இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு சாமானியனின் மடல்!

மரியாதைக்குரிய இந்திய பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு ஒரு சாமானியனின் மனம் திறந்த மடல்!

குஜராத் என்னும் ஒரு மாநில முதல்வராக இருந்த நீங்கள் இன்றைக்கு 125கோடி மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக பதவி வகித்து வருகிறீர்கள்.
நாட்டின் பிரதமராகி தனக்கு விசா தரமறுத்த அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளையும் அரசு முறை பயணமாக சுற்றி பார்த்து விடவேண்டுமென்ற உங்களின் கனவுகளும் தற்போது நிறைவேறி வருகின்றன.
தாங்கள் ஆட்சி என்னும் அதிகாரத்தை அடைவதற்காக எடுத்து கொண்ட பகீரத முயற்சியையும் அதற்காக ஊடகங்கள் வரிந்து கட்டி நின்றதையும் யாரும் மறந்து விடவில்லை.
விளம்பரத்திற்காக மட்டுமே 15ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்த பாஜகவினர் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டையும் நீங்கள் மறுத்ததாக நினைவில்லை.
இத்தனை களேபரத்திற்கு மத்தியிலும் 31%விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று 69%விழுக்காடு வாக்குகளின் எதிர்ப்பிலும் தாங்கள் 282சீட் என்ற தனிப்பெரும்பான்மை பெயரில் ஆட்சியிலும் அமர்ந்து விட்டீர்கள்.
உலகின் பெரும்பான்மையான நாடுகளில் 50க்கும் மேற்பட்ட சதவீதம் வாக்குகள் பெறும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலை நமது நாட்டிலும் இருந்திருக்குமானால்…தங்களின் கனவு நிறைவேறி இருக்குமா?
நமது நாட்டின் அரசியலமைப்பின் சட்ட விதிமுறைகள் சீட் எண்ணிக்கை என்ற அடிப்படையில் ஆட்சி அதிகாரம் தீர்மானிக்கப்படும் என இருப்பதால் தாங்கள் மிக எளிதாக ஆட்சியில் அமர்ந்து விட்டீர்கள்.
69%விழுக்காடு மக்கள் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பது உங்களுக்கு மிக நன்றாகவே புரியும்.உங்களது இந்துத்துவா கொள்கையும்,முஸ்லிம்கள்,தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கெதிரான போக்குகளும் தான் காரணமென்பதை தேர்தலுக்குப்பின் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
உங்களுக்கு வாக்களித்த 31%விழுக்காடு மக்களுக்கு மட்டும் நீங்கள் பிரதமர் அல்ல,உங்களுக்கு வாக்களிக்காத 69%விழுக்காடு மக்களுக்கும் நீங்கள் தான் பிரதமர் என்பதை நினைவில் கொண்டு நீங்களும் உங்களது அமைச்சரவை சகாக்களும் செயல்பட வேண்டுமென்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பாகும்.
தேர்தலின் போது நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளான நதிகள் இணைப்பு,சாலைவசதி,தடையில்லா மின்சாரம்,வேலைவாய்ப்பு,பொருளாதார முன்னேற்றம்,அனைவருக்கும் தரமான கல்வி,விலை உயர்வை கட்டுப்படுத்துதல் போன்ற மக்களின் அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை கொடுப்பீர்களானால்…
உங்கள் மீதான அவநம்பிக்கையில் உங்களுக்கு வாக்களிக்காத 69%விழுக்காடு மக்களும் ஏன் உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்று சிந்திக்க ஆரம்பிப்பர்.
மக்களின் நன்னம்பிக்கையை  பெறவேண்டிய உங்களது நிர்வாகம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சினையை உண்டாக்கி அதன் மூலம் மக்களிடையே பிணக்குகளை உருவாக்கி வருவது ஆரோக்கியமானதா?என்பதை சிந்தியுங்கள்.
தங்களின் மீதான கடந்த கால கறைகளை போக்கும் வகையில் இப்போது உங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கும் போது அதை பயன்படுத்துவதே உங்களது அரசியல் எதிர்காலத்திற்கு மிகவும் சிறந்ததாகும்.
சாதிவெறி,மதவெறி,இவைகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு நாட்டின் முன்னேற்றத்தை பற்றி சிந்தியுங்கள்.உங்களது அமைச்சரவை சகாக்களையும் சிந்திக்க தூண்டுங்கள்.ஒட்டு மொத்த மக்களின் உள்ளங்களையும் கவரக்கூடியவர்தான் மிகச்சிறந்த தலைவராக இருக்க முடியும்.
மதமாற்ற தடைச்சட்டம்,ஹிந்தி திணிப்பு,சமஸ்கிருத திணிப்பு,பொது சிவில் சட்டம்,இந்துத்துவா போன்ற மக்களை பிரித்தாளும் சூழ்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து நாட்டின் மதசார்பின்மைக்கும்,சகோதரத்துவத்திற்கும் நெருக்கடியை உருவாக்கி விடாதீர்கள்.
அனைத்து மக்களுக்குமான நல்லாட்சியாக உங்களது ஆட்சி அமையுமானால்…கடந்த தேர்தலில் உங்களுக்கு வாக்களிக்காத நாங்கள் ஏன் எதிர்காலத்தில் உங்களை புறக்கணிக்க வேண்டும்?
மனதில் பட்டதை எழுதி விட்டேன்.இதைப்பற்றி யோசிக்க வேண்டியது நீங்கள் தான்.
அன்புடன்
கீழை ஜஹாங்கீர் அரூஸி EX.M.C
- See more at: http://www.thoothuonline.com/archives/70920#sthash.ttY8qxu3.dpuf
இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு சாமானியனின் மடல்! இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு சாமானியனின் மடல்! Reviewed by நமதூர் செய்திகள் on 22:19:00 Rating: 5

No comments:

Powered by Blogger.