ட்ரம்ப் மீது சி.என்.என். வழக்கு!
அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் வர நிருபருக்குத் தடை விதித்தது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் மற்றும் அதிபர் மாளிகை உதவியாளர்களுக்கு எதிராக சி.என்.என். ஊடகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
அமெரிக்க வெள்ளை மாளிகையில் கடந்த நவம்பர் 7 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, சி.என்.என். தொலைக்காட்சியின் நிருபர் ஜிம் அகோஸ்டா, மத்திய அமெரிக்க அகதிகள் தொடர்பாக ட்ரம்ப்பின் நிலை குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, “நீங்கள் சி.என்.என்.ஐ ஆட்சி செய்யுங்கள், என்னை நாட்டை ஆட்சி செய்யவிடுங்கள்” என்று ட்ரம்ப் பதிலளித்தார். எனினும், இந்த பதிலால் திருப்தி அடையாத ஜிம் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.
கேள்வி கேட்டது போதும் என்று ட்ரம்ப் அவரிடம் கூறினார். ஒருகட்டத்தில் மைக்கை ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு ஜிம்மிடம் அறிவுறுத்தப்பட்டது. அவர் அதற்கு மறுத்துத் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிப்பதற்கான அவரது அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே, ஜிம்மிடம் இருந்து மைக்கை பறிக்க முயன்ற பெண் ஒருவர் மீது அவர் கை வைத்ததாக வெள்ளை மாளிகை குற்றம் சாட்டியது. இச்சம்பவம் செய்தியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்மிற்கு ஊடகவியலாளர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர். ட்ரம்ப் தொடர்ந்து ஊடகவியலாளர்களை அவமதித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், தங்கள் நிருபருக்கு வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க மீண்டும் அனுமதி வழங்கக்கோரி சி.என்.என். ஊடகம் வழக்கு தொடர்ந்துள்ளது. வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிபர் ட்ரம்ப், தலைமை ஊழியர் ஜான் கெல்லி, பத்திரிகை செயலாளர் சாரா சாண்டர்ஸ், தகவல் தொடர்பு துணைத் தலைவர் பில் ஷைன் உட்பட 6 பேர் பிரதிவாதிகளாக மனுவில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு இன்று (நவம்பர் 14) விசாரணைக்கு வரவுள்ளது.
ட்ரம்ப் மீது சி.என்.என். வழக்கு!
Reviewed by நமதூர் செய்திகள்
on
03:10:00
Rating:
No comments: