ஜி.எஸ்.டி: கவலையில் மின்விசிறி உற்பத்தியாளர்கள்!
ஜி.எஸ்.டி.யில் மின்விசிறியை 12 சதவிகித வரிப் பட்டியலில் சேர்க்கும்படி மின்விசிறி உற்பத்தியாளர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. ஜூலை 1ஆம் தேதி முதல் அமலாகவுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஜி.எஸ்.டி.யில் மின்விசிறியை 28 சதவிகித வரிப் பட்டியலில் சேர்த்துள்ளதற்கு மின்விசிறி தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்திய மின்விசிறி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ரோகித் மத்தூர் பி.டி.ஐ. ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், ”மின்விசிறியை 12 சதவிகித வரிப் பட்டியலில் சேர்க்கும்படி அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகிறோம். மின்விசிறி என்பது அடிப்படைத் தேவைக்காக பயன்படுத்தப்படுவது. ஆடம்பர பொருள் அல்ல. ஆனால் மத்திய அரசு மின்விசிறி மற்றும் ஏர்- கண்டிசனர்களை ஒரே பட்டியலில், அதாவது 28 சதவிகித வரி பட்டியலில் சேர்த்துள்ளது. விலையுயர்ந்த மொபைல்போன்கள் கூட 12 சதவிகித வரிப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், மின்விசிறிக்கு 28 சதவிகித வரிப் பட்டியல்” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு மூலம் கலால் வரி இல்லாத வட கிழக்கு மாநிலங்கள், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம் போன்ற பகுதிகளில் உள்ள மின்விசிறி தொழிற்சாலைகளுக்கு 20 சதவிகிதமும், மற்ற பகுதிகளில் உள்ள மின்விசிறி தொழிற்சாலைகளுக்கு 26 சதவிகிதமும் வரிச் சுமை அதிகரிக்கும். மேலும், மின்விசிறிகளின் விலை 4 முதல் 5 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மின்விசிறி தொழிற்சாலைகளின் ஆண்டு மதிப்பு ரூ.9,000 கோடியாகும். அவற்றுள் முறைப்படுத்தப்பட்ட மின்விசிறி தொழிற்சாலைகளின் மதிப்பு ரூ. 6,000 கோடி ஆகும்.
ஜி.எஸ்.டி: கவலையில் மின்விசிறி உற்பத்தியாளர்கள்!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:16:00
Rating:
No comments: