சிறுபான்மையினருக்கு எதிரான அரசு: சரத்பவார்
மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எதிராகத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, மோடி அரசு சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படுகிறது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, ஜூன் 10ஆம் தேதி அவர் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மோடி தலைமையிலான மத்திய அரசு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் திட்டங்களையே தற்போது நடைமுறைக்குக் கொண்டு வருகிறது. புதிதாக ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக, ஆதார் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் போன்றவை கடந்த ஆட்சியின் திட்டங்கள் ஆகும். ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார், ஆனால், இன்றுவரை மோடி அரசு அதை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, மோடி கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் வெற்று வாக்குறுதிகளாகும். பிரதமர் மோடி வெளிநாட்டில் வழங்கிய உரையின்போது, தற்போது உலக அளவில் இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளதாகக் கூறினார்.
இவ்வாறு பேசுவதற்குமுன் அவர் ஒருங்கிணைந்த நாடுகள் வழங்கிய அறிக்கையைப் பார்த்திருக்க வேண்டும். அதில், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், பாஜக அரசு அதைத் தடுக்காமல் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்டாய மத மாற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மோடி அரசு சிறுபான்மையினருக்கு எதிரான அரசாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த மூன்றாண்டு பாஜக ஆட்சியில் விவசாயத்தில் போதிய வளர்ச்சி இல்லாததால் பொருளாதாரம் சரிந்துள்ளது. போதிய முதலீடு இல்லாததால் வேலைவாய்ப்பு எப்போதும் இல்லாத அளவுக்குக் குறைந்துவிட்டது. தற்போதைய அரசு வரவேற்பற்றதாகவும், மக்களின் அதிருப்தியையும் பெற்று வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினருக்கு எதிரான அரசு: சரத்பவார்
Reviewed by நமதூர் செய்திகள்
on
21:36:00
Rating:
No comments: