மாட்டிறைச்சி விவகாரத்தால் பாதிக்கும் தோல் துறை!
மனிதர்களைவிட மாடுகள்தான் முக்கியம் என்று கருதும் ஓர் அரசு உலகில் உண்டென்றால் அது கட்டாயம் இந்திய ஒன்றியத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசு தான். அந்த அளவுக்கு இந்திய ஒன்றியத்தை ஆளும் பாரதிய ஜனதா அரசு மாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. பாரதிய ஜனதா ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக மாடுகளைக் காப்பதாகக்கூறி அத்துமீறல்கள் தற்போது வரை நடந்து கொண்டேதான் இருக்கின்றன.
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலம் தாத்ரி கிராமத்தில், மாட்டிறைச்சி உட்கொண்டதாகக் கூறி கடந்த ஆண்டு (2016) செப்டம்பர் மாதம் முகமது இக்லாக் என்பவரை ஒரு கும்பல் அடித்தே கொன்றது. குஜராத் மாநிலம் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உனா என்ற இடத்தில் கடந்த ஆண்டு (2016) ஜூலை மாதம் தலித் இளைஞர்கள் 4 பேர் பசுவைக் கொன்று அதன் தோலை எடுத்துச் சென்றதாகக் கூறி பசுவதை தடுப்பு ஆர்வலர்கள் என்ற பெயரில் ஒரு கும்பல் அந்த 4 இளைஞர்களையும் நடு வீதியில் நிற்கவைத்து சரமாரியாகத் தாக்கினர். அதை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் துணிச்சலோடு வெளியிட்டனர். கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து தமிழக கால்நடை பராமரிப்புத்துறைக்கு பசு மாடுகளை வாங்கிக்கொண்டு வரும்போது பசு பாதுகாப்புக் குழுவினர் என்ற பெயரில் வந்தவர்கள் வாகனத்தை இடைமறித்து வாகனங்களில் வந்த தமிழக அதிகாரிகளைச் சரமாரியாகத் தாக்கினர். இந்தப் பிரச்னை நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படிப்பட்ட வன்முறைச் செயல்களில் ஈடுபடும் பசு பாதுகாப்பு குழுவினர்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தான் பின்பற்றுகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதாவும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைத் தான் பின்பற்றுகிறது. இவர்கள் புதுப்புது சட்டங்களை உருவாக்கி மாட்டைக் காக்க முயல்கிறார்கள். அவர்கள் வன்முறைகளின் மூலம் காக்க முயல்கிறார்கள். செயல்கள் தான் வெவ்வேறாக உள்ளதே தவிர நோக்கம் ஒன்றாகத்தான் உள்ளது. இதை நிரூபிக்கும் வகையில்தான், கடந்த மே மாதம் 26ஆம் தேதி இந்திய ஒன்றிய அரசு பசு, காளை, எருது, ஒட்டகம், கன்றுகள் போன்றவற்றை இறைச்சிக்காகச் சந்தைகளில் விற்பனை செய்வதை தடை செய்தது. மேலும், வழிபாடுகளுக்காகப் பலியிடுவதையும் தடை செய்தது. இந்தத் தடை உத்தரவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்தது.
இந்தத் தடை உத்தரவால் இறைச்சி, கால்நடைகள் வளர்க்கும் விவசாயிகளுக்குப் பாதிப்பு, தோல் உற்பத்தி பாதிப்பு ஆகிய துறைகளில் பெருமளவில் பாதிப்பும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதில் தோல் உற்பத்தித்துறை என்பது பொருளாதார ரீதியாக மிகவும் பாதிப்படைந்துள்ளது. தோல் உற்பத்தி பாதிப்பு என்பது அவ்வளவு எளிதில் கடந்து சென்றுவிடக் கூடியதல்ல; காரணம், அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் இதைச் சார்ந்துள்ளது.
உலகளவில் தோல் பொருள் உற்பத்தியில் இந்தியா 12.93 சதவிகிதப் பங்கை கொண்டிருக்கிறது. சர்வதேச அளவில் காலணி மற்றும் தோல் ஆடைகள் உற்பத்தியில் 9 சதவிகிதப் பங்குடன் இரண்டாம் இடம் வகிக்கிறது. கடந்த 2016-17ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 4.72 பில்லியன் டாலர் அளவுக்கு இந்தியா தோல் பொருள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்துள்ளது. மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவுக்கு 15.69 சதவிகிதமும், ஜெர்மனிக்கு 11.82 சதவிகிதமும், இங்கிலாந்துக்கு 10.85 சதவிகிதமும், இத்தாலிக்கு 6.61 சதவிகிதமும், ஸ்பெயினுக்கு 5.27 சதவிகிதமும், ஹாங்காங்குக்கு 4.71 சதவிகிதமும், துபாய்க்கு 3.69 சதவிகிதமும், சீனாவுக்கு 3.16 சதவிகிதமும், நெதர்லாந்துக்கு 3.01 சதவிகிதமும், பெல்ஜியத்துக்கு 1.78 சதவிகிதமும், ஆஸ்திரேலியாவுக்கு 1.44 சதவிகிதமும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தோல் பொருள் ஏற்றுமதி சங்கத்தில் மட்டும் சுமார் 3,172 நிறுவனங்கள் இணைந்துள்ளன. இந்த நிறுவனங்கள் தோல் பொருள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது இந்தியாவின் ஒட்டுமொத்த தோல் பொருள் தயாரிப்புத்துறையின் சந்தை மதிப்பு 13 பில்லியன் டாலர்களாக உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த மதிப்பு 27 பில்லியன் டாலர்களாக உயரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது பாஜக அரசு கொண்டுவந்துள்ள தடையால் இது சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறியே!
தோல் பொருள் தயாரிப்புத்துறையில் நாடு முழுவதும் சுமார் 2.5 லட்சம் பேர் முறையான மற்றும் முறைசாரா வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பின்தங்கிய சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்த கால்நடைகளின் தோல்களை விற்பனை செய்யும் தொழிலில் மட்டும் சுமார் 8 லட்சம் தலித்துகள் வரை ஈடுபட்டுள்ளனர். மொத்தமாகப் பார்த்தால் ஒரு மில்லியன் பேர் இத்துறையைச் சார்ந்து வாழ்வை இயக்கிக் கொண்டிருக்கின்றனர். ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பால் இம்மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சந்தைகளில் இறைச்சிக்கான மாடு விற்கத் தடை என்ற அறிவிப்பால் நாட்டிலுள்ள பல்வேறு சந்தைகளில் மாடு விற்பனை கடுமையாகச் சரிந்துள்ளது. இதனால் இறைச்சிக்கும், தோலுக்கும் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. தோல் வரவு குறைந்துள்ளதால் தோல் ஆலைகள் இயங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதைச் சார்ந்து பணிபுரியும் தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டுத் தேவைக்கே தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற சூழலில் ஏற்றுமதி சாத்தியமற்றதாகிவிடும். மேலும் சில நிறுவனங்கள் பங்களாதேஷ் அல்லது வியட்நாம் போன்ற நாடுகளுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளன என்று தோல் ஏற்றுமதி சங்கத்தின் பிராந்திய தலைவர் ரமேஷ் ஜூனேஜா தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகிறார்.
மாட்டிறைச்சி என்பது உலகம் முழுவதும் பெரும்பாலான மக்களால் புரதச்சத்து மிக்க உணவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஒரு சாதாரண இறைச்சி உணவு. இந்தியாவில் மட்டும் மதத்தின் பெயரால் புனிதமாகக் கருதப்பட்டு மாட்டிறைச்சி உண்பதையே தீட்டாகக் கருதுவதும், மாட்டிறைச்சி உண்பவர்களைத் தீண்டத்தகாதவர்கள் போலச் சித்திரிப்பதும் நடந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை தலித்துகளும், முஸ்லிம்களும் தான் அதிகளவில் மாட்டிறைச்சி உண்கின்றனர். வட இந்தியாவைக் காட்டிலும், தென்னிந்தியாவில்தான் மாட்டிறைச்சி உண்போரின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது. குறிப்பாக கேரளாவில் பிரதான இறைச்சி உணவாக மாட்டிறைச்சி உணவு உள்ளது.
தமிழ்நாட்டிலும் பெரும்பாலான மக்கள் மாட்டிறைச்சி உண்கின்றனர். இந்து மதத்தின் மிகப்பெரிய சீர்திருத்தவாதியாகக் கருதப்படும் விவேகானந்தர், ‘நமது பழங்கால பழக்க வழக்கத்தின்படி மாட்டுக் கறியை சாப்பிடாதவன் நல்ல இந்து அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார் (ஆதாரம்: தொகுதி-3 - அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ‘ஷேக்ஸ்பியர் கிளப்பில்’ பிப்.2, 1900 அன்று ஆற்றிய உரை). இவர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு தலைவரின் கொள்கைக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறார்களா என்பது விவாதத்துக்குரியது.
பாரதிய ஜனதாவின் இப்படிப்பட்ட மாட்டிறைச்சிக் கொள்கை சமூக ரீதியில் மட்டுமின்றி பொருளாதார ரீதியிலும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. பெரும்பான்மை மக்களுக்குப் பாதிப்பை உண்டாக்கும் இப்படிப்பட்ட திணிப்புகள் ஜனநாயகத்தன்மையை கேலிக்கூத்தாக்கும் வகையில்தான் அமைந்துள்ளன. ஒட்டுமொத்த தோல் உற்பத்தித் துறையையும், அதைச் சார்ந்து இயங்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் மீட்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பதே தோல் பொருள் உற்பத்தியாளர்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
- பிரகாசு
மாட்டிறைச்சி விவகாரத்தால் பாதிக்கும் தோல் துறை!
Reviewed by நமதூர் செய்திகள்
on
22:06:00
Rating:
No comments: