துப்புரவுத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் பாஜக அரசு: ரவிக்குமார்
பாஜக அரசு இந்த ஆண்டு பட்ஜெட்டில் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு மிகக் குறைவான நிதி ஒதுக்கி அவர்களை வஞ்சித்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் இன்று ஜூன் 17ஆம் தேதி விமர்சித்துள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜக மோடியின் பிம்பத்தை பிரம்மாண்டமாக முன்னிறுத்தி அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்து வெற்றி கண்டது. வெற்றிக்குப் பிறகு, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகளைக் கடந்த பின்னரும், தேர்தலின் போது பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மாறாக, பிரதமர் மோடி தொடங்கிவைத்த மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, போன்ற பல திட்டங்கள் தோல்வியையே தழுவியுள்ளன என்று பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றனர். இது மட்டுமில்லாமல், பாஜக அரசு, மதச் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளுக்கு எதிராக செயல்படுகிறது என்று அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் எழுத்தாளருமான ரவிக்குமார், தனது முகநூல் பக்கத்தில், இந்த ஆண்டு பட்ஜெட்டில் பாஜக அரசு துப்புரவுத் தொழிலாளர்களுக்கு வெறும் ரூ.5 கோடி மட்டுமே ஒதுக்கி அவர்களை வஞ்சித்துள்ளது என்று இன்று ஜூன் 17ஆம் தேதி விமர்சனம் செய்துள்ளார்.
எழுத்தாளர் ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில் துப்புரவுத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் பாஜக என்று குறிப்பிட்டிருப்பதாவது:
*துப்புரவுத் தொழிலாளர் மறுவாழ்வுக்கான நிதி ஒதுக்கீடு 2013-14ல் 557 கோடி, 2017-18 பட்ஜெட்டில் மோடி அரசு ஒதுக்கியிருப்பது வெறும் ரூ.5 கோடி.
* 2014-15 ல் பாஜக அரசு பட்ஜெட்டில் இதற்காக 439.04 கோடி ஒதுக்கி ரூ.47 கோடி மட்டுமே செலவு செய்தது.
* 2015-16 பட்ஜெட்டில் துப்புரவு தொழிலாளர் மறுவாழ்வுக்கு ரூ.470.19கோடி ஒதுக்கப்பட்டு ரூ.10.01 கோடி மட்டும்தான் செலவிடப்பட்டது.
* 2016-17 பட்ஜெட்டில் வெறும் ரூ.10 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அதிலும் ஒரே ஒரு கோடி ரூபாய் மட்டும்தான் செலவிடப்பட்டது.
இதை காங்கிரஸ் உள்ளிட்ட எந்தவொரு எதிர்கட்சியும் சுட்டிக்காட்டவோ எதிர்க்கவோ இல்லை என்பதுதான் மிகப்பெரிய அவலம். என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் ரவிக்குமார் எதிர்க்கட்சிகளின் மௌனத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளார்.
துப்புரவுத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் பாஜக அரசு: ரவிக்குமார்
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:26:00
Rating:
No comments: