ஆர்.எஸ்.எஸ் - பூர்வாசிரமம் அல்லது ஆபத்தின் அறிகுறி - சீத்தாராம் யெச்சூரி

மீபத்தில் தில்லியில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் மூன்று நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பிரதமரும் அவரது அமைச்சரவை சகாக்களும் கலந்து கொண்டதும்,
அவர்களின் பணிகள் குறித்து ஆர்எஸ்எஸ் இயக்கம் ஆய்வு செய்ததும், பாஜகவானது ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஓர் அரசியல் அங்கம்தானே தவிர, வேறெதுவும் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தி இருக்கிறது.

மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியக்குடியரசை தங்களுடைய குறிக்கோளான ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ ஆக மாற்ற வேண்டும் என்கிற ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்கு, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ள அமைச்சர்கள் எப்படி முன்வந்தார்கள் என்று நியாயமாகவே கேள்விகள் எழுந்துள்ளன.  ஆர்எஸ்எஸ் மாநாடு நடைபெற்ற அதே சமயத்தில் வேறு பல இடங்களில் நடைபெற்ற தொழில் முனைவோர் சங்கங்களின் கூட்டங்களில் பங்கேற்ற அமைச்சர்கள் இவ்வாறான விமர்சனங்களைப் புறக்கணித்திருக்கிறார்கள்.
முந்தைய ஐமுகூ அரசாங்கத்தை ஒரு‘ரிமோட் கண்ட்ரோல்’ மூலம் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அடிக்கடி பிரதமர் நரேந்திரமோடி குறை கூறிக் கொண்டிருப்பார். அதுபோல் அல்லாமல் இப்போதைய பாஜக தலைமையிலான அரசாங்கத்தை ஆர்எஸ்எஸ் இயக்கம் நேரடியாகவே தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ், வரலாற்றைப் பார்ப்போம்.

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் பட்டேல்,  காந்தி சுட்டுக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் இயக்கத்தைத் தடை செய்தார்.  1948 பிப்ரவரி 4 அன்று வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் அறிக்கையில் அவர் கூறியிருந்ததாவது: “சங் பரிவாரத்தின் ஆட்சேபணைக்குரிய மற்றும் தீங்கு பயத்திடும் நடவடிக்கைகள் எவ்விதத் தடைகளும் இன்றி தொடர்ந்திருக்கின்றன. சங் பரிவாரத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட வன்முறைக் கலாச்சாரம் பல அப்பாவி உயிர்களைப் பலிவாங்கி இருக்கிறது.

ஆர்எஸ்எஸ் இயக்கம் தங்கள் மீது விதித்துள்ள தடையை விலக்கிக் கொள்வதற்காக பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டும் என்று அரசாங்கத்தைக் கோரி வந்தது. 1948 நவம்பர் 14 அன்று பட்டேலின் உள்துறை அமைச்சகம் ஆர்எஸ்எஸ் தலைவர் எம்எஸ் கோல்வால்கருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து, ஒரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அப்போது கோல்வால்கர் அளித்த பல வஞ்சகமான வாக்குறுதிகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

“ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கூறுவதற்கும், அவர்களைப் பின்பற்றுவோர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கும் எவ்விதச் சம்பந்தமும் கிடையாது,’’ என்று குறிப்பிட்டு, பட்டேல் தடையை விலக்கிட மறுத்துவிட்டார். ஆர்எஸ்எஸ் இயக்கம் ஒரு ‘கலாச்சார ஸ்தாபனமாக’ மட்டுமே இருந்திடும் என்றும், ‘ரகசிய நடவடிக்கைகளைக் கைவிடும்’ என்றும், ‘வன்முறையைத் துறந்திடும்’ என்றும் அரசாங்கம் விதித்த அனைத்து நிபந்தனைகளையும் மிகவும் வளைந்து கொடுத்து, ஏற்றுக் கொண்ட பிறகுதான், 1949 ஜூலை 11 அன்று ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

அன்றைய தினம் அது அளித்திட்ட அத்தனை ‘நிபந்தனைகளையும்’ இன்றைய தினம் அது அப்பட்டமாக மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆர்எஸ்எஸ் இயக்கம் அரசியல் அரங்கில் செயல்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையைப் புறந்தள்ளுவதற்காக, தனக்கென்று ஓர் அரசியல் கட்சியை மேற் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கியது.

நேருவின் அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்திட்ட ஷியாமா பிரசாத் முகர்ஜியின் உதவியுடன் பாரதிய ஜனசங் கத்தை ஆரம்பித்திட தன் ஊழியர்களை அனுப்பி வைத்தது.  அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டவர்களில் தீன தயாள் உபாத்யாயா, அடல் பிகாரி வாஜ்பாயி, எல்கே அத்வானி மற்றும் எஸ்எஸ் பண்டாரி ஆகியோர் அடங்குவர். (ஆதாரம்: பாசு, தத்தா, சர்க்கார் மற்றும் சென், காக்கி அரைக் காலா டைகள்: காவிக்கொடிகள் 1993, ப, 48)

1977இல் ஜன சங்கம் ஜனதா கட்சியுடன் இணைந்தது. இந்திராகாந்தி கொண்டு வந்த அவசரநிலை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அமைந்த மத்திய அரசாங்கத்தில் அதன் தலைவர்களும் அமைச்சர்களானார்கள். இந்த அமைச்சர்கள் மற்றும் இவ்வியக்கத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திலிருந்து வெளியேற மறுத்ததாலும், தங்கள் ‘இரட்டை உறுப்பினர் பதிவு’ பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைக்க மறுத்ததாலும், ஜனதா அரசாங்கம் கவிழ்ந்தது.  அதன் பின்னர் ஜனதாகட்சியுடன் இணைந்திருந்த முந்தைய ஜன சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தனியே வந்து பாரதிய ஜனதா கட்சியை அமைத்தார்கள். இவ்வாறுதான் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் அரசியல் அங்கமாகவழுவாது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  இது இப்போது மிகவும் தெளிவாகி விட்டது.

2014 தேர்தலின் போது பாஜக மக்களுக்கு அளித்திட்ட பல வாக்குறுதிகளையும் அமல்படுத்துவதற்குப் பதிலாக, மோடி அரசாங்கம் ஆர்எஸ் எஸ் இயக்கத்தின் நிகழ்ச்சி நிரல் ஒன்றை மட்டுமே முன்னெடுத்துச் செல்ல தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வாறு செய்வதற்கான கட்டளையை அது மக்களிடமிருந்து பெறவில்லை. புதியசாலை அல்லது புதிதாகப் பெயர் வைக்க வேண்டிய இடங்களில், ஒளரங்கசீப் சாலையை, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் நினைவைப் போற்றுவதற்காக மாற்றி இருக்கிறது. இதன் பின்னால் உள்ள மதவெறி நோக்கம் மிகவும் தெளிவானது.  மற்றவர்கள் பெயரை மாற்றினால் எதிர்ப்புகள் எழலாம் என்று காத்திருந்து தங்களுடன் ஒத்துப்போன அப்துல் கலாம் பெயரை முஸ்லீம் பெயரை வைத்துள்ளனர்.

இந்தியாவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று யார் குரல் கொடுத்தாலும், உலக நாடுகள் பலவற்றில் மரண தண்டனைகள் கிடையாது, அந்த நாடுகளுடன் இந்தியாவும் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் அவ்வாறு கோரிய போதிலும் கூட, யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட பின்னணியில், அவ்வாறு கூறுவோர் அனைவரும் பாகிஸ்தானின் ஏஜெண்டுகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள்.

நாட்டிலுள்ள நீதிபரிபாலன அமைப்புகள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்றும், பாபர் மசூதி தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, பம்பாயில் நடைபெற்ற வகுப்புவாதக் கலவரங்களில் ஈடுபட்ட கயவர்கள் மீது, ஸ்ரீகிருஷ்ணா ஆணையம் அடையாளம் காட்டியபடி, விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருபவர்கள் எல்லாம் ‘தேச விரோதிகள்’ என முத்திரை
குத்தப்பட்டார்கள்.

முஸ்லிம் பிரச்சனை ஓர் இந்தியப் பிரச்சனை என்று நினைவு கூர்ந்து அற்புதமான முறையில் உரையாற்றியுள்ள நம் குடியரசுத் துணைத்தலைவர் அவ்வாறு பேசியமைக்காகக் குறி வைத்துத் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்.  நம் நாட்டின் மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 14 சதவீதமாகும். அதாவது 180 மில்லியன். (18 கோடி பேர்)

உலகில் இரண்டாவது பெரிய அளவிலானவர்களாக, நாட்டின் சிறுபான்மையினராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் நாட்டின் சுதந்திர இயக்கத்தின் போதும், இப்போது நவீன இந்தியாவிலும், முஸ்லிம்களில் பெரும்பான்மையானவர்கள் நாட்டின் பிரிக்க முடியாத அங்கமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த உரை, நம் அனைவரையுமே உள்ளாய்வு செய்து, செயல்படத் தூண்டியிருக்கிறது. குடியரசுத் துணைத் தலைவரைக் கடிந்து கொண்டிருப்பதன் மூலம், ஆர்எஸ்எஸ் இயக்கமானது, மீண்டும் ஒருமுறை, இந்தியாவின் மிக உயர்ந்த அளவிலான நாகரிகத்தின் வீரியத்தையே, குலைத்திடக்கூடிய விதத்தில் துளையிட்டுக் கொண்டிருக்கிறது.

பல மதங்கள் சங்கமித்த இந்திய நாகரிக வளர்ச்சி ஆர்எஸ்எஸ் பரிவாரத்தால் சீர்குலைக்கப்பட்டு வருகிறது. வளமான நம் நாகரிகத்தின் உள்ளடக்கம் பேணிப் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, அதனைத் தகர்க்கக்கூடிய விதத்தில் அனைத்து விதமான முயற்சிகளிலும் இன்றைய தினம் இவர்கள் இறங்கியிருக்கிறார்கள்.

ஒளரங்கசீப் அன்றைய தினம் அனைவராலும் ‘பாதுஷா’ என்று அன்புடன் அழைக்கப்பட்டு சிம்மாசனம் ஏறியவர். வகுப்புவாதம் இன்று மனிதகுல நாகரிகத்தில் உயர்ந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்த நாட்டை அவ்வாறு மேலே செல்லாமல் தடுத்து நிறுத்தி இருக்கிறது. பாஜக அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற மாபெரும் கயமைத்தனமாகும் இது.
ஆட்சியைப் பிடிப்பதற்காக அது மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளுக்குத் துரோகம் செய்திருப்பதைவிட மிகவும் மோசமான விஷயம் இதுவாகும்.

சீத்தாராம் யெச்சூரி .

நன்றி: தி இந்துஸ்தான் டைம்ஸ் (சுரன்), 8-9-15 தமிழில்: ச.வீரமணி.
ஆர்.எஸ்.எஸ் - பூர்வாசிரமம் அல்லது ஆபத்தின் அறிகுறி - சீத்தாராம் யெச்சூரி ஆர்.எஸ்.எஸ் - பூர்வாசிரமம் அல்லது ஆபத்தின் அறிகுறி - சீத்தாராம் யெச்சூரி Reviewed by நமதூர் செய்திகள் on 06:34:00 Rating: 5

No comments:

Powered by Blogger.