில் கூறப்பட்டுள்ள விசயங்களைப் பற்றிப் பேசாமல் வேறு விசயங்களைப் பேசி முடித்துவிட்டார்கள்.
அடுத்துப் பேச வந்த நான் இந்த நூல் மதம் மாறியவர்களுக்கும் மதம் மாற இருப்பவர்களுக்கும் அர்ப்பணம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மதம் மாறியவர்கள் இந்த நூலை படித்து விட்டு திரும்ப தங்கள் ஜாதிக்கே திரும்பிவிட வேண்டும் என்றும் மாற இருப்பவர்கள் மதம் மாறாமல் இந்து மதத்திலேயே இருந்துவிட வேண்டும் என்னும் பொருள் பட எழுதியிருக்கிறது.
சுதந்திரம் என்பது வெற்று பெயர் மாற்றத்தினாலோ, பண்பாடு, கலாச்சாரங்களை மாற்றிக் கொள்வதாலோ வருவதில்லை என்பதின் படிப்பினை தான் இந்த நாவலுக்கான மூலக்கூறு என்கிறார் நாவலாசிரியர். மேலும் மதங்கள் மனிதர்களின் பாதைகளை வேண்டுமானாமல் மாற்றலாம், பயணங்கள் ஒன்றுதான் என்று கூறுகிறார். இது தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் எதிரான கொள்கை அல்லவா? இதை எப்படி விவாதத்திற்கு எடுத்துக் கொண்டீர்கள். ரோஜாவை என்ன பெயரிட்டு அழைத்தாலும் மணக்கத்தானே செய்யும்? என்ற சேக்ஸ்பியரின் கருத்தைச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர்.
இதற்கு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் தெளிவாகவே பதில் சொல்லியிருக்கிறார். தீண்டத்தகாதவர்களின் தாழ்த்தப்பட்ட நிலை நாற்றமெடுக்கும் பெயருடன் இணைந்திருக்கிறது. அந்தப் பெயர் மாற்றப்படாத வரை சமூக நிலையில் உயர்வதற்கான வாய்ப்பே இல்லை. இந்து மதத்தில் இருந்து கொண்டு பெயரை மாற்றிக் கொள்வது பயனளிக்காது. பெயரில் ஏராளமான செய்திகள் அடங்கியுள்ளன. அது பல மாற்றங்களைச் செய்யும். பெயர் மாற்றம் தீண்டத்தகாதவர்களின் நிலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும். ஆனால் அந்தப் பெயர் இந்து மத வட்டத்திற்கு வெளியே இருக்க வேண்டும். மேலும் அது இந்து மதத்தால் களங்கப்படுத்தி தாழ்வடையச் செய்ய முடியாத சமூகக் குழுவின் பெயராக இருக்கவேண்டும். இத்தகைய பெயரே தலித்துக்களின் சொத்தாக இருக்க முடியும். மதமாற்றத்தின் மூலமே இது சாத்தியப்படும். இந்து மதத்திற்குள்ளேயே பெயர் மாற்றம் செய்யும் கள்ளத்தனம் எவ்வித பலனையும் தராது.
மதமாற்றத்தினால் என்ன நன்மை கிடைக்கும் என்பது தேர்ந்தெடுக்கப்படும் மதத்தையும் அந்த மதத்தினுடைய ஆதரவாளர்களின் சமூக தன்மையையும் பொறுத்தது ஆகவே மதமாற்றம் மட்டுமே தீண்டாமையை ஒழிக்கும் என்பதாக அண்ணல் அம்பேத்கர் தெளிவாக குறிப்பிடுகிறார் தோழர் பாலசிங்கம் வெற்றுப் பெயர் மாற்றம் என்கிறார். பண்பாடு கலாச்சார மாற்றத்தினால் சுதந்திரம் வராது என்கிறார்.
மேலும் பாதைகள் பலவானாலும் பயணம் ஒன்று தான் என்கிறார். இது சங்கராச்சாரியாரின் கருத்தல்லவா? பாதை மாறும் போது பயணம் எப்படி ஒன்றாக இருக்க முடியும். ஒரு பார்ப்பானின் பயணமும் ஒரு வெட்டியானின் பயணமும் ஒன்றாக முடியுமா?
மத மாற்றத்தின் மூலமே சுதந்திர மனிதனாக வாழ முடியும் என்ற அண்ணல் அம்பேத்கர் கருத்து இங்கே மறுக்கப்படுகிறது அல்லவா? இழிவினை கற்பிக்கும் இந்து மதத்தை விட்டு ஒழிந்து இஸ்லாம் மார்க்கத்தில் இணைவதன் மூலம் சுயமரியாதை பெற முடியும், இன இழிவை போக்க இசுலாம் ஒன்றே தீர்வு என்று தன் வாழ்க்கையில் பெரும் பகுதிகளில் எடுத்துரைத்து வந்த தந்தை பெரியாரின் கருத்துக்கு எதிரானது இல்லையா அன்வர் பாலசிங்கம் அவர்களின் கருத்துகள்?
இந்த மாமேதைகள் இருவரின் கருத்தும் மறுக்கப்படுகிற இந்த கருப்பாயி என்கிற நூர்ஜஹான் என்ற நூல் ஒரு அபத்தமான நூல் என்பதை அறிந்தும் இந்நூலை விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட தோழர் பசு கௌதமன் அவர்களும் தோழர் பாமரன் அவர்களும் ஒருவாரம் பறையனாக இருந்து பாருங்கள் அப்போது தான் மத மாற்றத்தின் ஆளுமையும் அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் பெருமையும் உங்களுக்குத் தெரியும்.
தோழர் பாலசிங்கம் அவர்கள் அன்வர் என்கிற பெயருக்கு அர்த்தமில்லாமலே இந்த நூலை எழுதியுள்ளார். ஒரு இறை நம்பிக்கையுள்ள முஸ்லிம் எந்த ஒரு செயலும் அல்லாஹ்வின் கிருபையால் தான் என்று நம்புவான். குடிக்கின்ற தண்ணீர் கூட அல்லாஹ்வின் கிருபை இருந்தால் தான் அதனால் தாகத்தை தணிக்கமுடியும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
மேலும் தற்கொலை செய்து கொள்வது இஸ்லாத்திற்கு எதிரானது. ஒவ்வொரு மூமீன்களும் மறுமை வாழ்க்கைக்காக இம்மை நாளை கழிக்கிறார்கள். ஒரு முஸ்லிம் தற்கொலை செய்து கொண்டால் அதே தண்டனை தான் மறுமையிலும் அவனுக்கு வழங்கப்படும் என்று மார்க்கம் தெளிவாகச் சொல்வதாக மார்க்கஅறிஞர்கள் கூறுகிறார்கள். அதாவது ஒரு முஸ்லிம் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டால் அவன் மறுமையிலும் அவன் தூக்கில் தொங்க வேண்டியது தான். ஒருவன் விஷம் குடித்து மாய்த்துக் கொண்டால் மறுமையிலும் அவனுக்கு வாந்தி மயக்கம் இப்படித் தான் தண்டனை. ஒருவன் மலையிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டால் மறுமையிலும் சிதறிய உடலோடு தான் கிடந்து உழல வேண்டும். ஒரு மனிதனுக்கு உயிரைப் பற்றி எவ்வளவு எச்சரிக்கை செய்யப்படுகிறது. இதை நம்பாதவன் முஸ்லிமே அல்ல.
இசுலாத்தை ஏற்றுக் கொண்டு 35 ஆண்டுகள் மூமீனாக வாழ்ந்த ரஹ்மத் நகர் முஸ்லிம்களுக்கு இது கூடவா தெரியாமல் போனது> ஆகவே இதில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் உண்மையல்ல.
நண்பர் பாலசிங்கம் ஒரு முஸ்லிமுக்கான நம்பிக்கையோடு இந்நூலை எழுதவில்லை. பிஸ்மில்லாஹ் போட்டுக் கூட நூலை துவக்கவில்லை. அவர் எழுத்தின் இடையில் ஒரு இஸ்லாமியருக்கான பண்பாட்டுக்கான கூறுகள் எதுவும் இதில் காணப்படவில்லை. பாலசிங்கமாகவே இந்த நூலை எழுதியுள்ளார். அன்வர் என்பதற்கு அர்த்தமேயில்லை. நூலில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் உண்மையில்லையாதலால் இது விவாதத்திற்கான நூலே அல்ல” என்பதாக கூறினேன்.
எனக்குப் பின்னால் பேச வந்த எழுத்தாளர் ஹெச்.முஜீப் அவர்கள் இந்த நூலை நியாயப்படுத்திப் பேசியதோடு நான் நேரில் சென்று கள ஆய்வு செய்ததைக் கொச்சைப்படுத்திப் பேசினார். நாவல் என்றால் எல்லாம் உண்மையாக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், உலகம் முழுவதும் இஸ்லாத்தில் பாகுபாடு இருக்கிறது என்றும் நாவலில் இல்லாத விசயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.
பார்வையாளர் பகுதியில் இருந்த உள்ளூர் தோழர்கள் அவர் பேசிய கருத்துக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பேசினார்கள். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு அத்துடன் கூட்டத்தை முடிப்பதாக அறிவிப்பு செய்து இறுதியாக நூல் ஆசிரியர் அன்வர் பாலசிங்கம் அவர்களுக்கு ஐந்து நிமிடம் வாய்ப்புக் கொடுத்தார்கள். அப்போது மீனாட்சிபுரத்தில் தற்கொலை செய்து கொண்டது உண்மையென்றோ, 60க்கும் மேற்பட்ட பெண்கள் திருமணம் ஆகாமல் இருப்பது உண்மையென்றோ அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- டி.எம். உமர் ஃபாரூக்
நிகழ்ச்சியில்:
ஹெச். முஜீப்: வட இந்தியாவில் இஸ்லாத்தில் ஜாதி இருக்கின்றது. இதற்கு இணையதளங்களைப் பாருங்கள். அதனால் ஜாதியை ஒழிக்க, இஸ்லாத்திற்கு செல்வதில் அர்த்தமில்லை என இணையதளங்களின் முகவரிகளைத் தந்து கொண்டிருந்தார். குழுமி இருந்தவர்களில் ஒரு முஸ்லிம் மேடைக்குச் சென்று ஹெச். முஜீப் என்பவர் சொல்லும் இணையதளங்கள் இஸ்லாத்தின் எதிரிகளால் உருவாக்கப்பட்டவை என்பதைத் தெளிவுபடுத்தினார்.
அன்வர் பாலசிங்கம் அவர்களுக்கு மீண்டும் பேசிட வாய்ப்பு வழங்கப் பெற்றதால் மீண்டும், டி.எம். உமர் பாரூக் அவர்களுக்கு சில நிமிடங்கள் வழங்கிட வேண்டும் என்றொரு கோரிக்கையை குழுமியிருந்தவர்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டளாரிடம் கூறினார்கள். ஆனால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கௌதமன் அவர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பினை டி.எம். உமர் பாரூக் அவர்களுக்கு வழங்கிட மறுத்தார்கள்.
ஆனால் டி.எம். உமர் பாரூக் அவர்கள் தான் இருந்த இடத்தில் எழுந்து நின்று மீனாட்சிபுரம் மதமாற்றம் ஒரு தோல்வியல்ல என்பதை அழுத்தமாகத் தெளிவுபடுத்தினார்கள்.
நிகழ்ச்சியினூடே, சாமியார் ஒருவர் சாமியார் உடையிலேயே வந்து அன்வர் பாலசிங்கம் அவர்களுக்கு பச்சை ஆடையொன்றை அணிவித்தார். நிகழ்ச்சிக்குப் பின்னரும் மக்கள் ஆங்காங்கே குழுமி நின்று விவாதங்களை மேற்கொண்டார்கள்.
மொத்ததில் டி.எம். உமர் பாரூக் அவர்களின் ஜாதி ஒழிந்தது நூலுக்குப்பின் இஸ்லாத்திலும் ஜாதி உண்டு என்றொரு பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக தெரிகின்றது என்றனர் இன்னொரு சாரார்.
நோக்கம் ஜாதி ஒழியும் என்பதற்காக இஸ்லாத்திற்கு யாரும் செல்ல வேண்டாம், என தீண்டத்தகாத மக்களுக்கு இருக்கும் கடைசி வழியையும் அடைப்பதே ஆகும். இதுவும் மக்கள் விவாதத்தில் வந்தது. அருந்தியர் சமுதாயத்தின் விடுதலைக்காகப் போராடி வரும் வழக்கறிஞர் சின்னசாமி அவர்கள் தாங்களும் இந்த விவாத அரங்கில் பேசிட வாய்ப்புக் கேட்டிருந்ததாகவும். அதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் அதற்கு பின்னர் மறுக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்கள்.
சுருக்கமாகச் சொன்னால் 1981 இல் மீனாட்சிபுரத்தில் ஏற்பட்ட மனமாற்றம் மத மாற்றம் இவற்றிற்கெதிரான பெரும் போர் இன்னும் இன்றும் தொடருகின்றது என்றே படுகின்றது.
- தஞ்சையிலிருந்து 'வைகறை வெளிச்சம்' நிருபர்
அன்வர் பாலசிங்கம் என்ற பெயரில் எழுதிய ‘கருப்பாயி என்கிற நூர்ஜஹான்’ நூலுக்கு மறுப்பு
Reviewed by நமதூர் செய்திகள்
on
05:14:00
Rating:
No comments: