மாட்டிறைச்சி அரசியல் நடத்தும் மதவெறிக் கும்பல் கொட்டத்தை அடக்க வேண்டும்!: வைகோ.

சென்னை: மதத்தின் பெயரால் மக்களைப் பிளவு படுத்தி, இரத்தக் களரியில் ஈடுபட்டு வரும் இந்துத்துவா சக்திகள் தற்போது மாட்டிறைச்சி அரசியல் நடத்தி மத மோதல்களைத் தூண்டி வருகின்றனர் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு கடந்த ஓர் ஆண்டில், இந்துத்துவா மதவெறிக் கூட்டத்தின் வன்முறைகள் அதிகரித்து விட்டன. இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத் தன்மையை சீர்குலைக்கும் வகையில் இந்து மத வெறிக் கும்பல் செயல்பட்டு வருவதும், அதற்கு நரேந்திர மோடி அரசு துணை போவதும் வன்மையான கண்டனத்துக்குரியது. 

மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, இரத்தக் களரியில் ஈடுபட்டு வரும் இந்துத்துவா சக்திகள் தற்போது மாட்டிறைச்சி அரசியல் நடத்தி மத மோதல்களைத் தூண்டி வருகின்றனர். மோடி அரசு பதவி ஏற்றப்பின்னர், இந்தியாவில் பசு வதையை தடை செய்ய தேசிய அளவில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மக்களின் உணவுப் பழக்கத்தில் தலையிட்டு, மதத்தின் பெயரால் திட்டமிட்டு வன்முறைக்கு தூயபமிட்டுள்ளனர் இந்துத்துவா சக்திகள். 

இந்நிலையில்தான், கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம், கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா என்ற கிராமத்தில் முகமது இக்லாக் என்பவர் பசு மாட்டிறைச்சி சமைத்து குடும்பத்துடன் உண்டதாக பரவிய வதந்தியால், 200 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் வீடு புகுந்து தாக்கி, ஏற்கனவே டைபாய்டு காய்ச்சலில் படுத்தப் படுiக்கையாக இருந்த முகமது இக்லாக்கை கொடூரமாக அடித்துக் கொலை செய்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லான்கேட் தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ., சேக் அப்துல் ராஷீத் என்பவர், சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் அளித்த விருந்தில், மாட்டிறைச்சி உணவு பரிமாறப்பட்டது என்பதால், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தில் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் சேக் அப்துல் ராஷீத்தை சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கி உள்ளனர். 

இந்துத்துவா மதவெறிக் கூட்டத்தின் கோர தாண்டவத்தால், நாட்டின் மதச் சார்பின்மை தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறது. இந்துத்துவா மதவெறிக் கருத்துகளை எதிர்க்கின்ற எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் படுகொலை செய்யப்படும் நிலைமை தொடர்ந்து நடைபெறுகின்றன. மராட்டிய மாநிலம் புனே நகரில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய நரேந்திர தபோல்கர் எனும் சீர்திருத்தவாதி இரு ஆண்டுகளுக்கு முன்பு மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 

இந்த ஆண்டு பிப்ரவரி 20 இல் மராட்டிய மாநிலத்தின் கோலாபூரில் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகப் போராடிய முற்போக்கு எழுத்தாளர் கோவிந்த் பன்சாரே சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்துத்துவா கருத்துகளை விமர்சனம் செய்து வந்த கன்னட மொழி அறிஞர் பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி ஆகஸ்டு 30ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். கன்னட முற்போக்கு எழுத்தாளரும், பேராசிரியருமான கே.எம்.பகவான் கொல்லப்படுவார் என்று மதவெறியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்துத்துவா கும்பலின் கொலை வெறிக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய மோடி அரசு, இந்தியப் பண்பாட்டு பன்முகத்தன்மையை பாதுகாக்கவில்லை என்று பிரபல எழுத்தாளரும், ஜவஹர்லால் நேருவின் உறவினருமான நயன்தாரா சேகல் கண்டனம் தெரிவித்து, 1986ம் ஆண்டு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருதை திருப்பி அளித்துவிட்டார். 

மேலும் பேராசிரியர் கல்புர்கி கொலையைக் கண்டித்து இந்தி எழுத்தாளர் உதய் பிரகாஷ் தமது சாகித்ய அகாதமி விருதை திருப்பி அளித்திருக்கிறார். இவர்களைத் தொடர்ந்து எழுத்தாளர்களும், அறிவு ஜீவிகளும் மதவெறியர்களால் கொல்லப்படுவதைக் கண்டித்து கவிஞரும், லலித் கலா அகாதமியின் முன்னாள் தலைவருமான அசோக் வாஜ்பேயி தமது சாகித்ய அகாதமி விருதை திருப்பிக் கொடுத்துவிட்டார். 

இவையெல்லாம் இந்தியாவில் மதவெறியாளர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்தி இருக்கும் சம்பவங்களாகும். இந்துத்துவா மதவெறிக் கும்பல்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஜனநாயக முற்போக்கு சக்திகள் ஒருசேர கைகோர்த்து எழ வேண்டும். இந்துத்துவா மதவெறி சக்திகளுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், அதற்குத் துணைபோகும் மோடி அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மாட்டிறைச்சி அரசியல் நடத்தும் மதவெறிக் கும்பல் கொட்டத்தை அடக்க வேண்டும்!: வைகோ. மாட்டிறைச்சி அரசியல் நடத்தும் மதவெறிக் கும்பல் கொட்டத்தை அடக்க வேண்டும்!: வைகோ. Reviewed by நமதூர் செய்திகள் on 23:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.