அக்னிபரிட்சைக்கு தமிழக ஊடகங்கள் தயாரா?

இந்தியா முழுவதும் செய்தி ஊடகங்களில் பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறுகின்றன.
சமீபகாலமாக தமிழக செய்தித் தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்கள் சர்ச்சைக்குரிய பேசு பொருளாக மக்களிடம் நிலவி வந்தது.  இறுதியில் செய்தி ஊடகங்கள் மீது வெடிகுண்டு வீசும் அளவிற்கு வளர்ச்சி (?) அடைந்துள்ளது. இதற்கு காரணம் கருத்துக்களை எதிர்கொள்ளும் பேச்சாளர்களின் அறிவின்மையா? செய்திகளை நேர்பட பேசும் துணிவின்மையா? என்பன போன்ற பல கேள்விகள் அகத்தினுள் அலையாக எழுகின்றது.


விவாதங்களின் நடைமுறை சூழல்:

தமிழகத்தில் நல்ல எழுத்தாளர்கள், சமூக போராளிகள், அறிஞர்கள்  அனைத்து சமூகங்களிலும் மக்கள் பயன் பெறும் வகையில் தனது ஆக்கங்களையும் திறமைகளையும் நிருபித்து உள்ளனர்.  ஆனால் விவாதங்களில், தலைப்பின் கீழ்  பேசுவதற்கு அழைக்கப்படும்  பிரமுகர்களோ அது குறித்து விரிவாக பேசும் அளவிற்கு துறை சார்ந்த வல்லுனர்களாக  நிச்சயமாக இல்லை .மாறாக அரசியல் கட்சிகளில் தொடர்புள்ள சில முக்கிய பிரமுகர்கள்  மட்டுமே பிரதிநிதியாக வந்து தொடர்ந்து பேசுகின்றார்கள் .அவற்றிலும் விஷயம் தெரிந்த சில கட்சி பிரமுகர்கள் ஒதுக்கப்படுகின்றார்கள்.

தமிழகத்தில் செய்தி தொலைக்காட்சிகளில்  விவாத மேடைகள் விஸ்வரூபம் திரைப்பட சர்ச்சைக்கு பிறகே அதிகமாக கவனத்தை ஈர்த்தது .அந்த தருணத்தில் ஆப்கான் தேசத்து  மக்கள் பற்றி தரக்குறைவாக பேசப்பட்ட போதும் தமிழ் மீடியாக்களில் அவர்களுடைய கண்ணியத்தைக் காப்பாற்ற இஸ்லாமியர்கள் கூட  தங்கள் கருத்துக்களை விரிவாக முன் வைக்கவில்லை.  சமகாலத்தில் உலக அரங்கில் யோன்னி ரிட்லி போன்ற பத்திரிக்கையாளர்கள் தலிபான்கள் குறித்து நேர்மறையாக பேசுவதை முஸ்லிம் சமூகங்களின் பிரதிநிதிகள்  அறியாமலும் இல்லை

மாறாக நடிகர் மணிவண்ணன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்ற போது ஆப்கானிஸ்தான் விடுதலை வீர்கள் குறித்து நேர்மறை தகவலை முன்வைத்து ஊடகங்களின் தவறான பிரசாரத்திற்கு பதிலடி கொடுத்ததை  யாரும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது .

ஊடகங்கள் கண்டு கொள்ளாத  உண்மை போராளிகள்:

"இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் .ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்" என்ற  நகைச்சுவை  நடிகர்  வடிவேலுவின் நகைச்சுவை  வசனம் முஸ்லிம் சமூகங்கள் மற்றும் தமிழ் தேசிய அமைப்புக்களுக்கு  தற்போது ஒப்பாகின்ற வகையில்,  அவர்கள் தொலைக்காட்சி  செய்தி விவாதங்களில் கேவலப்படுத்தப்படுகின்றனர்.

வேதகால மக்களிடமிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை காப்பாற்றும் வகையில் இந்திய மக்களால் வரவேற்கப்பட்டவர்கள்  இஸ்லாமிய ஆட்சியாளர்கள். மக்களை சுரண்டுவோர் மீது போர் செய்து வென்று, வர்ணாசிரமக் கொள்கையை விரட்டி காஷ்மீர் முதல் தெற்கே மதுரை வரை  1,000 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த வரலாறுகளை கொண்டவர்கள் முஸ்லிம்கள். இது போன்றே தமிழ் சமூகங்களும் கல்வி, பண்பாடு, வீரம் ,கலை , ஆட்சி செய்யும் பாங்கு, அறிவு என பல ஆயிரம் ஆண்டுகளாக வரலாறுகளை தன்னிடம் வைத்துள்ளது.

கல்வி, வீரம், கலை, ஆட்சி செய்யும் பாங்கு, அறிவியல், போர் செய்யும் நுட்பம் என  இந்த பாரம்பரியத்தில் வந்த இந்திய சமூகங்களில், செய்தித் தொலைக்காட்சிகளில் வரும் விவாதங்களை எதிர்கொள்ள துறை சார்ந்த மனித வளங்கள் இல்லாமலா இருப்பார்களா என சமூகங்களில் இருக்கும் நடுநிலையாளர்கள் சிந்தித்து பார்க்கட்டும் .

இந்த செய்தித் தொலைக்காட்சிகளில் பங்கு பெறும் பலரில், தலைப்பை  தாண்டிய விசயங்கள்  குறித்து விரிவாக பேசும் துறை சார்ந்த வல்லுனர்கள் இல்லை என்பது நிதர்சன உண்மை . பிறகு எவ்வாறு பொதுக்களத்திற்கு உண்மையை உரக்க சொல்ல முடியும்?

கருத்துரிமை என்பதே இந்தியாவில் எவர்கள் உரக்க பேசுகின்றார்கள் என்பதை அறிந்து அவர்களை முடக்குவதற்கு தான் என்பது பலரின் அனுபவங்கள். விவாதங்களில் பேசும் சிலரின் கருத்துக்கள் இந்திய தேசத்தில் பொது மக்களின் கருத்துக்களாக  வெளிச்சத்திற்கு வருகின்றது .

அருந்ததி ராய், தீஸ்தா செதல்வாட்  போன்றோர் மக்கள் வலிகளை உரக்க சொல்கின்றார்கள். ஆனால், இவர்களின் வலிமையான கருத்துகளை எந்த ஊடகமும் போட்டி போட்டுக் கொண்டு வெளிக்கொணர்வது இல்லை.  இவர்கள் எல்லாம் நாடு அறிந்த சமூக போராளிகள்.

நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களுக்கு,  முகம் தெரியாமல் பெருமை விரும்பாமல் மக்களுக்கும் சமூகங்களுக்கும் எதிராக வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் களப்பணி புரிபவர்களாகவும், அறிவைக் கொடுக்கும் ஆசிரியர்களாகவும், நூல்கள் கொடுக்கும் எழுத்தாளராகவும் அதே நேரத்தில் இன்னும் படிக்கும்  மாணவர்களாகவும் வாழ்கின்ற  மனித வளங்கள் இந்தியாவில் தமிழ் பேசும்  சமூகங்களில்  ஏராளமாக இருக்கின்றார்கள்.  அவர்களை அறிமுகம் செய்து வைக்க மக்கள் தயாராகவே இருக்கிறார்கள்.

உரத்த சிந்தனை:

இந்திய தேசத்தில் நேர்மையான ஊடகங்கள் வரும் வரை,  கொள்கை இல்லாத மாற்று ஊடகங்கள் மாறாத காரணத்தால் நடுநிலை காக்கும் சமூக ஆர்வலர்கள்  இது போன்ற விவாதங்களை ஆரோக்கியமான சூழலில் மக்கள் முன்னிலையில் நடத்துவது சிறந்தது.

அதனை பொது மக்களிலுள்ள ஊடக ஆர்வலர்கள் காட்சிப்படுத்தி, முகநூல் மற்றும் யூ-ட்யூப் போன்றவற்றின் வழியாக வெளிப்பரப்பி மக்கள் சிந்தனையில் மாற்றங்களை விதைக்காத வரை தலைக்கனம் பிடித்த ஊடகத் தலைமுறையினர் திருந்தமாட்டார்கள் .

ஹிந்துத்வா சக்திகளின்  தூண்டுதலால் மக்களிடமிருந்து மறைக்கப்பட்ட சன் டிவி வீரபாண்டியன் முதல் அதே சக்திகளால் எள்ளி நகையாடபட்ட விடுதலை ராஜேந்திரன் வரையிலானோரின் தனி நபர் கண்ணியம் இது போன்ற விவாத மேடைகளில் மட்டுமே வருங்ககாலங்களில் காப்பாற்றப்படும்.

மக்கள் நடத்தும் அக்னி பரிட்சையில் ஊடகத்தின் (போலி)பத்தினித்தனம் இனி வெல்லுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

அபூஷேக் முஹம்மத்
அக்னிபரிட்சைக்கு தமிழக ஊடகங்கள் தயாரா? அக்னிபரிட்சைக்கு தமிழக ஊடகங்கள் தயாரா? Reviewed by நமதூர் செய்திகள் on 22:12:00 Rating: 5

No comments:

Powered by Blogger.