அணு உலை எதிர்ப்பு கட்சிகள் உதயகுமாருக்கு ஆதரவு தரவேண்டும்: பழ. நெடுமாறன்
அணு உலை எதிர்ப்பாளரும் ராதாபுரம் பேரவைத் தொகுதி வேட்பாளருமான சுப.உதயகுமார் வெற்றிக்கு அணு உலை எதிர்ப்புக் கட்சிகள் ஆதரவு தரவேண்டும் என, தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உதயகுமாருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்துக்கு வந்த பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அணு உலை எதிர்ப்புப் போராட்டத்தில் எந்தெந்தக் கட்சிகள் ஆதரவாகக் குரல் கொடுத்தனவோ அந்தக் கட்சிகள் போராட்டத்தின் தளபதியாக விளங்கிய உதயகுமாருக்கு ஆதரவாக, அவர்களது வேட்பாளர்களை திரும்பப் பெற்றுக்கொண்டு அவரது வெற்றிக்கு ஒத்துழைக்க வேண்டும்.
2012-ஆம் ஆண்டு கேரளக் கடல் பகுதியில் 2 தமிழ் மீனவர்கள் இத்தாலிக் கப்பல் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக 2 மாலுமிகள் மீது வழக்குப் பதியப்பட்டது. இருவரும் ஜாமீன் வழங்கப்பட்டு இத்தாலி அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் ஐ.நா. தீர்ப்பாயம் இந்திய கடல் எல்லையில் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது நிரூபணமானால் இத்தாலி அரசு இரு மாலுமிகளையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி நீதி விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. இது முக்கியமான தீர்ப்பு. இதற்காக இந்திய அரசு இத்தாலி அரசுடன் பேச்சு நடத்தியுள்ளது. ஐ.நா.விலும் முறையிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன்.
அதேநேரம், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து காங்கிரஸ், பாஜக அரசுகள் ஒரு வழக்குக்கூடப் பதியவில்லை. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
திமுக தலைவர் கருணாநிதி மதுரைப் பொதுக்கூட்டத்தில் பேசியபோது, தமிழகத்தில் கோடிகோடியாக பணம் பதுக்கிவைத்திருப்போர் மீது பிரதமர் மோடி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதை நான் வரவேற்கிறேன்.
இந்தத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னை பற்றி ஆதரவாகப் பேசாத எந்தக் கட்சியாக இருந்தாலும் அந்தக் கட்சி வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். நேர்மையான, ஊழலில் ஈடுபடாத, பொதுத் தொண்டில் ஆர்வமுள்ளோர் எந்தக் கட்சி வேட்பாளர்களாக இருந்தாலும் அவர்களை ஆதரிக்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியில் கூறியதுடன் நிற்காமல் மதுவை ஒழிப்பதில் உண்மையிலேயே உறுதியாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
அணு உலை எதிர்ப்பு கட்சிகள் உதயகுமாருக்கு ஆதரவு தரவேண்டும்: பழ. நெடுமாறன்
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:34:00
Rating:
No comments: