எப்படி செயல்படுவார் மு.க.ஸ்டாலின்! - வி.களத்தூர் சனா பாரூக்
தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்திருக்கிறார் மு.க.ஸ்டாலின். திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் வயது மூப்பின் காரணமாக 2016 சட்டமன்ற தேர்தலை மு.க.ஸ்டாலின் தலைமையில் சந்தித்தது திமுக. இந்த தேர்தலில் திமுக பெற்ற பெரிய வெற்றியில் மு.க.ஸ்டாலினுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அவருடைய கடுமையான உழைப்பிற்கு கிடைத்த பலன் என்றுகூட இதை சொல்லலாம். ஒவ்வொரு தேர்தலையும் பல கட்சிகளை ஒருங்கிணைத்து பெரிய கூட்டணி அமைத்தே திமுக போட்டியிட்டு வந்திருக்கிறது. அப்படிதான் பல தேர்தல்களில் வென்றும் இருக்கிறது.
இந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரையில் தேமுதிக, பாமக, இடதுசாரிகள் ஆகிய கட்சிகளை இணைத்துக்கொள்ள திமுக விரும்பினாலும் அந்த கட்சிகள் விரும்பாததால் கூட்டணி அமையவில்லை. அதனால் திமுக பெரிய கூட்டணி இல்லாமல் சிறிய கட்சிகளை மட்டும் வைத்துக்கொண்டு தேர்தலை சந்தித்தது. அதில் திமுக கூட்டணி 98 இடங்களை வென்றிருக்கிறது. பல தொகுதிகளில் மிகக்குறைந்த வாக்குகளில் வெற்றியை தவற விட்டிருக்கிறது. இன்னும் கூடுதலாக 20 இடங்களில் வென்றிருந்தால் திமுக ஆட்சி அமைத்திருக்கும். அதிமுக விற்கும், திமுக விற்கும் வாக்கு வித்தியாசம் 1.1% தான். 2011 சட்டமன்ற தேர்தலில் 22.4% வாக்குகளுடன் 23 தொகுதிகளில் மட்டும் வெற்றிபெற்றது. எதிர்கட்சியாககூட இல்லாமல் மூன்றாவது இடத்தை பெற்றது திமுக. இத்தேர்தலில் 31.86% வாக்குகளும், கூட்டணி கட்சிகளையும் சேர்த்து 39% வாக்குகளையும் பெற்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலோடு ஒப்பிட்டால் திமுக 9% வாக்குகளை அதிகம் பெற்றுள்ளது.
பலமுனை போட்டியால் திமுக ஆட்சியை பிடிப்பது கடினம்தான் என்று பலரும் கூறி வந்தாலும் திமுக இவ்வளவு பெரிய வெற்றியை பெறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். திமுக இன்று பெரிய எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களை கைப்பற்றி உள்ளது. அதில் திமுக மட்டும் 89 இடங்களை பெற்றுள்ளது.
தமிழக சட்டமன்ற வரலாற்றில் ஒரு எதிர்க்கட்சி பெற்றுள்ள அதிகபட்ச இடங்கள் இது. இதற்கு முன் 2006 ல் அதிமுக 61 இடங்கள் பெற்றதே அதிகபட்ச இடங்களாக இருந்தது. தமிழக அரசியல் வரலாற்றில் வெற்றியிலிருந்து தோல்வி வரை பல சாதனைகளை திமுக படைத்துள்ளது. 1971 சட்டமன்ற தேர்தலில் திமுக 184 இடங்களில் வென்றது. அதுதான் தமிழக சட்டமன்றத்தில் ஒரு கட்சி பெற்ற அதிகபட்ச வெற்றி எண்ணிக்கையாகும். அது இன்று வரை முறியடிக்கப்படவில்லை. அதேபோல் 1991 தேர்தலில் திமுக ஒரு இடத்தில மட்டும்தான் வெற்றிபெற்றது. அதுதான் ஒரு பெரிய கட்சி பெற்ற குறைந்த எண்ணிக்கையாகும். அதேபோலதான் இத்தேர்தலில் 89 சட்டமன்ற உறுப்பினர்களை பெற்று பெரிய எதிர்க்கட்சியாகவும் சாதனை படைத்துள்ளது. கடந்த 24 ம் தேதி திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். அதிலிருந்து அவர் மீது வெகுமக்களின் பார்வை திரும்பியிள்ளது. ஒரு நம்பகமான தலைவராக, எளிதில் அணுகக்கூடியவராக, அரசியல் நாகரீகம் பேணக்கூடியவராக அவரை மக்கள் பார்க்கின்றனர். அவர் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள் ளது.
ஏற்கனவே சென்னை மாநகராட்சி மேயர், உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் என பல பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார். கொளத்தூரில் 'பேசலாம் வாங்க' நிகழ்ச்சிகளை அதிகம் நடத்தி தனது தொகுதி மக்களின் குறைகளை களைவதில் அதிக அக்கறை காட்டியதால் சிறந்த சட்டமன்ற உறுப்பினராக அந்த தொகுதி மக்கள் அவரை பார்க்கிறார்கள். தற்போது அவர் எதிர்க்கட்சி தலைவராக எப்படி செயல்படபோகிறார் என பலரும் ஆர்வமாக கவனிக்கிறார்கள். கடந்த 23 ம் தேதி அதிமுக அரசு பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதின் மூலம் பலரது பாராட்டை பெற்றார் மு.க.ஸ்டாலின். தனக்கு முன்வரிசையில் சீட் ஒதுக்காமல் பின் வரிசையில் அமர்த்தியதை பொறுமையாக ஏற்றுக்கொண்டு அதிமுக அரசிற்கு வாழ்த்துக்கள் கூறியது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.
எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு என்பது மிகப்பெரியது. காபினெட் அமைச்சர் அந்தஸ்தை போன்றது. அவரது பணிகளும் ஒரு முதல்வருக்கு இருக்கும் பணிகள் போல. அரசின் நிறை, குறைகள் சுட்டிக்காட்டுவது, மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பேசுவது, சட்டமன்றத்தில் ஆரோக்கியமான வகையில் விவாதங்களை நடத்துவது, ஒத்திவைப்பு தீர்மானங்கள் கொண்டு வருவது, நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் கொண்டுவருவது, அரசை கண்காணிப்பது, அரசின் செயல்பாடுகளை கண்டித்து போராடுவது என பல பொறுப்புகள் இருக்கின்றன எதிர்கட்சிக்கும் அதன் தலைவருக்கும்.
ஓர் அரசை இயங்க வைப்பதற்கான சாவி எதிர்க்கட்சி தலைவரிடமே இருக்கின்றது. எவ்வளவு பெரிய அசைக்க முடியாத அரசையும் ஆட்டம் காண வைக்கும் சக்தியாக எதிர்க்கட்சி இருக்கிறது. தமிழக அரசியல் வரலாற்றில் எதிர்கட்சியாக இருந்து பல தலைவர்கள் ஆளும் கட்சிக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்திருக்கிரார்கள். 1957 சட்டமன்றத்தில் திமுக நுழைந்தபிறகுதான் மக்கள் பிரச்சனைகள் வைத்து சட்டமன்ற விவாதங்கள் நடைபெற தொடங்கின. தோற்கடிக்க முடியாத அரசியல் ஆளுமையாக இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சியையே பல நிலைகளில் தடுமாற வைத்தவர் எதிர்க்கட்சி தலைவர் கலைஞர் கருணாநிதிதான். அவருக்கு பயந்தே சட்ட மேலவையை கலைத்தார் எம்.ஜி.ஆர். திமுக ஆளும்கட்சியாக இருந்தபோதும் காங்கிரஸ் சிறப்பான எதிர்கட்சியாக செயல்பட்டது. திமுகவிற்கெதிராக நம்பிக்கையில்லா தீர்மானங்கள் உட்பட பல போராட்டங்களை சட்டமன்றத்தில் நடத்தியது அன்றைய எதிர்க்கட்சி காங்கிரஸ்.
மோசமான நிர்வாகத்தை கொடுத்து செயல்படாத ஒரு அரசாங்கமாக கடந்த ஜெயலலிதா அரசு இருந்தது. தனது ஆட்சியின் கடைசி வரை அவர் அவ்வாறான நிர்வாகத்தையே கொடுத்தார். அதற்கு அந்த அரசிற்கு குறையாத வகையில் செயல்படாத எதிர்க்கட்சியும் ஒரு காரணம். அதனால்தான் அது சம்மந்தமான எல்லா விமர்சனங்களையும் அவர் கண்டுகொள்ளவில்லை. அவருடைய செயல்படாத அரசை மக்கள் மத்தியில் தோலுரிக்கும் எதிர்க்கட்சி இல்லாததால் அவர் அதை இலகுவாக கடந்து சென்றார். திமுகவும் கடந்த சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்பட வில்லை என்பதே உண்மை. மக்கள் மன்றங்களிலும் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தவில்லை.
மு.க.ஸ்டாலினுக்கு திறமையும், அனுபவமும், வயதும் இருக்கிறது. திமுக அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அவர் உணமையாக நினைத்தால், கட்சி சாராத பொதுமக்களை அதிகம் கவர வேண்டும். இளைய தலைமுறையினர் திமுகவை நோக்கி வரவேண்டும். அதற்கு எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பை சரியாக பயன்படுத்த வேண்டும். சிறப்பாக செயல்பட வேண்டும். 1984 க்கு பிறகு தமிழக சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான, வீரியமான எதிர்க்கட்சி அமைந்தது இல்லை அல்லது ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது இல்லை. தற்போது திமுக விற்கும், மு.க.ஸ்டாலினுக்கும் நல்லதொரு சந்தர்ப்பம் அமைந்துள்ளது.
மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும், அரசு செய்யும் தவறுகளுக்கும் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து போராடி வந்தால் திமுக அமைப்பு ரீதியாக உயிர்ப்புடன் இருக்கும். ஆளும் கட்சியும் தனது தவறுகளை திருத்துவதற்கு ஒரு வாய்ப்பை அது தரும். மு.க.ஸ்டாலினுக்கும் நன்மதிப்பை பெற்றுத்தரும். சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவர் என மு.க.ஸ்டாலின் வரலாற்றில் இடம்பெறுவார். அவரின் செயல்பாடே திமுகவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் என்றால் அது மிகையில்லை.
மு.க.ஸ்டாலின் எப்படி செயல்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- வி.களத்தூர் சனா பாரூக்
எப்படி செயல்படுவார் மு.க.ஸ்டாலின்! - வி.களத்தூர் சனா பாரூக்
Reviewed by நமதூர் செய்திகள்
on
07:43:00
Rating:
No comments: