அச்சே தின் ஔரங்கஸீப் ஆலம்கீரி..! – அப்பாஸ்
இந்தியா மாறிக் கொண்டிருகிறது. நாம் மாறவேண்டும், இன்னும் 2002 குஜராத்தில் நடந்த விபத்தை மட்டுமே வைத்து 2015 மோடியின் இந்தியாவை மதிப்பிடுவது தவறு என்றும், அவ்வாறு மதிப்பிட்டால், தேசத்தின் மீதான உங்கள் மதிப்பு சந்தேகத்திற்கு உரியது என்றும் பரிவாரங்கள் புளுகத் தொடங்கிவிட்டன. இதன் விளைவாய் உங்கள் மீதான மதிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தேசத்தை தள்ளுகிறீர்கள் என்று மாற்றத்திற்கான வரையறையையும் தேசியத்திற்கு புதிய இலக்கணத்தையும் வகுத்து அக்ரஹாரத்து அம்பிகளும், அதனை வழிமொழியும் மோடியின் தம்பிகளும் பிரமிப்பூட்டுகிறார்கள்.
மறுபுறம் இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களை குழிதோண்டி புதைக்கும் துவேஷ கருத்துகள், பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, ஊழல், வெளிப்படையற்ற அரசு நிர்வாகம், பங்குச் சந்தை வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, கடமை தவறும் நீதித்துறை, உளவுத் துறையின் உளறல்களை ஊர்பரப்பும் ஊடகங்கள் என அனைத்து துறைகளிலும் கடும் வீழ்ச்சியை சந்தித்து கொண்டிருக்கிறது இந்தியா.
இந்திய பிரதமரோ சர்வதேச சுற்றுப் பயணம், செல்ஃபி, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, கிளீன் இந்தியா போன்ற எல்லா இந்தியாக்களையும் விமானத்தில் பறந்தபடி “அட்சேதினின் அறிகுறிகள்” என்று துணைக் கண்டத்தின் துன்பம் நிறைந்த நாட்களை “அச்சே தின்” என அறைகூவல் விட்டுக் கொண்டிருக்கிறார். இந்திய வரலாற்றின் அச்சே தினை நோக்கிய பயணமே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
அப்துல் கலாம் தேசம் முழுக்க விதைத்த வல்லரசு கனவின் விதை ஔரங்கஸீப் என்ற அரசம்பூவின் மகரந்தங்களில் இருந்தே உருவானது. ஔரங்கஸீப் சாலை அப்துல் கலாம் சாலையாக பெயர் மாற்றப்படும் சூழலில்தான் இந்தியாவின் அச்சே தின்???? குறித்து பேச வேண்டியிருக்கிறது.
உலகை ஆட்சி செய்த சக்தி வாய்ந்த மன்னர்களில் ஒருவரான ஔரங்கஸீப் அவர்களின் காலமே இந்தியாவின் அச்சே தின் (நல்ல காலம்) என்றால் நம்மால் நம்ப முடியுமா? இந்திய நிலப்பரப்பை ஆட்சி செய்த ஒரு மன்னனை, உலக நிலப்பரப்பின் பெரும் பகுதியை ஆட்சி செய்த மன்னர்களின் வரிசையில் தரப்படுத்துவது மிகைப்படுத்தப்பட்ட விடயமாக கருதலாம். இது மிகைப்படுத்தப்பட்டவை அல்ல. நாடு என்பது மரம், செடி, மலை மட்டும் அல்ல, அங்கு வாழும் மக்களும்தான்.
அதனடிப்படையில் ஔரங்கஸீப் காலத்தில் உலக மக்கள்தொகையில் இந்தியாவின் பங்கு 29 சதவிகிதமாய் இருந்தது. மிகப் பெரிய ஜனக் கூட்டத்தை ஆட்சி செய்ததாலேயே ஔரங்கஸீப் அவர்களை உலகை ஆட்சி செய்த மன்னர்கள் வரிசையில் தரப்படுத்த வேண்டி இருக்கிறது.
இந்தியாவில் பாபர் அவர்களால் கிபி 1500ல் வேரூன்றிய முகலாய பேரரசின் நீட்சியாய் பாபருக்கு பின் சுமார் 150 ஆண்டுகள் கழித்து தன் தந்தை ஷாஜஹானுக்குப் பின் கி.பி. 1658ல் ஆட்சி பொறுப்பேறினார் ஔரங்கஸீப். சிறு வயது முதலே தலைசிறந்த ஆசிரியர்கள் மூலம் உலக கல்வியும், இஸ்லாமிய மார்க்க கல்வியும் அவருக்கு போதிக்கப்பட்டன. 1658 முதல் 1707 வரை 49 ஆண்டுகள் முழு இந்தியாவையும் ஆட்சி செய்த பேரரசாக இருந்தபோதும் அவரின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த ஒரு சமானிய பிரஜையின் வாழ்கைமுறையையே தன் வாழ்கை முறையாக தேர்ந்தெடுத்துக் கொண்டவர்.
அரசின் கருவூலம் தனது காலுக்கடியில் கிடந்தபோதும் தனது அன்றாட செலவிற்கு தனது கைப்பட குர்ஆன் பிரதிகளை எழுதி, அதை விற்று அதன் மூலம் கிட்டிய சொற்ப வருமானத்தில், சொற்ப உணவுகளையும் சொற்ப வாழ்வியலையும் தீர்மானித்துக் கொண்டதாலேயே, அற்ப அரசராக இல்லாமல் இன்றைய இந்திய ஆட்சியாளர்களுக்கெல்லாம் முன்மாதரியாக திகழும், சொற்ப அரசர்களில் ஒருவராக திகழ்கிறார்.
எளிமையான வாழ்வுடன் மிக வலிமையான சிந்தனைகளையும் தன்னகத்தே கொண்டிருந்த ஔரங்கஸீப் அவர்கள் தனது சிந்தனைகளை கூர் தீட்டிடும் புத்தகங்களை அதிகம் நேசிப்பவராகவும், திறம்பட தமது கருத்துகளை கவிதைகளாக புனையும் அளவிற்கு இலக்கிய நிபுணத்துவம் கொண்டவராகவும், தான் பின்பற்றும் இஸ்லாமிய மார்க்கத்தில் ஆழ்ந்த அறிவும் பெற்றிருந்தார். இதன் வெளிப்பாடாக அவர் எழுதிய பிரசித்தி பெற்ற “ஃபத்வா அல் ஹிந்தியத்” என்ற நூல் காட்சி தருகிறது.
1600களில் முகலாயப் பேரரசர் அக்பரின் ஆட்சிக் காலத்தில் இங்கிலாந்து நாட்டின் மொத்தச் செல்வத்தைவிட இந்தியாவின் ஆண்டு வருமானம் அதிகமாக இருந்துள்ளது. ஆனாலும் இந்தக் காலகட்டத்தில் சீனாவுக்கு அடுத்த இடத்தில்தான் இந்தியா இருந்துள்ளது. மூன்றாவது இடத்தில் ஐரோப்பா இருந்துள்ளது.
கி.பி. 1700-ல் முகலாயப் பேரரசர் ஔரங்கஸீபின் ஆட்சிக் காலம். அவர் தெற்காசியாவின் பெரும் பகுதியை இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். அதனால், அவரது ஆட்சிக் காலத்தில் மீண்டும் இந்தியா உலகின் முதல் பொருளாதார வல்லரசாக மாறியது (24.4 சதவீதம்). ஔரங்கஸீபின் ஆட்சிக் காலத்துக்குப் பிறகு 1750-ல் சீனா மீண்டும் இந்தியாவை முந்தியது. அடுத்தடுத்த இடங்களில் இந்தியாவும், பிரான்சும் இருந்தன.
(ஆதாரம்: “உலகப் பொருளாதாரம் – ஒரு ஆயிரமாண்டு தொலைநோக்கு”, “வரலாற்று ரீதியான புள்ளிவிவரங்கள்” – The World Economy. A Millennial Perspective (Vol. 1). Historical Statistics (Vol. 2))
இவ்வளவு நேர்த்தியான நிர்வாகத் திறன் கொண்டிருந்த போதும், இந்தியாவை ஆட்சி செய்த மன்னர்களில் ஔரங்கஸீப் மட்டுமே இந்திய மற்றும் மேற்குலக வரலாற்று ஆசிரியர்களால் அதிகமாக தூற்றப்பட்டு கொண்டிருக்கிறார் என்பது வரலாற்று வேதனை. அதே நேரத்தில் சமகாலத்தில் நாகேந்திரநாத் பானர்ஜி போன்ற சில இந்துமத வரலாற்று ஆசிரியர்களே ஔரங்கஸீப் குறித்து உண்மை தகவல்களை வெளிக்கொணர்ந்து கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்தியாவை ஆட்சி செய்த இஸ்லாமிய மன்னர்கள் குறித்த அவதூறுகளில் முதன்மை வாய்ந்ததாக கூறப்படும் அவதூறு ‘இஸ்லாமிய மன்னர்கள் இந்தியாவில் இருந்த இந்துக்களை பலவந்தமாக இஸ்லாமிய மதத்திற்கு மதம் மாற்றினார்கள்’ என்பதுதான். இவை உள்நோக்கம் கொண்டதும், சமூக அறிவியல் குறித்த அறிவற்ற வாதமுமாகும்.
காரணம், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவை இஸ்லாமியர்கள் ஆட்சி செய்திருந்த போதும் இந்துக்களின் மக்கள்தொகை முஸ்லிம்களின் மக்கள்தொகையை விட நான்கு மடங்கு அதிகமாகவே இன்றுவரை உள்ளது என்பதே கூட பலவந்த மதமாற்றம் குறித்த அவதூறுகளுக்கு தகுந்த பதிலாகவும் இருக்கிறது.
மேலும் ஔரங்கஸீப் குறித்த குற்றச்சாட்டுகளை வரலாற்று வெளிச்சத்தில் தாம் உற்றுநோக்கும் போது தமக்கு அது வியப்பு அளிப்பதாகவும், உண்மை வரலாற்றில் ஔரங்கஸீப் இந்துமத எதிர்ப்பாளராய் இருந்திருந்தால் தனது தளபதியாக இந்து மதத்தை சேர்ந்த ராஜா ஜெய்சிங்க் போன்றவர்களை எவ்வாறு நியமித்திருப்பார் என்றும் கேள்வி எழுவதாக சொல்கிறார் வரலாற்று ஆய்வாளர் ஷர்மா.
ஔரங்கஸீப் அவர்களை மதவாத சிந்தனை உடையவர் என்று அடையாளப்படுத்துவதை வரலாற்றில் கொட்டிக் கிடக்கும் நிகழ்வுகள் மறுப்பதோடு இல்லாமல் அவர் மதச்சார்பற்றவர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது என்கிறார் அவர்.
வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஸீப் தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த மதப்பற்று உடையவராக இருந்த போதும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நிலப்பரப்பை ஆட்சி செய்கிறோம் என்பதை உணர்ந்து அரசு நிர்வாகத்தை மதச்சார்பற்ற விழுமியங்களின் ஊடாகவே முன்னெடுத்தார். அதனாலேயே அவரின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் கொள்கை வகுப்பாளர்களாக இந்துக்களே இருந்தனர்.
ஔரங்கஸீப் ஆட்சி பீடத்தில் ஜஸ்வத் சிங், ராஜாராஜுறுப், கபிர் சிங், அரங்கநாத் சிங், பிரேம்தேவ் சிங், திலிப்ராய், ரக்ஷிலால் கிரோரி போன்றவர்கள் மிக உயரிய அரச பதவிகளை வகித்தார்கள். மேலும் ஜஸ்வத் சிங், ஜெயசிங், இந்திரசிங், அச்சலாஜி, அர்ஜுஜி போன்ற இராணுவ தளபதிகள் ஒவ்வொருவரும் தனக்கு கீழ் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களுக்கு கட்டளை பிறப்பிக்கும் அதிகாரத்தை பெற்றிருந்தனர்.
ஔரங்கஸீப் இந்துமத எதிர்ப்பாளராய் இருந்திருந்தால், ஏன் இவ்வளவு இந்துமதத்தை சார்ந்த தளபதிகளை நியமிக்க வேண்டும்? ஒருவேளை இவர்களால் தனது சிம்மாசனம் கவிழ்க்கபடும் என்ற முன்னெச்சரிக்கை கூட இல்லாமலா இவ்வாறு நியமித்தார்? உண்மையில் ஔரங்கஸீப் மதச்சார்பற்ற விழுமியங்களோடு ஆட்சி புரிந்தார் என்பதே பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களின் கூற்று.
வரலாற்று ஆய்வாளர் ஷர்மா ஔரங்கஸீப் ஆட்சியின் நிலை குறித்து கூடுதலாக புள்ளிவிவரங்களை முன் வைக்கிறார். இன்றைய இந்து மதவாதிகள் அக்பரை புகழ்வதும் ஔரங்கஸீபை இகழ்வதும் வியப்பானது. அக்பர் தனது அரசில் சுமார் 14 இந்து மத உயர் அதிகாரிகளை வைத்திருந்தார் என்றால் ஔரங்கஸீப் அவர்களோ 148 இந்துமத உயர் அதிகாரிகளை தனது அரசில் வைத்திருந்தார் என்கிறார் ஷர்மா.
முன்னாள் ஓடிசா ஆளுநர், காந்தியவாதி, வரலாற்று ஆய்வாளர், சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் என பன்மைத்தன்மை கொண்ட சமூக செயல்பாட்டாளரான டாக்டர் பிசாம்ப் பஹார் நாத் பாண்டே அவர்களோ ஔரங்கஸீப் வரலாறு குறித்த ஆய்வுகள் மதச்சார்பற்ற ஆட்சிக்கு மிகச் சிறந்த உதாரணம், ஆனால் நமக்கு கற்பிக்கப்படும் வரலாறு இந்தியாவை பிரித்தாளத் துடித்த ஆங்கிலேயர்களாலும் அவர்கள் வழிவந்த இந்துத்துவவாதிகளாலும் சுயநலன் கருதி திரித்து எழுதப்பட்டுள்ளது என்று கவலை தெரிவிக்கிறார்.
1948 முதல் 1953 வரை அலகாபாத் நகராட்சியின் தலைவராக தான் இருந்த காலத்தில் கோயில் நிலங்கள் குறித்தான ஒரு சச்சரவு தன் கவனத்திற்கு வந்ததாகவும், இரு கோயில்களின் குருக்களுடன் தான் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒரு சாரார் தன்னிடம் கோவில் குறித்து ஒரு ஆவணத்தைக் காட்டினார்கள், அந்த ஆவணம் ஔரங்கஸீப் அவர்களால் கோவிலுக்கு நிலம் ஒதுக்கப்பட்டு, அந்தக் கோவிலின் பராமரிப்பிற்குரிய மானியம் வழங்கப்பட்டதை பறைசாற்றக் கூடிய ஆவணம் என்பதை நான் உணர்ந்த போது, இஸ்லாமிய அடிப்படைவாதி என்றும், இந்துமத எதிர்ப்பாளர் என்றும் நான் ஔரங்கஸீப் குறித்து புரிந்து வைத்திருந்தது தவறு என தெரிந்துகொண்டேன்.
வழக்கறிஞராகவும் அரபி மற்றும் பாரசீக மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவராகவும் திகழும் என் பிராமண நண்பரான சர் தேஜ் பகதூர் சப்று அவர்களிடம் அந்த ஆவணத்தைக் காட்டி வினவியபோது, அவர் சந்தேகத்திற்கு இடமின்றி இது ஔரங்கஸீப் அவர்களால் பிறப்பிக்கப்பட்ட ஆணைதான் என ஊர்ஜிதப்படுத்தினார்.
ஔரங்கஸீப் குறித்து எனக்கு ஏற்பட்ட புதிய அனுபவத்தின் வெளிப்பாடாய் பல கோவில்களின் தலைமை குருக்களுக்கு ஔரங்கஸீப்பிடம் இருந்து ஏதேனும் உத்தரவுகளோ அரசாணைகளோ உங்கள் கோவில்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்தால் எனக்கு அதன் நகலினை அனுப்பிவைக்குமாறு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டேன். எனது கடிதத்திற்கு பதிலாய் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தும் வகையில் வட இந்தியாவின் முக்கிய இந்து, ஜைன கோவில்களிலிருந்தும், சீக்கிய குருத்துவாராகளிலிருந்தும், ஔரங்கஸீப்பிடம் இருந்து தாம் நிர்வகிக்கும் கோவில்களுக்கு பெற்ற நிதியுதவி, அரசு ஒதுக்கிய நிலங்கள், இவை சரியாக கிடைக்கிறதா என்ற தொடர் விசாரணைகளையும் தாங்கிய ஆவணங்களின் நகல்கள் எனக்கு கிட்டியது, எனக்கு கிட்டிய ஆவணங்களின் உதவியோடு நான் செய்த நீண்ட ஆய்வின் அடிப்படையில் ஔரங்கஸீப் மத அடிப்படைவாதியல்ல, அவர் மிகச் சிறந்த மதச்சார்பற்ற ஒரு அரசை தலைமை தாங்கிய இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றகூடியவர் என்பதை தெரிந்து கொண்டேன். அவர் பின்பற்றிய மதமே அவருக்கு நீதியான ஒரு அரசை வழிநடத்த உத்வேகம் அளித்தது. அந்த உத்வேகத்தின் வெளிப்பாடோ தனது அரசுக்குட்பட்ட இந்துமதத்தினரின் நல்வாழ்வில் அதீத அக்கறையையும், ஒரு முஸ்லிம் இந்துமதத்தினருக்கு அநீதி இழைத்து விட்டால் அந்த முஸ்லிமுக்கு தனது நீதித்துறையின் மூலம் தண்டனை வழங்கப்பட்டு நீதியும், சமத்துவமும் பெருக்கெடுத்து ஓடிய உன்னதம் மிகுந்த ஒரு அரசின் தலைவன் ஔரங்கஸீப் என்பதை புரிந்து கொண்டேன்.
அடுத்ததாக ஔரங்கஸீப் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது ஔரங்கஸீப் வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கினார் என்பதாகும். ஆம். அது உண்மையே! அந்த உண்மைக்குப் பின்னால் மறைந்து இருக்கும் உண்மை என்னவெனில், பேரரசர் ஔரங்கஸீப் தனது படை, பரிவாரங்கள், சிற்றரசர்கள் ஆகியோருடன் வங்காளம் நோக்கி வாரணாசி வழியாக சென்று கொண்டிருந்தார்.
வாரணாசியை நெருங்கியவுடன் பேரரசர் ஔரங்கஸீப் அவர்களுடன் வந்த இந்து மன்னர்கள் தாங்கள் கங்கையில் முழ்கி தமது கடவுளான விஸ்வநாதருக்கு தமது வணக்கதை செலுத்த விரும்புவதாகவும், ஆதலால் தாங்கள் ஒருநாள் இங்கு தங்க எமக்கு உதவி புரிய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்க அந்த வேண்டுகோளை ஏற்று, ஔரங்கஸீப் அவர்களின் இராணுவம் வாரணாசிக்கு ஐந்து மைல் தூரத்தில் முகாம் அடித்து அங்கே தங்கினார்கள். அனைத்து மன்னர்களும், பரிவாரங்களும் கங்கைக்கு சென்று நீராடி விஸ்வநாதர் கோவிலில் பூஜை புனஸ்காரங்கள் முடித்து முகாமிற்கு திரும்ப (இன்றைய) கட்ச் வளைகுடாவின் மகாராணி மட்டும் திரும்பவில்லை.
பதற்றம் மேலோங்க எங்கு தேடியும் எந்த தகவலும் இல்லை. இந்தச் செய்தி ஔரங்கஸீப் அவர்களுக்கு தெரியவர கவலை கொண்ட பேரரசர் தனது மூத்த உளவு அதிகாரிகளை அனுப்பி தேடுதலில் ஈடுபட கட்டளை பிறப்பிக்கிறார். கங்கை கரை, விஸ்வநாதர் ஆலயம் என ராணி பயணித்த இடங்களில் தேடுதல் நடத்த தன்னிச்சையாக விஸ்வநாதர் ஆலயத்தில் நகரும் தன்மையுடைய யானை முகம் தரித்த பிள்ளையாரின் தலை மட்டும் உடைய ஒரு சிற்பம் பொருத்தப்பட்டிருப்பதை காண்கிறார்கள். அதிகாரிகள் அந்த சிற்பத்தை நகர்த்திய பின் சிற்பத்தின் கீழிருந்து கருவறையான விஸ்வநாதர் பீடத்திற்கு செல்லும் இரகசிய அறைக்கான படிக்கட்டுகள் தென்படுகிறது. அந்த படிக்கட்டுகள் வழியே சென்று பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஆம்! கட்ச் வளைகுடாவின் மகாராணி அழுகை மேலோங்க, ஆபரணங்கள் இழந்து, பெண்மையின் கண்ணியம் சிதைக்கப்பட்டு காட்சி தந்து கொண்டிருந்தார். இவையெல்லாம் கருவறையில் வீற்றிருந்த விஸ்வநாதர் சிலைக்கு நேர் கீழ் பாதாள அறையில் அரங்கேறி இருந்தது. கட்ச் வளைகுடாவின் மகாராஜா பேரரசரிடம் நீதி கேட்டு முறையிட, ஔரங்கஸீப் அவர்கள் இந்தச் சம்பவத்தின் மூலம் விஸ்வநாதரின் புனிதம் களங்கப்பட்டுவிட்டது என்றும், விஸ்வநாதர் சிலையினை வேறு ஒரு இடத்தில் நிறுவச் சொல்லியும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் அசம்பாவிதம் நடந்தேறிய விஸ்வநாதர் ஆலயத்தை தரைமட்டமாக்க சொல்லி கட்டளை பிறப்பித்ததோடு, அந்த ஆலயத்தின் தலைமை குரு கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார் என்பது பதிவு செய்யப்பட்ட வரலாறு.
(பி.என். பாண்டே – “இஸ்லாமும் இந்திய கலாச்சாரமும்” குதா பக்ஷ் ஓரியன்டல் பொது நூலக உறை 1987)
ஔரங்கஸீப் குறித்த குற்றச்சாட்டுகளில் அதிமுக்கியமானது, அவர் ஜிஸ்யா என்ற வரியின் மூலம் இந்துக்களை கொடுமைப்படுத்தினார் என்பதுதான். முஸ்லிம்கள் தமது வருமானத்தில் இரண்டரை சதவிகிதம் ஏழைகளுக்கு வழங்க இஸ்லாமிய மார்க்கமே கட்டாயக் கடமை விதித்து உள்ளது. அதே போல் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றாத ஏனைய குடிமக்களில் இராணுவத்தில் பணியாற்றாத ஆண்களுக்கும், இளைஞர்களுக்கும் அவர்களின் உடைமைகளை அரசு பாதுகாப்பு கொடுக்க உறுதி அளிக்கும் விதத்தில் இந்த ஜிஸ்யா வரி விதிக்கப்பட்டது.
பெண்கள், குழந்தைகள் போன்றவர்களுக்கு ஜிஸ்யா வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.
அதே நேரத்தில் தன் குடிமக்களின் நல்வாழ்விற்கு உறுதியளிக்கும் விதத்தில் ஏனைய மது, விபச்சாரம், கேளிக்கைகள், தேவதாசிமுறை போன்ற அனைத்தையும் இரும்புக் கரம் கொண்டு ஒழித்துக் கட்டினார். அரசின் வருமான இழப்பை பற்றி அவர் கவலை கொள்ளவில்லை. அதே நேரத்தில் இன்று நாம் அறுபதுக்கும் மேற்பட்ட வரிகளை (TAX) அரசுக்கு செலுத்திக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு வருமானத்தை ஈட்டியபோதும் இன்றைய அரசு மக்களின் நல்வாழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அனைத்து சீர்கேடுகளையும் திறந்துவிட்டுள்ளது.
நீதியில் சமரசமின்மை, மக்களின் நல்வாழ்விற்கு குந்தகம் விளைவிக்கும் விடயங்களை அடியோடு ஒழித்தது, தனிப்பட்ட முறையில் உண்மையான முஸ்லிமாக இருந்தாலும் அரசு நிர்வாகத்தில் மதச்சார்பற்ற விழுமியங்களை உயர்த்திப் பிடித்தது, அரசு அதிகாரத்தை அனைவருக்கும் பரவலாக்கியது, பேரரசராக இருந்தபோதும் மிக எளிமையான வாழ்வை தேர்தெடுத்தது போன்ற உயரிய விழுமியங்களாலேயே சர்வதேச தரத்தில் முதல் இடத்தில் வகிக்கக் கூடிய அளவிற்கு இந்தியாவை ஒரு பொருளாதார வல்லரசாக அவரால் உருவாக்க முடிந்தது.
ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் ஔரங்கஸீப் சாலையை அப்துல் காலம் சாலையாக பெயர் மாற்றுவதன் மூலம் ஔரங்கஸீபை சிறுமைப்படுத்துவதாக எண்ணி தம்மைத் தாமே சிறுமைப்படுத்திக் கொள்கின்றனர். மேலும் அவரின் வரலாற்றை திரித்து மக்கள் மனங்களில் இருந்து அவரை அப்புறப்படுத்த முனையும் வரலாற்று திரிபுகள் இந்து ஃபாசிச குணாதிசயங்களில் அடிப்படையான ஒன்றாக மாறிவிட்டது என்றபோது, இந்திய துணைக் கண்டத்தின் அச்சே தின், ஔரங்கஸீப் அவர்களின் ஆட்சியைப் போன்ற ஆட்சியை மீள் உருவாக்கம் செய்வதால் மட்டுமே சாத்தியம் என்பதை வரலாற்றில் சற்று அழுத்தமாகவே சொல்ல வேண்டியிருக்கிறது.
அப்பாஸ்
- See more at: http://www.thoothuonline.com/archives/74634#sthash.VpD5rj1A.dpuf
அச்சே தின் ஔரங்கஸீப் ஆலம்கீரி..! – அப்பாஸ்
Reviewed by நமதூர் செய்திகள்
on
23:19:00
Rating:
No comments: