மின்சார கட்டணம் குறைப்பு – படிப்படியாக மதுக்கடைகள் மூடல் : உண்மையிலேயே யாருக்கு லாபம்?!
பொதுவாகவே நம் மக்களுக்கு யாராவது திடீரென நல்லது செய்தால் , ஏன் இவற்றையெல்லாம் செய்கிறார்கள் ஏதாவது உள்நோக்கம் இருக்குமோ என்று சந்தேகத்துடையே பார்க்க துவங்கி விடுவார்கள், இந்த லட்சணத்தில் அரசியல்வாதிகள் நல்லது செய்தால் கேட்கவா வேண்டும்.
தமிழக முதலமைச்சராக ஜே.ஜெயலலிதா அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட முதல் நாளே கையொப்பமிட்ட 5 நலத்திட்டங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. எதிர்கட்சிகள் , பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. சமூக வலைத்தளங்களிலும் எல்லா அரசியல்வாதிகளும் நல்லது செய்ய ஆரம்பித்து விட்டால் நாங்கள் எல்லாம் “நகைச்சுவை பக்கங்களை” அழித்து விட்டு வேறு எங்காவது போய்விட வேண்டுமா என்ற வகையில் “மீம்” படங்கள் பட்டையை கிளப்புகின்றன. உண்மையில் எதுதான் உண்மை என்று இன்னும் பலருக்கு சந்தேகம் இருக்கவே செய்கிறது.
சந்தேகமே வேண்டாம் மக்களே அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு பயன்படக்கூடிய சிறந்த திட்டங்களே ..
மதுக்கடைகள் குறைப்பு :
தமிழகத்தில் மொத்தம் அரசு சார்பில் 6800 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 4000 கடைகள் பார் வசதிகள் செய்யப்பட்டவை. இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் முதல் கையெழுத்தாக 500 மதுக்கடைகள் முதல்கட்டமாக மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த உத்தரவின் படி தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6800-ல் இருந்து 6300-ஆக குறைய இருக்கிறது. இதில் வழிபாட்டுத்தலங்கள், பள்ளிக்கூடங்கள், பிரதான சாலைகளுக்கு அருகிலுள்ள கடைகள் அகற்றப்படுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
100 யூனிட் இலவச மின்சாரம் :
நாம் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரத்தின் முதல் 100 யூனிட்டுகளுக்கு இனி கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இதில் உள்குத்து வெளிக்குத்து எல்லாம் எதுவும் இல்லை நேரடியாக உங்களுடைய பயன்பாட்டில் முதல் 100 யூனிட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது அது எல்லா பயனாளர்களுக்கும் பொருந்தும் அதாவது எல்லா வீடுகளுக்கும் இதே சலுகை உண்டு.
அடுத்ததாக நீங்கள் 100 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துபவராக இருந்தால் 101 முதல் 200-வது யூனிட் வரை நீங்கள் தலா யூனிட்டுக்கு 1 ரூபாய் வீதம் செலுத்த வேண்டும் (இது முன்னர் முதல் யூனிட்டில் வசூலிக்கப்படும் கட்டணம்). அடுத்து முதல் இலவச 100 யூனிட்டுகள் அல்லாது கூடுதலாக 200 யூனிட்டுகள் (மொத்தமாக 300 யூனிட்) மின்சாரம் பயன்படுத்தினால் 1.50 ரூபாய் வீதம் ஒரு யூனிட்டிற்கு வசூலிக்கப்படும் , அதற்க்கு அதிகமாக பயன்படுத்தும்போது கூடுதலான ஒவ்வொரு நூறு யூனிட்டிர்க்கும் 1 ரூபாய் அதிகம் வீதம் உயர்த்தி ஒவ்வொரு யூனிட்டிர்க்கும் அதற்குரிய கட்டணம் வசூலிக்கப்படும் . எப்படியாயினும் முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் (பிறவிப்பயன் கிடைத்துவிட்டது மக்களே)
ஆனால் இருங்கள்… இதில் இன்னொரு சிக்கல் இருப்பதாக பாமக கட்சித்தலைவர் ராமதாஸ் ஒரு கணக்கை வெளியிட்டுள்ளார் அவருடைய கணக்குப்படி பார்த்தல் அரசாங்கம் காடியிருக்கும் கணக்கை விட குறைவாகவே மக்களுக்கு இலவசம் கிடைக்கிறது , அந்த கணக்கு இதுதான்.
அரசு பிறப்பித்துள்ள ஆணைப்படி இரு மாதங்களுக்கு 100 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு பிரச்சினை இல்லை. அவர்களிடம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால், அதற்கும் அதிகமாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்குத் தான் சிக்கல் ஏற்படும்.
உதாரணமாக, ஒரு வீட்டில் 2 மாதங்களுக்கு 600 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுவதாக வைத்துக் கொள்வோம். அந்த வீட்டிற்கு இப்போது ரூ.2790 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டப்படி மொத்தப் பயன்பாட்டில் 100 யூனிட்டுகளை கழித்து விட்டு மீதமுள்ள 500 யூனிட்டுகளுக்கு ரூ.1330 கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். இது தான் நேர்மையான நடைமுறையாக இருக்கும். அவ்வாறு செய்யும் போது அக்குடும்பத்திற்கு ரூ.1460 மிச்சமாகும்.
ஆனால், அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி மொத்தக்கட்டணமான ரூ.2790 -ல் 100 யூனிட்டுகளுக்கான கட்டணம் ரூ.350-ஐ கழித்து விட்டு, மீதமுள்ள ரூ.2440 செலுத்த வேண்டும். இதனால் இத்திட்டப்படி அந்த குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டிய கட்டண சலுகையில் ரூ.1110 குறைகிறது.
அதேபோல், ஒரு வீட்டில் இரு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால் இலவச மின்சாரத் திட்டத்தின்படி 100 யூனிட் கழித்து மீதமுள்ள 100 யூனிட்களுக்கு ரூ.120 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இப்போது ரூ. 233 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இப்போது ரூ.1030 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச மின்சாரத்திட்டத்தின்படி இது 300 யூனிட் கட்டணமான ரூ.730 ஆக குறைக்கப்படவேண்டும்; ஆனால் இது ரூ.830 ஆக மட்டுமே குறைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் 1.11 கோடி வீடுகளுக்கு பெரிய பயன் கிடைக்காது.
தவிர, விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி இருப்பது (தேசிய வங்கிகளில் பெற்றுள்ள கடன்களை அல்ல), கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் என்றும், விசைத்தறிக்கு 750 யூனிட்டுகள் என்றும் உயர்த்தி இருப்பது, திருமண உதவி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கம், 8 கிராம் என்று உயர்த்தி இருப்பது என எல்லாமே நல்ல துவக்கமாகத்தான் இருக்கிறது. அரசும் செயல்பட துவங்கியிருக்கிறது , எதிர்கட்சிகளும் ஆக்கப்பூர்வமாக கேள்வி கேட்கத்துவங்கியிருக்கின்றன இதை ஜனநாயகத்தின் நல்ல மாற்றமாக எடுத்துக்கொண்டு வாழ்த்துவோம் .
- See more at: http://www.thoothuonline.com/archives/76305#sthash.paz0bkxP.dpuf
மின்சார கட்டணம் குறைப்பு – படிப்படியாக மதுக்கடைகள் மூடல் : உண்மையிலேயே யாருக்கு லாபம்?!
Reviewed by நமதூர் செய்திகள்
on
02:16:00
Rating:
No comments: