ஆட்சியாளர்களின் ஊழல் சொத்துகளைப் பறிமுதல் செய்வோம்: வைகோ!

காஞ்சிபுரம்(03/10/2015): "இரண்டு திராவிட கட்சிகளின் ஊழல் சொத்துகளை பறிமுதல் செய்வோம்" என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இல்லத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சனிக்கிழமை தொடங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
"மக்கள் சந்திப்பு மறுமலர்ச்சி பயணத்தை தொடங்கியுள்ளோம். அறிஞர் அண்ணா பிறந்து வளர்ந்த இந்த இல்லத்தில், அண்ணாவின் வாழ்த்துக்களை பெறுவதற்காக இங்கே வந்திருக்கிறேன். தான் ஆட்சி புரிந்த காலத்தில் வருமானத்திற்காக மதுவை கொண்டுவர அனுமதிக்கமாட்டேன், தாய்மார்களின் கண்ணீருக்கு காரணமாக இருக்க மாட்டேன் என்று சொன்னவர் அண்ணா.
ஆனால் அவர் வழியில் ஆட்சி நடத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த கருணாநிதி மதுவை கொண்டுவந்தார். அண்ணாவின் பெயரில் கட்சியைத் தொடங்கிய எம்.ஜி.ஆரும் அதையே செய்தார். அதற்கு பின் வந்த ஜெயலலிதா முன்பை விட பன்மடங்கு மதுக்கடைகள், மதுபார்கள் என தமிழகமே இன்று நரகத்தின் பிடியில் சிக்கி உள்ளது. லட்சோபலட்சம் தொண்டர்களும், தலைவர்களும் கண்ணீர் சிந்தி அண்ணா வளர்த்த திராவிட இயக்கத்தை, இந்த 2 திராவிட கட்சிகளும் சீரழித்துவிட்டன. மாணவர்களைக் கொண்டே மாணவர்களை வைத்து மது ஒழிப்பு பிரச்சார பயணத்தை வெற்றிகரமாக நடத்தினோம். மதுவுக்கு எதிராக போராடக் கூடிய தகுதி எங்களுக்கே உள்ளது.

தி.மு.க. வரவேண்டாம் என்று அ.தி.மு.க.விற்கு வாக்களித்தார்கள். அ.தி.மு.க. வரக்கூடாது என்று தி.மு.க.விற்கு வாக்களித்தார்கள். இந்த 2 திராவிட கட்சிகளை தவிர்த்து யார் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாது என்று மக்கள் எண்ணுகின்றனர். இதில் இருந்து யார் விடுவிக்க முடியும் என்று மக்கள் ஏங்குகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. ஆகிய நான்கு கட்சிகள் இணைந்துள்ள மக்கள் நல கூட்டியக்கம்,  மக்கள் நல கூட்டணியாக, திருவாரூரில் திங்கள்கிழமை நடக்கக் கூடிய கூட்டத்தில் அறிவிக்கப்போகிறோம். 35 சதவீத ஓட்டுகள்தான் அரசியல் கட்சிகள் சார்ந்த ஓட்டு, மீதமுள்ள 65 சதவீத வாக்குகளை பெற பாடுபடுவோம்.  ஊழலற்ற, வாரிசு அரசியல் இல்லாத, ஜாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்ட ஆட்சியை கொடுக்க நாங்கள் சபதம் எடுத்துள்ளோம். 2 திராவிட கட்சிகள் செய்த ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்வோம்." என்றார்

முன்னதாக காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா இல்லத்தில் மக்கள் சந்திப்பு மறுமலர்ச்சி பயணம் என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய வைகோ அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்தார்.
ஆட்சியாளர்களின் ஊழல் சொத்துகளைப் பறிமுதல் செய்வோம்: வைகோ! ஆட்சியாளர்களின் ஊழல் சொத்துகளைப் பறிமுதல் செய்வோம்: வைகோ! Reviewed by நமதூர் செய்திகள் on 21:26:00 Rating: 5

No comments:

Powered by Blogger.