பாலிதீன் பைகளைத் தடைசெய்யத் தயக்கம் ஏன்?

மத்திய அரசு சமீபத்தில் ஒரு சர்ச்சைக்குரிய முடிவை எடுத்திருக்கிறது. பாலிதீன் பைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்குறித்துப் பல நிபுணர் குழுக்கள் எச்சரித்திருக்கும் நிலையில், ‘பாலிதீன் பைகள் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்படாது’ என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
‘தூய்மை இந்தியா’ என்ற பெயரில் நாட்டைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் இயங்குவதாகச் சொல்லிக்கொள்ளும் மத்திய அரசு, மறுபுறம் சுற்றுச்சூழலுக்குத் தீங்கிழைக்கும் பாலிதீன் பைகளுக்குத் தடையில்லை என்று சொல்வதுதான் விநோதம்.
பாலிதீன் பைகள் தயாரிப்பைக் கட்டுப்படுத்த அவற்றின் மீதான வரியை உயர்த்தலாம் என்று முன்வைக்கப்பட்ட யோசனையையும் துரதிர்ஷ்டவசமாக மத்திய அரசு அலட்சியப்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தில், ஐரோப்பிய யூனியனின் நிலைப்பாட்டை மத்திய அரசு கவனத்தில்கொள்ளவில்லை. ஒரு ஆண்டுக்குத் தனிமனிதரின் பாலிதீன் பைகள் பயன்பாட்டை வெகுவாகக் குறைப்பது என்று ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகள் முடிவெடுத்திருக்கின்றன. பாலிதீன் பைகளின் உற்பத்தியாளர்கள் அதிகம் உள்ள அமெரிக்காவும் இதே முடிவுக்கு வந்திருக்கிறது. 2015 ஜூலை மாதம் முதல் பாலிதீன் பைகளுக்குத் தடை விதிக்கப்போவதாக கலிஃபோர்னியா மாகாண நிர்வாகம் அறிவித்திருப்பதும் குறிப்பிடத் தகுந்தது.
பாலிதீன் பைகளின் ஆபத்தை மக்கள்தான் உணரவில்லை. ஆனால், அரசு நிர்வாகமும் உணரவில்லை என்பதுதான் ஆச்சரியம். இந்தப் பைகள் எளிதில் மக்குவதுமில்லை, உருக்குலைவதுமில்லை. நகரங்களில் பாதாளச் சாக்கடைகளை இவை அடைத்துக்கொள்கின்றன. நிலத்தால் தண்ணீர் உறிஞ்சப்படுவதற்குத் தடையாகவும் இந்தப் பைகள் இருக்கின்றன. நிலத்தில் கொட்டப்படும் பாலிதீன் பைகள் ஆடு, மாடு, மான் போன்ற விலங்குகளாலும், கடலில் கொட்டப்படும் பைகள் மீன்கள், திமிங்கிலம் போன்ற கடல்வாழ் உயிரினங்களாலும் விழுங்கப்படுகின்றன. இவை அந்த உயிரினங்களின் இரைப்பையில் சிக்கி அவற்றை உயிரிழக்கச் செய்துவிடுகின்றன. அது மட்டுமல்லாமல், கடலில் நாம் கொட்டும் குப்பைகளில் பெரும் பகுதியாக பாலிதீன் பைகளும் பிளாஸ்டிக் பொருட்களும் இருப்பதால், கடல் சூழல் பெரும் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது.
பாலிதீன் பைகளின் பயன்பாடு பரவிவிட்டதாலும் இந்தப் பைகளின் தயாரிப்பு பெரும் தொழிலாக ஆகிவிட்டதாலும் தடைவிதிப்பதற்கு அரசு தயக்கம் காட்டுகிறது. பாலிதீன் பைகளின் பயன்பாட்டை அரசு கடுமையான நடவடிக்கைகள் மூலம் குறைக்க வேண்டும் என்று 2012-லேயே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. எனவே, மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாலிதீன் பைகளுக்குத் தகுந்த மாற்று என்ன என்பதையும் ஆராய்வது மிகவும் அவசியமானது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மாற்றுப் பொருட்கள் தயாரிப்பில் உலக நாடுகள் பலவும் ஈடுபாடு காட்டி வரும் நிலையில், இந்தியா அதில் காட்டிவரும் அக்கறையின்மை மிகவும் ஆபத்தானது.
இந்தியாவிலேயே சில மாநிலங்களில் பாலிதீன் பைகளின் பயன் பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசும் இதைப் பின்பற்றி சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும். அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காத்திராமல், மக்களே பாலிதீன் பைகளின் பயன்பாட்டைக் குறைத்துக்கொண்டால், மாற்றம் நிச்சயம்.
பாலிதீன் பைகளைத் தடைசெய்யத் தயக்கம் ஏன்? பாலிதீன் பைகளைத் தடைசெய்யத் தயக்கம் ஏன்? Reviewed by நமதூர் செய்திகள் on 20:58:00 Rating: 5

No comments:

Powered by Blogger.