முன்னேற்றம் என்ற பெயரில் 68 ஆண்டுகள் நாட்டை பின்னோக்கி தள்ளுகிறார் மோடி
புனே நகரில் அறிவுசார் சமூகத்தினர் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்திருந்த ‘பிரதிரோத்’ (Pratirodh-எதிர்ப்பு) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அறிவுஜீவிகள், சான்றோர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நாட்டில் பெருகிவரும் வன்முறையும், சகிப்புத்தன்மையின்மையும் பன்முகத்தன்மையை சீர்குலைத்து வருவதாக நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
இந்தி மொழி எழுத்தாளர் கிருஷ்ணா சோப்தி பேசும்போது, “கர்நாடக எழுத்தாளர் கல்புர்கி கடந்த செப்டம்பர் மாதம் கொலை செய்யப்பட்டார். அதற்கு பிரதமர் மவுனம் காத்தார். அதன் பிறகு தாத்ரி சம்பவம் நடந்தது. அதற்கும் பிரதமர் மவுனம் சாதித்தார்.
இந்நிலையில்தான் எழுத்தாளர்கள் போராட்டத்தை துவக்கினர். முதலில் பாபர் மசூதி தாக்குதல், அப்புறம் தாத்ரி வன்முறை இப்போது இந்துத்துவா போர்வையில் வீரத்தை பறைசாற்றுவதாக கூறி நடைபெறும் சம்பவங்களால் கருத்து சுதந்திரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது” என்றார்.
சாகித்ய அகாடமி விருதை திருப்பியளித்த எழுத்தாளர் பேசும்போது, “1940-களில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று விடுதலைக்காக நான் எழுப்பிய கோஷங்கள் இப்போது மீண்டும் என் நினைவுக்கு வருகிறது. இன்றும் விடுதலைக்கான கோஷம் உயிர்ப்புடனேயே இருக்கிறது. இன்று நாட்டில் சிறுபான்மையினர் நம்பிக்கை மீது சகிப்புத்தன்மை குறைந்துள்ளது. ஆனால், இது குறித்து கண்டுகொள்ளாத அரசு சிறுபான்மை சமூகத்தினரின் மக்கள் தொகை அதிகரித்துள்ளதை குறித்து அரசு கவலைப்பட்டு வருகிறது.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மக்கள் தொகை அதிகரிப்பதால் வேதனைப்படுபவர்கள் இந்த தேசத்தில் இந்துக்களே பெரும்பான்மை சமூகத்தினர் என்பதை ஏன் மறந்துவிடுகிறார்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.
பிரபல வரலாற்று ஆய்வாளர் ரோமிலா தாப்பர் பேசும்போது, “காங்கிரஸ் ஆட்சியின்போதும் நான் இரண்டு முறை விருதுகளை ஏற்க மறுத்திருக்கிறேன். அது தெரியாமல், எழுத்தாளர்கள் ஏன் இப்போது மட்டும் விருதுகளை திருப்பியளிக்கிறார்கள் என கேட்பவர்கள், எமர்ஜென்சியை எதிர்த்தும், சீக்கிய கலவரத்தைக் கண்டித்தும், சல்மான் ருஷ்டிக்கு விதிக்கப்பட்ட தடைக்கு கண்டனம் தெரிவித்தும் எழுத்தாளர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
அண்மையில், மும்பையில் மதச்சார்பின்மை குறித்த ஒரு கருத்தரங்கத்தில் பேசச் சென்றிருந்தேன். அந்த நிகழ்ச்சிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நாடு சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு நிலை முதன்முறையாக ஏற்பட்டுள்ளது. போலீஸ்காரர்கள், எங்கே என் முகத்தில் யாரும் மை வீசிவிடுவார்களோ என்ற கலக்கத்தில் இருந்தனர். மதச்சார்பின்மை குறித்து நான் பேசவிருந்ததால் அவர்களுக்கு அந்த அச்சம் ஏற்பட்டிருந்தது.
இத்தகைய சூழலில் மோடி ஸ்மார்ட் நகரங்களைப் பற்றியும், புல்லட் ரயில்கள் பற்றியும் பேசுவதை விடுத்து அடிப்படைத் தேவைகள் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது” என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப், “அறிவுசார் சமூகத்தைப் பொருத்த வரை, ஐ.எஸ்., ஆர்.எஸ்.எஸ்., – இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அனைவரும், நாட்டு மக்களின் கருத்து சுதந்திரமும், இறை நம்பிக்கை சார்ந்த சுதந்திரமும் பாதுகாக்கப்படுவதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
- See more at: http://www.thoothuonline.com/archives/75114#sthash.6IOWb2vD.dpuf
முன்னேற்றம் என்ற பெயரில் 68 ஆண்டுகள் நாட்டை பின்னோக்கி தள்ளுகிறார் மோடி
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:27:00
Rating:
No comments: