மாட்டிறைச்சி விருந்து: காவல்துறை அராஜகம்!
திருவண்ணாமலை(02 நவ. 2015): மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்த முனைந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தினர்மீது காவல்துறை தாக்குதல் நடத்தியதைப் புகைப்படம் எடுக்க முனைந்த பத்திரிகையாளர்களின் மொபைல் மற்றும் கேமராக்களைக் காவல்துறையினர் பறித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இப்போராட்டத்துக்குக் காவல்துறை அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வந்துள்ளது. அனுமதிக்காக காத்திராமல் நேற்று எழுத்தாளர்கள் தங்கள் போராட்டம் நடைபெறும் என அறிவித்து அண்ணா சிலையை நோக்கி முன்னேறினர்.
இவர்களைப் பெரியார் சிலை அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், அவ்விடத்திலேயே எழுத்தாளர்கள் அமர்ந்துகொண்டு மாட்டிறைச்சி விருந்து நடத்தினர். உடனே அவர்களைக் காவல்துறையினர் விரட்டியடிக்க முயன்றனர். இதனால் அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து எழுத்தாளர்கள் சிலர் காவல்துறையினரால் தாக்கப்பட்டனர்.
இக்காட்சிகளைப் புகைப்படம் எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களின் மொபைல் மற்றும் கேமராக்களைக் காவல்துறையினர் பறித்தனர். இதனால் பத்திரிகையாளர்களும் காவல்துறையினரின் செயலுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலபொதுச்செயலாளர் கருணா உட்பட சுமார் 100க்கு மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாட்டிறைச்சி விருந்து: காவல்துறை அராஜகம்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
01:56:00
Rating:
No comments: