கோவன் கைது - தமிழக அரசுக்கு 5 கேள்விகள்!

கில இந்திய அளவில் அதிர்வலைகளை உருவாக்கி இருக்கிறது. "மூடு டாஸ்மாக்கை மூடு" என்ற அவரது முழக்கம் இன்று இந்திய அளவில் எங்கும் ஒலிக்கிறது. இந்த நிலையில் கோவனை கைது செய்திருக்கும் தமிழக அரசிடம் கேட்க நமக்கு 5 கேள்விகள் இருக்கின்றன.

1. கருத்துரிமை குற்றமா?

கோவன் கைது, கருத்துரிமை மீதான தாக்குதல். தங்கள் கருத்தை வெளியிடவும், அதை மக்கள் மத்தியில் பிரசாரம் செய்யவுமான உரிமை இந்தியக் குடிமகன்கள் அனைவருக்கும் உண்டு. இந்திய அரசியல் சாசனம் இந்த உரிமையை உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. கோவன் இதைத்தான் செய்தார். இது எப்படி குற்றமாக முடியும்? ஒரு கருத்தை வெளியிடக்கூட உரிமை இல்லாமல் போவது மாபெரும் ஜனநாயக விரோதம். சர்வாதிகாரிகள்தான் இப்படி  செய்வார்கள். தன் கருத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகாரத்தை ஜனநாயகத்தின் மீது திணிக்க முடியாது. இன்று கோவனுக்கு மறுக்கப்படும் கருத்துரிமை நாளை நம் ஒவ்வொருவருக்கும் மறுக்கப்படும். இப்போதே இணைந்து எதிர்க்கவில்லை என்றால், நாளை நம் ஒவ்வொருவருக்கும் இந்த ஆபத்து நீட்டிக்கப்படும்.

2. எது அரசின் கொள்கை? 

‘குடி குடியைக் கெடுக்கும் என்று பாட்டிலில் எழுதினால் தவறில்லை... பாட்டில் எழுதினால் தப்பா?’ என்று 

கேட்கிறார் கோவன் மனைவி ஜெயலட்சுமி. அந்த வார்த்தைகளில் சத்தியம் உள்ளது. மது விலக்குதான் அரசின் கொள்கை என்று அரசு சொல்கிறது. ‘மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை அமைச்சர்’ என்று ஓர் அமைச்சரே இருக்கிறார். அப்புறம் என்ன? அரசு என்ன சொல்கிறதோ அதைத்தானே கோவன் பாடினார்? அதில் என்ன பிழை இருக்கிறது? ஆனால், இதில் கவனிக்க வேண்டியது மதுவிலக்கு என்பது அரசின் கொள்கையாக இருக்கலாம். ஆனால் அது ஏட்டளவில்தான் இருக்கிறது. உண்மையில் மது விற்பனைதான் அரசின் கொள்கை என்பதை, ஒவ்வோர் ஆண்டும் இலக்கு நிர்ணயித்து சாராயம் விற்பதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். ஏட்டில் மதுவிலக்கு; நாட்டில் மதுவிற்பனை... இதுதான் அரசின் கொள்கை. இந்த இரட்டை வேடத்தை நாம் எதிர்க்க வேண்டாமா?

3. எது தேசத் துரோகம்?

கோவன் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், பின்னர் நீதிமன்றத்தில் அரசு அதை மழுப்புவது போல பதிலளித்திருக்கிறது. அதை சப்பைக்கட்டு போல வேறு சில வழக்குகள் அவர் மீது பாய்ச்சப்படலாம் என  தெரிகிறது. ஆக, ஆதார முகாந்திரம் இல்லாமல் உள்நோக்கத்துடன் கோவன் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்பது அப்பட்டமாகத்  தெரிகிறது. ’சாராயம் விற்காதே’ என்பது தேசத் துரோகமா? சொத்துக்குவிப்பு தேசபக்தி; நேர்மையான அதிகாரிகளை தற்கொலைக்கு தள்ளுவது தேசபக்தி, மணல் கொள்ளை; தாதுமணல் கொள்ளை; கிரானைட் கொள்ளை தேசபக்தி... டாஸ்மாக்கை மூடு என்பது தேசத் துரோகமா? அதிகாரம் மூலம் சாமானியனை அடக்கும் இந்த வழக்கை துணிவுடன் எதிர்த்து நிற்க வேண்டாமா?  

4. நள்ளிரவு கைது ஏன்?

நள்ளிரவு 2.30 மணிக்கு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கோவனை வீடு புகுந்து கைது செய்துள்ளனர். கதவுத் தட்டப்பட்டதும், மேலாடை இல்லாமல் கட்டிய கைலியுடன் வெளியில் வந்த கோவனை அப்படியே பின்னங்கழுத்தில் கை வைத்து தரதரவென இழுத்துச் சென்றுள்ளது போலீஸ். இப்படித்தான் யுவராஜை கைது செய்தீர்களா? சிவகங்கையில் சிறுமிகளை சீரழித்து போலீஸ் அதிகாரிகளை இப்படித்தான் கைது செய்தீர்களா? ஒரு  கோவில் ஊழியரின் அரசு ஊழியரின் மரணத்துக்குக் காரணம் என குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் ஓ.பி.எஸ்.ஸின் தம்பி, ஓ.பி.ராஜாவை இப்படித்தான் கைது செய்தீர்களா? முத்துக்குமாரசாமியின் கொலைக்கு காரணமானவர் என்று சொல்லப்படும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை இப்படித்தான் கைது செய்தீர்களா? அங்கெல்லாம் ’சட்ட விதி’களை மதித்த தமிழக போலீஸ், கோவன் விவகாரத்தில் மட்டும் வீறாப்பு காட்டுவது ஏன்?

5. மக்களில் ஒருவரை இப்படித்தான் நடத்துமா மக்கள் நல அரசு? 

கோவன் என்பவர் யாரோ ஒரு அரசியல் ஆர்வலர் அல்ல. அவர் டாஸ்மாக்கின் கொடுமையால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் பிரதிநிதி. மதுவுக்கு கணவனை; தந்தையை; தம்பியை பறிகொடுத்த பெண்களின் மனசாட்சி. வீதிக்கு வீதி முளைத்துக் கிடக்கும் டாஸ்மாக், நம் மாநிலத்தை கொள்ளைநோயாக பீடித்துக் கிடப்பதை அறிவிக்க வந்த உரிமைக்குரல். பெரும்பான்மை மக்களின் பிரச்னையை, எந்த தயக்கமும், பூச்சும் இல்லாமல் அப்பட்டமான வார்த்தைகளில் அவர் வெளிப்படுத்துகிறார். அதனால்தான் அவரது பாட்டு இத்தனை வீரியத்துடன் எல்லோரிடமும் சென்று சேருகிறது. எனவே கோவன் இனியும் யாரோ ஒருவர் அல்ல. அவர் நம்மில் ஒருவர். நம் சார்பாகவே அவர் பாடுகிறார்!

(  கோவன் கைதுக்கு நமது எதிர்ப்பை  #ReleaseKovan #BanTasmac   என்ற ஹேஷ்டேக் மூலம் பதிவு செய்வோம்!)  

- ஜீவா
http://www.vikatan.com/news/article.php?aid=54615
கோவன் கைது - தமிழக அரசுக்கு 5 கேள்விகள்! கோவன் கைது - தமிழக அரசுக்கு 5 கேள்விகள்! Reviewed by நமதூர் செய்திகள் on 00:00:00 Rating: 5

No comments:

Powered by Blogger.