மாலேகான் வழக்கில் அரசு வழக்கறிஞர் நீக்கத்துக்கு எதிர்ப்பு- மத்திய அரசு, என்.ஐ.ஏ.வுக்கு நோட்டீஸ்!


டெல்லி: இந்துத்துவா தீவிரவாதிகள் நிகழ்த்திய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வழக்கறிஞர் ரோஹினி சாலியன் நீக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோடீஸ் அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் 2008-ல் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாயினர். இந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்ததாக சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட இந்துத்துவா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 
இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் என்.ஐ.ஏ. சார்பாக ரோஹினி சாலியன் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வந்தார். இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர், மத்தியில் பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்றதும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மென்மையான போக்கை கடைப்பிடிக்குமாறு என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் தமக்கு உத்தரவிட்டதாக அரசு வழக்கறிஞர் ரோஹினி சாலியன் குற்றம்சாட்டினார். 

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்குகளில் ஆஜரான ரோஹினி சாலியனை என்.ஐ.ஏ. நீக்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை நேர்மையாக நடத்த வேண்டும்; இதில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் எனக் கோரி ஹர்ஸ் மந்தர் என்பவர் பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இம்மனு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்காக தாம் வாதாடி இருப்பதால் இம் மனுவை விசாரிக்கும் பெஞ்சில் தாம் இடம்பெறவில்லை என நீதிபதி யு.யு. லலித் கூறினார். 

இதனைத் தொடர்ந்து புதிய பெஞ்சை தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து நியமித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று இப்பொதுநல மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மாலேகான் வழக்கில் அரசு வழக்கறிஞர் நீக்கத்துக்கு எதிர்ப்பு- மத்திய அரசு, என்.ஐ.ஏ.வுக்கு நோட்டீஸ்! மாலேகான் வழக்கில் அரசு வழக்கறிஞர் நீக்கத்துக்கு எதிர்ப்பு- மத்திய அரசு, என்.ஐ.ஏ.வுக்கு நோட்டீஸ்! Reviewed by நமதூர் செய்திகள் on 03:18:00 Rating: 5

No comments:

Powered by Blogger.