Maravanatham
'தலித்துகள் வாழ்க்கைத் தரம் உயரவும், அவர்கள் மனிதர்களாக நடத்தப்படவும், வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் முன்னேற்றம் பெறவும், தலித்துகள் நிலவுடைமையாளர்களாக இருப்பது அவசியம்' என்று 1891 ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த திரமென்ஹீர் ஹெரே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
அதன்பிறகுதான் தலித்துகளின் நிலை பொதுவெளிகளில் அதிகம் பேசப்பட்டது. அவர்களும் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. அந்த அடிப்படையில் ஆங்கிலேய அரசு 1892 ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தில் இருக்கும் தலித் மக்களுக்கு 12 இலட்சம் ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது. அந்த நிலம்தான் பஞ்சமி நிலம் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அந்த நிலத்தின் பெரும்பகுதி தலித் மக்களுக்கு செல்லாமல் ஆக்கிரமிப்பில் சிக்குண்டுள்ளது. அந்த நிலத்திற்காக இன்றும் தலித்துகள் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். 
 
இந்திய நாட்டின் குடிமகன் என்பதற்கு சான்றுகளில் ஒன்று நிலம் வைத்துக்கொள்ளும் உரிமை. மற்ற சமூகங்களைப் போல் தலித் சமூகத்திற்கும் அந்த உரிமை இருக்கிறது. இதில் தலித் சமூகத்திற்கு மட்டும் தொடர்ந்து நில உரிமை தொடர்ந்து மறுக்கப்பட்டே வருகிறது. தமிழகத்தில் சுமார் 67% தலித்துகளிடம் நிலமே இல்லை என ஓர் ஆய்வு குறிப்பிடுகிறது. தலித் மக்கள் சமுதாயத்திலும், பொருளாதார ரீதியிலும், முன்னேற்றம் காண முடியாமல் நிற்பதற்கு காரணம் நில உரிமை மறுக்கப்பட்டு வருவதுதான்.
 
தலித் சமூகத்திடம் எப்போதும் நிலம் இருந்ததில்லை என்ற கருத்து இன்று மேலோங்கி இருக்கிறது. அது உண்மையல்ல. அவர்களும் நில உடைமையாளர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த நிலம் அவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டிருக்கிறது என்பதே நிதர்சனமானது. 'எங்களிடம் நிலம் இல்லை. ஏனென்றால் அவற்றை மற்றவர்கள் அபகரித்துவிட்டனர்' என்று  அண்ணல் அம்பேத்கர் அவற்றை முன்வைத்துதான் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழகத்தின் மக்கள் தொகையில் தலித்துகள் 20% பேர் இருக்கிறார்கள். ஆனால் தலித் மக்களின் பயன்பாட்டில் உள்ள நிலப்பரப்பு 7.1% மட்டுமே. (தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில் மட்டுமே தலித்துகளிடம் நிலங்கள் குறைவாக உள்ளன).
 
தலித்துகளின் இன்றைய அவலநிலைக்கு அடிப்படையான காரணமாக இருப்பது நிலமற்றவர்களாக அவர்கள் இருப்பதுதான். பஞ்சமி நிலம் மட்டுமல்லாது தமிழகத்தை ஆண்ட பல அரசுகளும் தலித் மக்களுக்கு நிலங்களை அளித்துள்ளன. (கேரளா, மேற்கு வங்கம் அளவிற்கு வழங்கப்படவில்லை என்பது வேறு). ஆனால் அது உரியவர்களிடம் சென்று சேரவில்லை. 
 
கீழான நிலைகளிலிருந்து மேழும்புவதற்காக பல்வேறு இடங்களில் தலித் மக்கள், இயக்கங்கள் நில உரிமை வேண்டி போராடி வருகிறது. அப்படிப்பட்ட ஒரு போராட்டத்தில் வெற்றி பெற்ற கிராமம்தான் மறவநத்தம்.
 
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் இருக்கிறது மறவநத்தம் கிராமம். இங்கு சுமார் 350 தலித் குடும்பங்களும், 200  சாதி இந்துக்களின் குடும்பங்களும் வாழ்ந்து வருகிறது. இந்த கிராமத்தில் நிலமில்லாத தலித் மக்களுக்கு அரசு வழங்கிய நிலத்தைத்தான் போராடி வென்றிருக்கிறார்கள் தலித்துகள். மறவநத்தத்தில் உள்ள அந்த சமூக மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். கூலி வேலை, பறையடிப்பது, விவசாயி கூலி வேலை செய்வது என்பதே அவர்களின் தொழில். படித்த பட்டதாரிகள் ஒற்றை இலக்கத்திலேயே இருக்கிறார்கள். அரசு வேலையில் இருப்பவர்களோ ஒன்றிரண்டு நபர்கள்தான். 
 
தங்களுக்கு தனியாக நிலம் இல்லாததால் ஒரே வீட்டிலேயே அண்ணன், தம்பி என அனைவரும் மனைவி மக்களுடன் வசிக்கும் அவலநிலையில் அவர்கள் இருக்கிறார்கள். கழிப்பிட வசதிகள்கூட இல்லாத நிலையே அங்கு நிலவுகிறது. இந்த கிராமத்தின் தலித் மக்களுக்கு 1997 ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் தருவதாக மாவட்ட அரசிதழில் வெளியிட்டது. அப்போதைய பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மறவநத்தம் கிராமத்தில் அரசு நிலம் இல்லாததால் அங்குள்ள 13 உடையார் சமூகத்தினரிடம் இருந்த நிலத்தை அப்போதைய மதிப்பில் இரண்டு மடங்காக விலை கொடுத்து வாங்கி அதை 130 தலித் குடும்பத்திற்கு கொடுக்க முடிவு செய்கிறார். ஆனால் முடியவில்லை சில காரணங்களால் இடம் ஒதுக்கியதோடு பணி நின்றுவிடுகிறது.
 
அந்த இடத்தில் பட்டா வாங்க தலித்துகள் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுக்கிறார்கள். அதிகாரிகள் தரப்பில் சரியான நடவடிக்கை இல்லாததால் சாதி இந்துக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். 1997 ம் ஆண்டிலிருந்து ஏழு ரெட் பெட்டிசன் உயர்நீதிமன்றத்தில் போடப்பட்டிருக்கின்றன. இதையறியாத அப்பாவி தலித் மக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்து முறையிடுகிறார்கள். அதிகாரிகளும் வழக்கு விபரங்களை எல்லாம் தெரிவிக்காமல் காலம் கடத்தியுள்ளனர்.
 
தொடர் நடவடிக்கையின் மூலம் ஒரு கட்டத்தில் 2005 ம் ஆண்டு பட்டா வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு மூன்று சென்ட் என்ற அடிப்படையில் வழங்குகிறார்கள். பட்டா வழங்கக்கூடாது என்று சாதி இந்துக்கள் தரப்பில் நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. அதிகாரிகள் பட்டா கொடுத்து விட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். இதற்கு எதிராக 2009 ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவை பெறுகிறது சாதி இந்துக்கள் தரப்பு. அதனால் மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் நிலத்தை அளந்து காட்டி மக்களிடம் ஒப்படைக்க மறுக்கிறார்கள். நீதிமன்றத்தின் தடை உத்தரவை அறியாத அப்பாவி மக்கள் தொடர்ந்து அதிகாரிகளை அணுகுகிறார்கள். 
 
இந்த பிரச்சனையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, அதன் நிர்வாகி கரு. அய்யம்பெருமாள் என்பவர் தலைமையில் தலையிடுகிறது.  'குடியேறும் போராட்டம்' என்று துண்டு அறிக்கையை முதலில் வெளியிடுகிறார்கள். உடனே பேச்சுவார்த்தைக்கு அழைத்த வேப்பந்தட்டை தாசில்தார் 'நீதிமன்றத்தின் தடை உத்தரவு இருக்கிறது. எங்களால் ஒன்றும் செய்ய முடியாது' என்று கூறுகின்றார். இப்போதுதான் அப்படியொரு தடை உத்தரவு இருப்பதே தலித் மக்களுக்கு தெரிகிறது. 
 
தலித்துகள் தரப்பில் கூடி பேசி தடை உத்தரவை நீக்குவதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் பிரபு (பெரியார் நேசன்) என்பவரை நியமிக்கிறார்கள். மனு தாக்கல் செய்யப்படுகிறது. நீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது 'தலித்துகள் வசதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இடம் வழங்கக்கூடாது' என்று சாதி இந்துக்கள் தரப்பில் கடுமையாக வாதிடப்படுகிறது. தலித்துகள் தரப்பில் ஆஜரான பிரபு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இரண்டு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி 'தடையை நீக்கியும், உடனே அந்த இடத்தை அளந்து காட்டி உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்' என்றும் தீர்ப்பு வழங்குகிறார். 
 
தீர்ப்பு வந்த பிறகும்கூட அதிகாரிகள் நிலத்தை அளந்து காட்ட மறுக்கிறார்கள். தலித்துகள் தரப்பில் அழுத்தம் தரவே அதிகாரிகள் சம்மதிக்கிறார்கள். மறுநாள் நிலத்தை அளக்க மறவநத்தத்திற்கு அதிகாரிகள் வந்தபோது சாதி இந்துக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தலித்துகளும் சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். இதனால் பதற்றம் ஏற்படுகிறது. பணி செய்யவிடாமல் அதிகாரிகளை தடுத்த சாதி இந்துக்களை கைது செய்கிறது காவல்துறை. தாசில்தாரும், சர்வேயரும் நிலத்தை அளந்து காட்டி உரியவர்களிடம் ஒப்படைக்கிறார்கள். அந்த மக்கள் தாமதிக்காமல் தங்கள் இடத்தில் தற்காலிக வீட்டை கட்டிக்கொள்கிறார்கள்.
 
இதற்கிடையில் சாதி இந்துக்கள் தரப்பில் இரண்டு நீதிபதிகள் அவையில் மேல்முறையீடு செய்யப்படுகிறது. தலித்துகள் தரப்பு, சாதி இந்துக்கள் தரப்பு, அரசு தரப்பு என மூன்று தரப்புகளிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து சாதி இந்துக்களின் மனுவை தள்ளுபடி செய்கிறது. இரண்டு வழக்கிலும் தலித்கள் தரப்பு சிறப்பாக வாதிட்டு தங்களுக்கான உரிமையை வென்று காட்டியுள்ளது.
 
அரசு வழங்கிய இந்த இடம் 6.63 ஏக்கர் ஆகும். ஒரு வீடு மூன்று சென்ட் வீதம் மொத்தம் 130 தலித் குடும்பத்திற்கு நிலங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்னமும்கூட அங்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் இருக்கிறது. மாவட்ட நிர்வாகம் இதற்கு உடனே வழிவகைகளை செய்ய வேண்டும். அரசு வழங்கிய இந்த இடம் சாதி இந்துக்கள் வாழும் பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்தது. ஊரும், சேரியும் இணைந்த கிராமமாக மறவநத்தம் தற்போது காட்சியளிக்கிறது. இதன்மூலம் அம்பேத்கர், பெரியாரின் கனவு நனவாகியுள்ளதாக அங்குள்ளவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். 
 
'மறவநத்தம் கிராமத்தில் சாதிய சண்டைகளோ, வன்மங்களோ இருந்தது இல்லை. ஒரு சிலர் மட்டுமே வன்மத்துடன் செயல்படுவதாக' அங்கிருந்த பெரியவர்கள் நம்மிடையே குறிப்பிட்டார்கள். இந்த ஒரு சிலரின் பின்னணியில் இந்துத்துவ அமைப்புகள் இருப்பதாக இந்த பிரச்சனையில் முன்னிருந்து செயல்படும் கரு. அய்யம்பெருமாள் தெரிவித்தார்.
 
ஆங்கிலேய அரசு தலித்துகளுக்கு வழங்கிய பஞ்சமி நிலமே இன்னும் முழுமையாக தலித்துகள் கையில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு வழங்கிய நிலத்தை பெறுவதற்கும் எளிய மக்கள் பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டி இருப்பது வேதனையானது. மறவநத்தம் கிராமத்தின் இருபது ஆண்டுகால மண்ணுரிமை போராட்டம் தொடர்ச்சியான சட்டப்போராட்டத்தின் மூலம் வென்றிருப்பது தலித்துகளுக்கும், மண்ணுரிமை போராட்டத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டிருப்பவர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் செய்தியாகும்.
 
- வி.களத்தூர் எம்.பாரூக்
நன்றி : கீற்று 
http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/36098-2018-11-17-05-12-18